Thursday 7 May 2015

புதிய நிருவாக உத்தியோகத்தராக நியமனம்

 பிரேம்...
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் வெற்றிடமாகக் காணப்பட்ட நிருவாக உத்தியோகத்தர் பதவிக்கு பிரதம முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றிய ஆறுமுகம் சசீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (07) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

முன்னர் நிருவாக உத்தியோகத்தராகப் பணியாற்றியிருந்த கே.எல்.ஏ.எம்.ரஹுமத்துல்லா அவர்கள் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் குறித்த பதவி வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டதுடன் தனது கடமைகளையும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அம்பாறை மாவட்டம் நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட 45 வயதுடைய ஆ.சசீந்திரன், தனது ஆரம்பக்கல்வியை நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்திலும் உயர்கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலும் கற்றதோடு, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது கலைமாணிப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்துள்ளார்.

1992 ஆம் ஆண்டில் திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பொது எழுதுனர் சேவைக்கு இணைக்கப்பட்டதிலிருந்து தனது அரச சேவையை ஆரம்பித்த இவர், 1993 ஆம் ஆண்டு கொழும்பு பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திலும், 1994 ஆம் ஆண்டில் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திலும் பொது எழுதுனராகப் பணியாற்றியுள்ளதுடன், 1996 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும், 2010 முதல் 2013 ஆம் ஆண்டு வரை திருக்கோவில் பிரதேச செயலகத்திலும், மீண்டும் கடந்த 2014, ஜனவரி மாதம் முதல் நிருவாக உத்தியோகத்தர் பதவிக்கு நியமிக்கப்படும்வரை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதம முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றியிருந்தார்.

சமயப்பணிகளில் தனக்கிருந்த மிகுந்த ஈடுபாடு காரணமாக நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்றத்தின் முன்னைநாள் தலைவராகவும், அறநெறிப் பாடசாலை அதிபராகவும், அம்பாறை மாவட்ட அறநெறிப் பாடசாலைகள் ஒன்றியத்தின் ஆரம்பகாலத் தலைவராகவும் கடமையாற்றியுள்ளதோடு தற்போதைய இணைப்பாளராகவும் பணியாற்றிவருகின்றார். அத்துடன் அக்கரைப்பற்று ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் பஜனைக்குழுத் தலைவரான இவர், இந்து ஆலயங்களில் பஜனை வழிபாடுகளைத் தொடர்ச்சியாக நடாத்திவருவதுடன், சமய சொற்பொழிவாளராகவும் இருந்துவருகின்றார். இந்தியா சென்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலைப் பயிற்சிநெறியைப் பூர்த்திசெய்து ‘யுவாச்சாரியார்’ பட்டம் பெற்ற இவர், இலங்கையின் இந்து சமய கலாசாரத் திணைக்களத்தினால் ‘இந்து பிரச்சாரகர்’ பட்டம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நீதியமைச்சினால் அம்பாறை மாவட்டத்திற்கான சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ள இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் இவரது பாரியார் திருமதி. ஸ்ரீரஞ்சனி சசீந்திரன் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments: