Monday 29 June 2015

விபத்தில் பெண் பலி

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அக்கரைப்பற்று வடிகான் வீதியைச் சேர்ந்த ஏ.எல். ஹயாத்துவீவி வயது (72) என்பவராவார்.
குறித்த வயோதிபப் பெண், அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியால் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மோதியதி விபத்;துக்குள்ளானதில் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த வயோதிப் பெண்ணை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்ததாகவும் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலிருநந்து தப்பிச் சென்றதாகவும் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சரணடைந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதையல் தோண்டியவர் கைது

அம்பாறை, மஹாஓயா பொலிஸ் பிரிவிலுள்ள நுவரகலதென்னவிலுள்ள வனப்பகுதியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த மூவரை கைது செய்துள்ளதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரகலதென்ன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை புதையல் தோண்டிக்கொண்டிருந்தபோதே  குறித்த நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று தெரிவித்த பொலிஸார்,  மாலபே பகுதியைச் சேர்ந்த மனம்பேரி ஜயவர்தன (வயது 36), கண்டி ஹதரலியத்தவை சேர்ந்த ஆர்.ஈ.எம். திலக் ருஷாந்த ராஜகருணா (வயது 41) மற்றும் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த கனத்த மானகே உபுல் சந்தன (வயது 43) என்றும் கூறினர்.
சந்தேக நபர்களை தெஹியத்கண்டிய நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

14 வயது சிறுமி மீது வன்புணர்வு


அட்டாளைச்சேனை-10 ஆம் பிரிவைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சந்தேகநபர், தலை மறைவாகியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நியைத்தில் சிறுமியின் தந்தை, ஞாயிற்றுக்கிழமை (28) முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தைக்கும் முதல் மனைவிக்கும் பிறந்தவனே, சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய், தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள நிலையில், சிறுமி தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மேற்படி சந்தேகநபர், ஏற்கனவே திருமணமானவர் எனவும் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Friday 26 June 2015

பெரிய உல்லை பகுதியில் விபத்து

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட பெரிய உல்லை பகுதியில் இன்று (26)வெள்ளிக்கிழமை  
சிறியரக டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில்  11பேர் காயமடந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவசர சிகிச்சைக்காக 6பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பாரை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன


அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் பிரதான வீதியூடாக  உகந்தை முருகன் ஆலயத்திற்கு ஆலையடிவேம்பைச்சேர்ந்த பக்த்தர்கள் சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிய வருகின்றது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Thursday 25 June 2015

போதைப்பொருள் வைத்திருந்த நபருக்கு 7,500 ரூபாய் அபராதம்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் விற்பனைக்காக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், நேற்று வியாழக்கிழமை (25) தீர்ப்பளித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸார்  புதன்கிழமை (24) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உ த்தரவிட்டார். 

சட்டவிரோதமாக கால்நடைகளை கடத்திய நால்வர் கைது

கார்த்தி
அம்பாறை, திருக்கோவிலில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரை நேற்று புதன்கிழமை (24) கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். 
திருக்கோவில் சாகாம பகுதியிலிருந்து அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு சட்டவிரோதமாக ஐந்து பசு மாடுகளை சிறியரக டிப்பர் வண்டியில் கொண்டு வந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, விரைந்து சென்ற பொலிஸார் திருக்கோவில் சகலகலை அம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் டிப்பர் வாகனத்தில் வந்த இருவர் உட்பட பாதுகாப்புக்காக மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் என நால்வரை கைது செய்தனர். 
இதேவேளை, மாடுகளை ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட சிறிரக டிப்பரையும் சந்தேகநபர்கள் இருவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Wednesday 24 June 2015

பொத்துவில் விபத்தில் ஒருவர் மரணம்

பொத்துவில், ரொட்டை  பிரதேச்ததில் நேற்று  செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற  விபத்தில் அக்கரைப்பற்று பதுர் நகரை சேர்ந்த ஜப்பார் நௌசாத் (வயது 35) மரணமடைந்துள்ளதுடன்,  மட்டக்களப்பைச் சேர்ந்த  மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
பொத்துவிலிலிருந்து  அக்கரைப்பற்று நோக்கி இவர் பயணித்த  மோட்டார் சைக்கிள்,  வேகக் கட்டுப்பாட்டை இழந்து  விபத்துக்குள்ளானதாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றார்.  
இந்த விபத்து  தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சகலகலை அம்மன் ஆலய பாட்குட பவனி

திருக்கோவில் சகலகலை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உட்சவதிருவிழாவின் பாட்குட பவனி இடம் பெற்றது 


 

Tuesday 23 June 2015

கடந்தகால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் நடமாடும்சேவை

கார்த்தி...
கடந்தகால  யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு  உயிர் மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்காக ஆவணங்களை ஒழுங்குபடுத்தி கோவைகளை பூரணப்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வு அதிகாரசபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச செயலகப் பிரிவுகளில்  25ஆம் 26ஆம் திகதிகளில் நடமாடும்சேவை நடத்தப்படவுள்ளது.


 நாளை வியாழக்கிழமை (25) 
பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான  நடமாடும்சேவை  திருக்கோவில் பிரதேச காலாசார மத்திய நிலையத்தில்  காலை 08 மணியிலிருந்து  மாலை 04 மணிவரை நடைபெறவுள்ளது.


நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (26) 
கல்முனை தமிழ்ப்பிரிவு, கல்முனை முஸ்லிம் பிரிவு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, நாவிதன்வெளி,  அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான நடமாடும்சேவை கல்முனை தமிழ்ப்; பிரதேச செயலகத்தில்  நடைபெறவுள்ளது.

இதன்போது,  சுமார் 800 பயனாளிகளுக்கு சேவைகளை  பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர் துஷித்த பி.வனிகசூரிய தெரிவித்தார். 

யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவும் சேவை மையம்

பிரேம்....

 இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிய உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று, இறக்காமம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உயிர் மற்றும் உடமை இழப்புகளுக்காக இதுகாலவரையில் வழங்கப்படாதுள்ள நட்டஈட்டுக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள ஆட்கள், சொத்துக்கள், கைத்தொழில்களைப் புனர்வாழ்வு அளிப்பதற்கான அதிகாரசபையினால் (Reppia) எதிர்வரும் வியாழக்கிழமை (25) திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடாத்தப்படவுள்ள நடமாடும் சேவை தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களைத் தெளிவுபடுத்தும் மற்றும் நட்டஈடுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆவணங்களையும் உதவிகளையும் வழங்கும் இரண்டுநாள் சேவை மையமானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுவருகின்றது.
 
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நேற்றும் (22) இன்றும் (23) இடம்பெறும் குறித்த சேவை மையத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளிலும் வசிக்கின்ற சுமார் 180 பொதுமக்கள் தமக்கான சேவைகளைப் பெற்றுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோருக்கு பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு இதுவரையிலும் மரணச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளாதோருக்கு அக்கரைப்பற்று பொலிசாரின் உதவியுடன் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு, காலங்கடந்த மரணப்பதிவுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 7 500/= ரூபாய் அபராதம்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு  7 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல்  திங்கட்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (21) கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதிபதி மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

Monday 22 June 2015

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு நான்காவது புதிய உபவேந்தர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு நான்காவது புதிய உபவேந்தராக இன்று தொடக்கம் செயற்படும் வண்ணம் பேராசிரியர் நாஜிம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார்,  (22) திங்கட்கிழமை தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக கடமையாற்றிய கலாநிதி எஸ்.எம். முகம்மது இஸ்மாயிலின் பதவிக்காலம் கடந்த 21ஆம் திகதியுடன் முடிவுற்றது. உபவேந்தர் தெரிவுக்காக கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில் கூடுதலான வாக்குகளைப் பெற்று முதலாமிடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் நாஜிமின் பெயர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிபாரிசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கமையவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உபவேந்தராக பேராசிரியர் நாஜிம் நியமிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் எச். அப்துல் சத்தார் மேலும் தெரிவித்தார். 1968ஆம் ஆண்டு பிறந்த உபவேந்தர் பேராசிரியர் நாஜிம் தனது உயர்கல்வியை பேராதனை பல்கலைக்கழககத்தில் கற்று தேறியதோடு தாய்லாந்து, மலேசியா, சீனா போன்ற பல்கலைக்கழகங்களிலும் கற்று 50ற்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வரங்குகளில் தமது கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். உலகின் தலைசிறந்த ஆய்வுகளில் 20ற்கு மேற்பட்ட கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளதோடு பல தடவைகள் தனது ஆய்வுக் கட்டுரைகளுக்கு ஜனாதிபதி வருதும் பெற்றுள்ளார். மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 10 வருடங்களுக்கு மேல் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/148906#sthash.i7gEn6gF.dpuf

முகுது மகா விகாரை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறக்கப்பட்டது.

பொத்துவில் பிரதேசத்திலுள்ள முகுது மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 60 அடி உயரமான பௌத்த கோபுரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறக்கப்பட்டது.






இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே, ஜனாதிபதியின் புதல்வர் தகம் சிறிசேன உள்ளிட்ட பலர் திறக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே, ஜனாதிபதியின் புதல்வர் தகம் சிறிசேன உள்ளிட்ட பலர் திறக்கப்பட்டன.

அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்படும்

அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்படும் என  கிழக்கு மாகாணசபை சபாநாயகர் ஏ.பி.சந்திரதாச கலப்பதி உறுதியளித்தார்.





 அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பினருக்கும் கிழக்கு மாகாணசபை சபாநாயகருக்கும் இடையிலாக இன்று (21) ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற  சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் அ.அரிகரன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் அதிகளாவான தமிழ் பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

சபாநாயகர் அங்கு உரையாற்றுகையில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்பே நாட்டில் சுமூகமான நிலை ஏற்படுத்தப்பட்டது. அதனூடாக நாட்டில் ஜனநாயகம் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. இருந்த போதிலும் 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் சிறந்த ஸ்திரமான நிலையில் இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆகவே எதிர்வரும் காலத்தில் சிறந்த நிலையான நேர்மையான அரசை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

மேலும் கடந்த காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் ஒருவரே இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அவர் கல்வியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து தொழில் வாய்ப்புக்களை உருவாக்கியவர். எதிர்காலத்தில் 10இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்;கும் திட்டத்தினையும் வகுத்து வருகின்றார். ஆகவே அதனூடாக உங்களது பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும் என்றார்.

சமகாலத்தில் கல்விக்கல்லூரி செல்கின்றவர்கள் கல்வியை நிறைவு செய்து வெளியேறுகின்போதே தொழில் வாய்ப்பினை பெறுகின்றனர். ஆனால் பல்கலைகழகம் செல்கின்றவர்கள் 4வருடங்கள் கடந்தும் தொழில் வாய்ப்பின்றி வீடுகளில் முடங்கி கிடப்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்றார்.

ஆகவே தமிழ் பட்டதாரிகளின் நிலை குறித்து முதலில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேசப்படும். அதற்கும் தகுந்த சாதகமான பதில் கிடைக்காதவிடத்து ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்றுத்தருவற்கு ஆவன செய்வேன் என்றார்.

இச்சந்திப்பின்போது அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் கடந்த பல வருடங்களாக எதிர்நோக்கிவருகின்ற வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றி  பட்டதாரிகள் அமைப்பின் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களால் சபாநாயகருக்கு தெளிவு படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் தேர்தலுக்கு முன் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனும் கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

இங்கு உரையாற்றிய அமைப்பின் செயலாளர் பா.தட்சாயனண் குறிப்பிடுகையில் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ் தலைமைகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் மக்கள் நலன் சாராமல் செயற்படும் அவர்களை தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறினார்.

Saturday 20 June 2015

கிழக்கு சபாநாயகர் - அம்பாறை, தமிழ் பட்டதாரிகள் சந்திப்பு

 வி.சுகிர்தகுமார்


அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பினருக்கும் கிழக்கு மாகாணசபை சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பு ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமை (21) காலை நடைபெறவுள்ளதாக பட்டதாரிகள் அமைப்பின் உறுப்பினர் மா.திலீபன் தெரிவித்தார். 

அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் அ.அரிகரன் தலைமையில் நடைபெறும் சந்திப்பில், கிழக்கு மாகாணசபை சபாநாயகர் சந்திரதாஸ கலப்பதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இச்சந்திப்பின்போது அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் கடந்த பல வருடங்களாக எதிர்நோக்கிவருகின்ற வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்படவுள்ளதாக உறுப்பினர் மா.திலீபன் தெரிவித்தார். மேலும் இக்கலந்துரையாடலின் பின்னர் சபாநாயகர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் அதன் மூலம் தங்களது கோரிக்கைக்கான நியாயமாக தீர்வுகள் எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதன்போது 300க்கும் மேற்பட்ட தழிழ் பட்டதாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Friday 19 June 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சனிக்கிழமை (20) பொத்துவில் பிரதேசத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்துக்கான விஜயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை சனிக்கிழமை (20) காலை 10 மணிக்கு மேற்கொள்ளவுள்ளார்.    இங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி, பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்துக்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்ட முகுது மகா விகாரையை திறந்து வைக்கவுள்ளார்.   சுமார் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்விகாரைக்கான அடிக்கல்லினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நட்டு வைக்கப்பட்டிருந்தது.   ஜனாதிபதி வருகை தரும் இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே, நாடாளுமன்ற உறுப்பினர் பி.தயாரத்தின மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.   ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொத்துவில் பிரதேசதமெங்கும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளத

Thursday 18 June 2015

முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பாதுகாப்புத் தொடர்பான கலந்துரையாடல்

பிரேம்...


ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இயங்கிவரும் பாலர் பாடசாலைகளது கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்புக்குழுவின் முதலாவது உத்தியோகபூர்வக் கலந்துரையாடல் இன்று (18) காலை 9.00 மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஏற்பாடு செய்யப்பட்டு, பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிமனையின் உயரதிகாரிகள், ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆலையடிவேம்பு பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிகமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுவரும் விடயங்களான பாலர் பாடசாலைகளின் சுகாதாரமற்ற சூழல், கழிப்பிட வசதிகள், சிறார்களுக்கு வழங்கப்பட்டுவரும் உணவு, குடிநீர் போன்றவற்றை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் பரிசோதனைக்கு உட்படுத்தல், தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்து ஆங்கிலக் கல்வியை முதன்மைப்படுத்தி பெற்றோரிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் இலாப நோக்கோடு இயங்குகின்ற தனியார் பாடசாலைகளைக் கண்டறிந்து பொலிசாரின் உதவியுடன் அவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தல், பாடசாலைகளை ஆரம்பிக்கும் முடிவுறுத்தும் ஒரு ஸ்திரமான நேர அளவை நிர்ணயித்தல், பிரதேச செயலாளருக்கோ வலயக்கல்விப் பணிப்பளருக்கோ எவ்வித முன்னறிவித்தலும் வழங்காது பாடசாலைகளை மூடுதல், தனியார் அமைப்புக்களால் தேவையற்ற விதத்தில் ஆசிரியைகளைப் பொருந்தாத பயிற்சிகளுக்கு அழைத்தல் 


மற்றும் வழங்குதல், புறக்கிருத்தியச் செயற்பாடுகளுக்காக மாணவர்களின் பெற்றோரிடமிருந்து அதிக பணம் வசூலித்தல், முன்னனுமதி பெறப்படாத சுற்றுலாக்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதல் போன்ற பல விடயங்கள் அறிக்கையிடப்பட்டதுடன், குறித்த இணைப்புக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் கிரமமான அட்டவணை ஒன்றின் அடிப்படையில் ஒவ்வொரு பாலர் பாடசாலைக்கும் விஜயம் செய்து மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொண்டு அவற்றை சரிப்படுத்துவதற்கான வழிகாட்டல்களையும் உதவிகளையும் வழங்குதல் தொடர்பான தீர்மானங்கள் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கக்கூடிய சாத்தியம்

எஸ்.கார்த்திகேசு
புதிய தேர்தல் முறையில் தொகுதிகள் குறைக்கப்படுமிடத்து, பொத்துவில் தேர்தல் தொகுதியில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கக்கூடிய சாத்தியம் உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
புதிய தேர்தல் முறை தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தற்போது பொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அமைந்துள்ளது. புதிய தேர்தல் முறையில் தொகுதிகள் குறைக்கப்பட்டு ஒரு தேர்தல் தொகுதியாக கொண்டுவரப்படும்போது, தமிழர்களின் பிரதிநிதித்துவம் இழந்துபோகக்கூடிய சாத்தியம் ஏற்படலாம். இருப்பினும், இது தொடர்பில்  தீர்க்கமான முடிவை நாம் இப்போது கூறமுடியாதுள்ளது' என்றார்.
'புதிய தேர்தல் முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டுவரும்போது, அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்தும் பாதுகாக்கும் வகையில் எமது கட்சி நடவடிக்கைகளை எடுக்கும். மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்' என அவர் தெரிவித்தார்

சட்டவிரோத மின்சாரம் பெற்ற நால்வர் கைது

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம்; பெற்றதாகக் கூறப்படும் நால்வர் அக்கரைப்பற்று பொலிஸாரால்  செவ்வாய்க்கிழமை (16) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறையிலிருந்து வருகைதந்த மின்சார சபை உத்தியோகத்தர்களும்; அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதனையின்போது, மக்காமடி மற்றும் அலிகம்பை பிரதேசங்களை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டனர்.

Wednesday 17 June 2015

பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதல் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கோளாவில் பிரதேசத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கால்கள் உடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தி 25வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பாடசாலை விட்டுவந்த கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி மீது சைக்கிளை மோதியுள்ளார். இதனால் மாணவியின் காலின் முழங்கால் கீழ்ப்பகுதி உடைந்துள்ளது.
சம்வப இடத்தில் கூடிய பொதுமக்களின் உதவியோடு மாணவி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பாடசாலை ஆரம்பமாகும் நேரத்திலும் முடிவடையும் நேரத்திலும் வேகமாக பயணிக்கும் இளைஞர்களின் தொல்லை இப்பகுதியில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.
அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஏ.எம்.சரீப்டீன் (வயது 52) எனும் பொலிஸ் அதிகாரியே உயிரிழந்தவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு பொலஸ் நிலையத்தில் கடமையாற்றும் இவர், செவ்வாய்க்கிழமை (16) தனது கடமை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் வைத்து துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்துள்ளார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

6 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பகுதியில் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (16)மாலை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குறைபாடுகளை கொண்ட 6 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.
வாகன அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம், இலக்கத்தகடு இல்லாமை போன்ற காரணங்களினால் குறித்த சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீலின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.ஏ.கமகேயின் உத்தரவின் பேரில் போக்குவரத்து பொலிஸார் ஆங்காங்கே மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த 6 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சைக்கிள்களின் உரிமையாளர்களை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Tuesday 16 June 2015

போக்குவரத்து நடைமுறைகளை மீறும் வாகன சாரதிகள் மீது கடும் நடவடிக்கை

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நடைமுறைகளை மீறும் வாகன சாரதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல், இன்று செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.
மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டாம். வீதி சம்பந்தமான விளக்கக் குறியீடுகளை அவதானித்து வாகனங்களை செலுத்துங்கள். முச்சக்கர வண்டி சாரதிகள் பாடசாலை பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் போது, அதிகமான பிள்ளைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம். பாத சாரிகள் வீதியைக் கடக்கும் போது அருகிலுள்ள மஞ்சள் கோட்டு வீதிக் கடவையில் கடவுங்கள் எனவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் கேட்டுக்கொண்டார். 

சாரதி அனுமதிப்பத்திரம் இலவ்லாதவர்களிடம் மோட்டார் சைக்கிள்களை ஓடக் கொடுக்க வேண்டாம். அத்துடன், மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள் ஒருபக்கம் காலை வைத்து கொண்டு செல்லாமல் இரண்டு பக்கமும் காலை வைத்துக்கொண்டு செல்ல வேண்டும். உள்வீதிகள் காபட், கொங்கிறீட் வீதி போடப்பட்டுள்ளதால் உள்வீதி என்று நினைத்துக் கொண்டு பாதுகாப்பு தலை கவசமில்லலாமல் செல்ல வேண்டாம். உள்வீதியில் தான் அதிகமான விபத்துக்கள் ஏற்படும் மரணங்களும் ஏற்பட்டுள்ளது

.மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியின் மேல் இருத்தி பிள்ளைகளை கொண்டு செல்பவர்கள் மீதும் பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் செல்பவர் மீதும் இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேவையற்ற வகையில் வாகன விபத்துக்களினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்தவதற்கு பொதுமக்களும் சாரதிகளும் சட்ட திட்டங்களை கடைபிடிக்கமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் மேலும் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பில் பாதிப்புற்ற மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு

பிரேம்...
அரசசார்பற்ற சர்வதேச தொண்டு நிறுவனமான ஹண்டிகப் இன்டர்நேஷனல் நிறுவனத்தினால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாத பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிகவும் பாதிக்கப்பட்ட சுமார் 800 குடும்பங்களை குறித்த வெள்ள அனர்த்தத்துக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவரும் உடனடி செயற்திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான செயலகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 7 குடும்பங்களுக்கு முதலாம்கட்டப் பணக்கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு இன்று (16) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஹண்டிகப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அனர்த்த அபாயங்களைக் குறைக்கும் குறித்த செயற்திட்டத்தின் முகாமையாளரான ஷரண்யா ரவிகுமார் தலைமையிலான உத்தியோகத்தர்களின் பிரசன்னத்துடன் இடம்பெற்ற இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.தனராஜன், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினரால் தெரிவுசெய்யப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கு உணவுக் கொள்வனவுக்கான முதலாங்கட்ட நிதியுதவிகள் பிரதேச செயலாளரால் வழங்கிவைக்கப்பட்டன. மேலும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு இவ்வாறான இரண்டு கொடுப்பனவுகள் குறித்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், இச்செயற்திட்டத்திற்கான பின்தொடர் நடவடிக்கைகளில் ஹண்டிகப் நிறுவனத்துடன் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday 15 June 2015

இடி மின்னல் தாக்கத்தினால் பொத்துவில் மணற்சேனையில் ஒருவர் உயிரிழப்பு

குணசீலன் நிலோஷ்

இடி மின்னல் தாக்கத்தினால் பொத்துவில் மணற்சேனையில் ஒருவர் உயிரிழப்பு


(15) பிற்பகல்  இடம்பெற்ற இடிமின்னல் தாக்கத்தினால் பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணற்சேனை அம்மன் ஆலயத்திற்கு அருகில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த நபர் மின்னல் தாக்கத்தினால் உயிரிளந்துள்ளார்

பொத்துவில் மணற்சேனை கிராமத்தை சேர்ந்த ஜந்து பிள்ளைகளின் தந்தையான 50வயதுடைய சுதாகரன் என்பவரே மரணமடைந்துள்ளார்.

(15) பிற்பகல் பலத்த இடியுடன் கூடிய மழை அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெய்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

மர்ஸ் வைரஸ் இலங்கையில் பரவுவதனைத் தடுக்க விசேட நடவடிக்கை

மத்திய கிழக்கு நாடுகளிலும், தென்கொரியாவிலும் பரவிவரும் மர்ஸ் வைரஸ் தொற்று இலங்கையில் பரவுவதனைத் தடுக்க விசேட நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வருகைதரும் நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சின் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் எல்.பீ.எச் தெனுவர தெரிவித்தார்.
நோய்வாய்ப்பட்டு திரும்புவோருக்கு ஐ.டி.எச் போன்ற சில வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மர்ஸ் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் பரவாமலிருக்கும் வண்ணம் முன்னாயத்த பாதுகாப்பு திட்டங்களை வகுக்க தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு பௌசர் மூலம் நீர் விநியோகம்

பொத்துவில் நீர்வழங்கல் காரியாலயத்திற்குச் சொந்தமாக ஹெட ஓயா அருகில் உள்ள நீர் பெறும் கிணறுகளில் 03 கிணறுகள் பழதடைந்ததன் காரணமாக அடிக்கடி தினமும் அறிவித்திலின்றியே நீர் வெட்டு இடம்பெறுகின்றது.
அந்த வகையில் பொத்துவில் வைத்தியசாலையில் உள்ள நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியிருந்தனர். இதனை அறிந்த பொத்துவில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தீவிரமாக செயற்பட்டு நோயாளிகளின் இன்னலை நிவர்த்திக்கும் முகமாக பௌசர் மூலம் நீரைப் பெற்று விநியோகித்து வருகின்றனர்.

வாக்காளர் விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் கிராம உத்தியோகத்தரை அணுகுக..

வாக்காளர் இடாப்பில் பதிவதற்கான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் அல்லது விசேட கணக்கெடுப்பாளர் அதிகாரியை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த நாட்களில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
இவ்வருடத்துக்குரிய விண்ணப்பப் படிவங்கள் யாவும் கிராம உத்தியோகத்தர் மற்றும் விசேட கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அனுமானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய தங்களுக்குரிய கிராம உத்தியோகத்தர் அல்லது அந்தப் பகுதிக்கு பொறுப்பான விசேட கணக்கெடுப்பு அதிகாரியிடம் விண்ணப் படிவங்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கூறினார்.
குறித்த விண்ணப்பப்படிவம் கிடைத்தவர்கள் தகவல்களைப் பூர்த்திசெய்து கிராம உத்தியோகத்தர் அல்லது. விசேட கணக்கெடுப்பு அதிகாரியிடம் அதனை கையளிக்குமாறும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தினார்.

Sunday 14 June 2015

விபத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில்..

அம்பாறை - அக்கரைப்பற்று பிரதான வீதியில்  ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானததால், காயமடைந்த இருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Saturday 13 June 2015

யானையின் தாக்குதலுக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில்

    அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிக்கம்பை வயல்  பிரதேசத்தில் வைத்து யானையின் தாக்குதலுக்குள்ளான  ஒருவர் சிகிச்சைக்காக இன்று(13) காலை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளானவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 57வயதுடையவர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

வயலுக்கு சென்றுவரும் போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளானவரின் துவிச்சக்கரவண்டி யானையினால் சுக்குநூறாக  சேதமாக்கப்பட்டுள்ளது

Friday 12 June 2015

அம்பாறை திருக்கோவில்-விநாயகபுரம் மகாவித்தியலய கணினி ஆய்வு கூடம் தீயில் எரிந்து நாசம்


கார்த்திகேசு, 
நிலொச் ,
 அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் கல்வி வலத்தில் உள்ள விநாயகபுரம் மகாவித்தியாலயத்தின் கணினி ஆய்வு கூடம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்று விரைந்த திருக்கோவில் பொலிசார் திருக்கோவில் மின்சார சபையினர்  மற்றம் திருக்கோவில் பிரதேச சபையினர்   பொது மக்களின் ஒத்துழைப்புடன் இரானுவத்தினரும் இனைந்து தீப்பரவலை  கட்டுப்படுத்தியதுடன், ஆய்வு கூடத்தில் இருந்து கணினிகளையும் பொருட்களையும் அப்புறப்படுத்தியுள்ளனர்

இத்  தீயினால் சுமார்  35க்கு மேற்பட்ட கணினிகள் மற்றம் அதன் பகுதிகப் பொருட்கள் தீயில் எறிந்து நாசமாகியதாகவும், மேல் தளத்தில் இரண்டு அறைகள் முற்றாக தீயில் கருகி நாசமாகியுள்ளது.

இவ் அனர்த்தம் சம்மந்தமான ஆரம்ப விசாரனைகளின் போது  மின் ஒழுக்கு காரணமாக தீப் பற்றி இருக்கலாம் என தெரிவிக்கப்படுவதுடன் மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.