Wednesday 11 July 2018

ஆற்றல் கல்விக் கண்காட்சி


(அரசூர் மாறன்)

சிவாநந்தா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவும் சிவாநந்தா பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த ஆற்றல் கல்விக் கண்காட்சி
இன்று பிற்பகல் 5.00 மணியுடன் நிறைவு பெற்றது.

மாணவர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்ட கைவினை மற்றும் கைப்பணிப் பொருட்களாலும் மாணவர்களுக்கான  பயன் தரு காட்சிப் பொருட்களாலும் நிறையப்பெற்ற கண்காட்சிக் கூடத்தை சுமார் 5000 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பார்வையிட்டுச் சென்றமை ஏற்பாட்டாளர்களின் உயரிய நோக்கிற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். 

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட 33 பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காட்சியினை கண்டுகளிக்க வருகை தந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

சுமார் ஒரு தசாப்த காலத்திற்கு பிறகு சிவாநந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற மகத்தான நிகழ்வாக வரலாற்றை பதிவு செய்துள்ளது ஆற்றல் கல்விக் கண்காட்சி.

பாடசாலை அதிபர் திருவாளர் ரி.யசோதரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு பாடசாலையின் பெயரை பல வழிகளிலும் உயர்தியுள்ளமை பாராட்டப்படவேண்டிய விடயம்.

சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திருவாளர் முருகவேள், தேர்வுத் தலைவர் பொறியியலாளர் மங்களேஸ்வரன் மற்றும் உறுப்பினர்களின் இரவு பகல் பாராத கடும் உழைப்பும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து மேற்கொண்ட திட்டமிடலும் நிகழ்வின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தமை பலராலும் பாராட்டப்பட்டது. 

ஆரம்பப் பிரிவிற்கான பகுதித் தலைவர் திரு.நாகநாதனின் அர்பணிப்பும் சக ஆசிரியர்ளுடன் இணைந்து மேற்கொண்ட ஒழுங்கமைப்பும் கண்காட்சியின் வெற்றிக்கு பிரதான பங்களிப்பாக விளங்கியிருந்தமை கண்கூடு. மேலும், குறிப்பிடத்தக்க பெற்றோர்களின் ஆர்வமும் ஈடுபாடும் ஒருங்கே சேர கண்காட்சி அதன் இலக்கை அடைந்து இன்று பி.ப.5.00 மணியுடன் நிறைவுற்றது. 

திருவாளர் ஐங்கரன் தலைமையிலான பழைய மாணவ சாரணர் படையணியினரின் பாசறைக் கட்டமைப்பு கண்காட்சிக் கூடத்திற்கு வலுச்சேர்த்ததோடு சாரணியத்தின் மீது மாணவர்களை ஊக்குவிப்பதற்கான பொறிமுறையையும் கொண்டமைந்தமை சிந்திக்கத் தக்கது. 

"ஆற்றல்" எனும் அருமையான தொனிப்பொருளில் அமையப்பெற்ற கண்காட்சி ஒழுங்கமைப்பானது சமூகத்திற்கு பல்வேறுபட்ட படிப்பினைகளை போதிப்பதாய் அமைந்திருந்ததோடு தற்காலத்திற்கேற்ற நிகழ்ச்சி முகாமைத்துவ செயற்பாட்டிற்கு முன்னுதாரணமாய் அமைந்தமையும் கவனிக்கற்பாலது.  குறிப்பாக,

பாடசாலைக்கு வெளியில் இருக்கின்ற மனித வளப் பயன்பாட்டை பாடசாலையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டிற்கு உகந்ததாய் மாற்றி திட்ட இலக்கை அடைகின்ற முகாமைத்துவத் திறனை பறைசாற்றி நிற்கின்றது. 

பாடசாலையும் பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஒரு நிகழ்வை எவ்வாறு வெற்றிகரமாக ஒழுங்கமைக்கலாம் என்பதற்கு சிறந்த முன்மாதிரியாக இந் நிகழ்வைப் பார்க்கலாம்.

ஒரு பாடசாலை பழைய மாணவர் சங்கம் வெறுமனே அனுசரணையாளராக மாத்திரம் அல்லாது எவ்வாறு தாங்களும் பங்குதாரரராக இருந்து பாடசாலை முன்னேற்றச் செயற்பாடுகளில் பங்குபற்றலாம் என்ற முற்போக்குக் கருத்தூட்டல்களை வலுவடையச் செய்துள்ளமையும் கண்கூடு. இது அபிவிருத்தியடைந்த நாடுகளில் இருக்கின்ற பாடசாலை முன்னேற்றத் திட்டங்களோடு  ஒத்துப்போகின்றமை அவதானிக்கப்படவேண்டியது. 

பொதுப்படையில், மகத்தான நிகழ்வாக பாடசாலை அதிபர் திருவாளர் ரி.யசோதரன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வு அதன் உயரிய நோக்கின் வெற்றியோடு இனிதே நிறைவடைந்தது.























சிவாநந்தாவை சிகரம் தொட வைத்த கல்விக் கண்காட்சி வெற்றிக் களிப்புடன் நிறைவடைந்தது. Rating: 4.5 Diposkan Oleh: Batticaloa information
haran

No comments: