Thursday 29 May 2014

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கான இவ்வாண்டின் இரண்டாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான பி.எச்.பியசேன தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் கடந்த 26-05-2014, திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்பைவின் இணைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஆகியோருடன் ஆலையடிவேம்பு பிரதேச பொதுத்துறை ஸ்தாபனங்கள் மற்றும் கிராமமட்ட அபிவிருத்திக்குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்ட இக்கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் வரவேற்புரையுடன் ஆரம்பானதோடு, பிரதேச அபிவிருத்தி குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பான விளக்கங்கள் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.திலகராணி கிருபைராஜாவினால் வழங்கப்பட்டன.

அதனையடுத்து இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கடந்தகால நிதியொதுக்கீடுகள் தொடர்பில் உண்டான குறை நிறைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

எஸ்.ரி.ஏ சொலிடரிட்டி பவுண்டேசன் அமைப்பின் நிதி உதவியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் கோளாவில் கிராமத்திலுள்ள அம்மன் சமுக அபிவிருத்தி நிறுவனத்தினூடாக தேசிய பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (NAITA) கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்ட தையல் மற்றும் முன்பள்ளிக் கற்பித்தல் பயிற்சிகளைப் பூரணமாக நிறைவுசெய்த பெண் பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எஸ்.ரி.ஏ சொலிடரிட்டி பவுண்டேசன் அமைப்பின் திட்டப்பணிப்பாளர் வி.வாமதேவன் தலைமையில் கோளாவில், சாகாம வீதியிலுள்ள அம்மன் மகளிர் இல்லத்தில் நேற்று, 12-05-2014 திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், அக்கரைப்பற்று நன்னடத்தை அலகுக் காரியாலய தலைமை உத்தியோகத்தர் எம்.ஏ.ஏ.வசூர்தீன், தேசிய பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மாவட்ட அலுவலகப் பரிசோதகர் கே.பத்மநாதன், பிரதேச செயலாளரது வெகுஜன தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் வி.திவ்வியமூர்த்தி, சிறுவர் நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.ஏ.வஸீம், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், ஆசிரியர் எஸ்.மணிவண்ணன் ஆகியோருடன் அம்மன் மகளிர் இல்ல முகாமையாளர், பயிலுனர்கள் மற்றும் இல்லப் பிள்ளைகளும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின்போது ஒருவருட தையல் பயிற்சியைப் பூர்த்திசெய்த 26 யுவதிகளுக்கும், முன்பள்ளி கற்பித்தல் பயிற்சியை பூர்த்தி செய்த 5 யுவதிகளுக்கும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் குறித்த மகளிர் இல்ல மாணவிகளின் கலை, கலாசார, நடன வைபவங்களும் இடம்பெற்றன.

மேலும் இந்நிகழ்வோடிணைந்தவகையில் அம்மன் மகளிர் இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு, உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள புவிதா என்ற மாணவிக்கு அவரது கல்வியைத் தொடர்வதற்கான வங்கி வைப்பும், பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் க.பொ.த.(சா/த) பரீட்சையில் சித்தியடைந்த அவ்வில்ல மாணவிகளுக்கும், கலை நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாணவிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு வருகைதந்த அதிதிகளால் மேலும் வினைத்திறனுடனான வகையில் தொழிற்பயிற்சித் திட்டங்களை அங்கு தொடர்ந்து முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டதுடன் தையல் பயிற்சியை நிறைவுசெய்த யுவதிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வறிய மாணவர்களின் சீருடைகளுக்கான நன்கொடை வழங்கும் நிகழ்வானது

சுவிற்சர்லாந்து நாட்டில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த இந்துக்களால் நிருவகிக்கப்படும் பொதுத்தொண்டு அமைப்பான சூரிச் நகர அருள்மிகு சிவன் ஆலய அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கத்தினால் அக்கரைப்பற்று, மகாசக்தி கிராமத்திலுள்ள பாலர் பாடசாலையில் கல்விபயிலும் வறிய மாணவர்களின் சீருடைகளுக்கான நன்கொடை வழங்கும் நிகழ்வானது இன்று 09-05-2014, வெள்ளிக்கிழமை காலை அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சண்முகம் கார்த்திக் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் பிரதேச செயலாளரது வெகுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுதர்சினி ஆகியோருடன் அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கத்தின் உத்தியோகத்தர்களும் மாணவர்களது பெற்றோரும் பங்குபற்றினர்.

கடந்த 07-05-2014, புதன்கிழமை சுவிஸ் நாட்டில் தனது ஏழாவது பிறந்ததினத்தைக் கொண்டாடிய என்.நிலவன் எனும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த சிறுவனது குடும்பத்தினரால் அன்பே சிவம் அமைப்பினூடாக வறிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த அத்தியாவசிய உதவிக்காக நன்றி கூறிய பிரதேச செயலாளர், கவடாப்பிட்டி கிராமத்தில் குடிநீர் வசதியின்றி அல்லலுற்ற மக்களுக்கு அவ்வமைப்பினால் பொதுக்கிணறொன்று அமைக்கப்பட்டுவருவதையும் அங்கு நினைவுகூர்ந்தார்.

இதன்போது குறித்த பாலர் பாடசாலையில் கல்விகற்கும் 16 வறிய மாணவர்களின் சீருடைகளுக்கான மாதிரியும் நன்கொடையும் பிரதேச செயலாளர் முன்னிலையில் அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரால் அப்பாடசாலை ஆசிரியையிடம் கையளிக்கப்பட்டன.

மகாசக்தி நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற ஏழு பாலர் பாடசாலைகளிலும் கல்விபயிலும் சிறார்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மகாசக்தி நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற ஏழு பாலர் பாடசாலைகளிலும் கல்விபயிலும் சிறார்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி இன்று 07-05-2014 காலை, மகாசக்தி நிறுவனத்தின் தலைமையக மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 09-05-2014 மாலைவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார். அவருடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், திருக்கோவில் கல்வி வலய முன்பள்ளிகளுக்கான உதவிப் பணிப்பாளர் எஸ்.தர்மபாலன் உட்படப் பல பிரமுகர்கள் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்ததுடன் பாலர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் இணைந்து கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி

ஆலையடிவேம்பில் சேவையாற்றிவரும் களம் பொதுத்தொண்டு அமைப்பினால் நடாத்தப்பட்டுவருகின்ற பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் சிறார்களதும் அவர்களது ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்களதும் முயற்சியில் உருவாக்கப்பட்ட கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி இன்று, 05-05-2014, திங்கட்கிழமை காலை ஆலையடிவேம்பு, கோபால் கடை வீதியிலுள்ள கனகாம்பிகை பாலர் பாடசாலையில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இவ்வாரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளருடன் திருக்கோவில் கல்வி வலய முன்பள்ளிகளுக்கான உதவிப் பணிப்பாளர் எஸ்.தர்மபாலன், ஆலையடிவேம்பு அரசுசாரா அமைப்புக்களின் இணையத் தலைவர் வி.பரமசிங்கம், ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி திருமதி. காந்திமதி ஜோய் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இக்கண்காட்சியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் களம் அமைப்பினால் நிருவகிக்கப்பட்டுவரும் விவேகானந்தா, கனகாம்பிகை, கனகதுர்க்கா, விநாயகர், மறுமலர்ச்சி, அம்பாள் ஆகிய பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் சிறார்கள், அவர்களது பெற்றோர்கள், கற்பிக்கும் ஆசிரியைகள் ஆகியோரது ஒன்றிணைந்த முயற்சிகளில் உருவாக்கப்பட்ட கைப்பணிப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் அங்குரார்ப்பண நிகழ்வைத் தொடர்ந்து அதிதிகளும் பொதுமக்களும் அவற்றைப் பார்வையிட்டனர்.

இன்றுமுதல் எதிர்வரும் 07-05-2014, புதன்கிழமைவரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இக்கண்காட்சியினைக் கண்டுகளிப்பதற்காக அனைத்து சிறுவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அன்புடன் அழைப்பதாக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி திருமதி. காந்திமதி ஜோய் தெரிவித்தார்.

Friday 2 May 2014

பாலர் பாடசாலைகளுக்கான வலைப்பின்னலின் மாதாந்தக் கலந்துரையாடல்


ஆலையடிவேம்பு பிரதேசப் பாலர் பாடசாலைகளுக்கான வலைப்பின்னலின் மாதாந்தக் கலந்துரையாடல் கடந்த 28-04-2014, திங்கட்கிழமையன்று அதன் தலைவரும் பிரதேச செயலாளருமான வி.ஜெகதீசன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் இவ்வலைப்பின்னலின் செயலாளர் பி.மோகனதாஸ், பிரதேச செயலக கிராமசேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஈ.குலசேகரன், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், உளவள ஆலோசகர் திருமதி.சப்றினா ரஸீன், சிறுவர் உள மற்றும் சமுக பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.நிசாந்தினி மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.யசோதா கபிலன், மகாசக்தி சிக்கனக் கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் எஸ்.திலகராஜன், களம் சமுக நல்வாழ்வு அமைப்பின் பாலர் பாடசாலை வேலைத்திட்ட இணைப்பளார், பாலர் பாடசாலை ஆசிரியைகள் சார்பில் ஒருவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு பாலர் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள், நிருவாகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இவ்வலைப்பின்னலின் கடந்தகால செயற்பாடுகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதன்போது இவ்வாறான மாதாந்தக் கலந்துரையாடல்களை ஒவ்வொரு மாதமும் இறுதித் திங்கட்கிழமையன்று பிற்பகலில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதோடு, அடுத்த கலந்துரையாடல் எதிர்வரும் 26-05-2014 அன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.