ஊடகவியலாளர்கள் பதிவு

ஊடகவியலாளர்கள் பதிவு 

இரு ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற அடக்குமுறைகள் பற்றிய பதிவு





16 ஓகஸ்ட் 2004
தினமுரசு பத்திரிகையாளர் பாலநடராஜ ஐயர்அவரது வீட்டுக்கு அருகாமையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே இருந்த மரண அச்சுறுத்தல் காரணமாக தஞ்சம்கோரி நாட்டைவிட்டு வெளியேற எத்தனித்திருந்தார். தினமுரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அற்புதராசா நடராசா 1999 நவம்பரில் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜனவரி 2004
உடகம புத்த ரக்கித்த தேரோ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவேளை அதனை செய்தியிடச் சென்ற ஏனைய சிங்கள பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதித்த போதும் தினக்குரல் பத்திரிகையாளர் வே.தவச்செல்வம் என்பவருக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டதுடன் மேலும் ஓரடி எடுத்து வைத்தால் கொலை செய்வதாக மேஜர் டி.எம்.திசாநாயக்க மிரட்டியுள்ளார்.

3 மே 2004
இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட அவரது வீடு திடீர் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. இது பல ஊடக அமைப்புக்களால் கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டபோதும் மீண்டும் யூலை 23அன்றும் அதே போன்று சுற்றிவளைத்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

31 மே. 2004
மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை ஐயாதுரை நடேசன் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஸ்தலத்திலேயே பலியானார். இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இராணுவு சுற்றிவளைப்புக்கு இவரது வீட்டு உள்ளாக்கப்பட்டு திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஏனைய மட்டக்களப்பு பத்திரிகையார்களான துரைரட்ணம் தலைமறைவானார்.ஷன் தவராஜா மட்டக்களப்பை விட்டு வெளியேறினார். இப்போது இவர்கள் நாட்டை விட்டே தஞ்சம் கோரி வெளியேறிவிட்டனர்.

9 ஜுன் 2004
குறிப்பிட்ட ஒரு வீடியோ அறிக்கை தொடர்பாக தினக்குரல் பத்திரிகையாளர் கே.பி.மோகன் இனந்தெரியாத கும்பலால் தாக்கப்பட்டார்.

11 ஜுன் 2004
லக்பிம பத்திரிகையின் பிரேதச பத்திரிகையாளர் இரத்தினபுரியில் செய்தி சேகரிக்கச் சென்ற போது பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

25 ஜுன் 2004
தினக்குரல் பத்திரிகையின் நிருபர் டி.வேதநாயகம் கருணா குழுவைச் சேர்ந்த ஒருவரின் பத்திரிகையாளர் சந்திப்பை செய்தியிட்டதற்காக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இராணுவ பாதுகாப்பில் இருப்பதாகவும் ஊடக சுதந்திர நிறுவனங்களுக்கு அறிவித்திருந்தார். (Reporters Without Borders)

14 ஜுலை 2004
யாஸ்மின் ரக்ஷிகா (தி ஐலண்ட்), ஜனித் டி சில்வா (ஐ.டி.என்), சுஜீவ பிரியதர்ஷன (சுவர்ணவாகினி), எஸ்.ஏ.வை.டி.சில்வா (லங்காதீப) ஆகியோர் கொஸ்கடவுக்கு செய்தி சேகரிப்புக்காக சென்ற இடத்தில் பொலிஸாரால் புகைப்படக்கருவிகள் பறிக்கப்பட்டு பலத்த தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

17 ஒக்டோபர் 2004
சுவர்ணவாகினி தொலைக்காட்சி நிலையத்துக்கு கிரேனேட் வீசப்பட்டு சேதத்துக்கு உள்ளானது.

26 ஒக்டோபர் 2004
லேக் ஹவுஸ் பத்திரிகையைச் சேர்ந்த சஞ்சய அசேல ஐ.தே.க.வின் ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் தாக்கப்பட்டு, மிரட்டலுக்கு உள்ளானார்.

24 நவம்பர் 2004
கொடிகாமத்தில் இராணுவ வாகனத்துக்கு இந்து மதத்தலைவர் பலியானதைத் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற உதயன, ஈழநாடு பத்திரிகையாளர்கள்க ஜேந்தின், செழியன், சிவருபன் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகி அவர்களின் புகைப்பட கருவிகள் பறிக்கப்பட்டன.

8 டிசம்பர்2004
மட்டக்களப்பிலுள்ள தினக்குரல் அலுவலகம் கிரேனேட் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது 3 ஊழியர்கள் கடமையில் இருந்தனர்.

மார்ச் 2005
தினமுரசு பத்திரிகைக்கான மட்டக்களப்பு நிருபர் எஸ்.கமலநாதன்சுட்டுக்கொல்லப்பட்டார்.

11 மார்ச் 2005
யாழ்ப்பாணத்தில் நடந்த எதிர்பார்ப்பாட்டத்தை அறிக்கையிடச் சென்றிருந்த வின்சன்ட் ஜெயன் (தினகரன்)ரட்ணம் தயாபரன் (தினக்குரல்) ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் படையினரால் சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டது.

11 ஏப்ரல் 2004
புத்தளம் மாவட்ட லங்காதீப நிருபர் ஹிரன் பிரியங்க ஜயசிங்க செய்தி சேகரிப்புக்காக புகைப்படம் எடுத்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

29 ஏப்ரல் 2005
பிரபல பத்திரிகையாளர் தராகி என்று அழைக்கப்படும் சிவராம் பம்பலப்பிட்டியில் தனத நண்பர்களை ஒரு ரெஸ்டுரன்டில் சந்தித்து விட்டு திருப்பிக்கொண்டிருந்த போது வானில் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். அடுத்த நாள் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் அவரது சடலம்பாராளுமன்ற கட்டடத்துக்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்டது.

30 ஏப்ரல் 2005
சிவராமின் கொலையடுத்து வீரகேசரியின் ஆசிரியர் வி.தேவராஜாஅவர்களை தொலைபேசியின் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்கள். இனந்தெரியாத நபர்களால் தனத வீடு கண்காணிக்கப்படுவதாகவும் பின்னர் அவர் முறைப்பாடு செய்திருந்தார்.

18. மே 2005
முன்னாள் திருகோணமலை மேயரும் முன்னாள் தினகரன் பத்திரிகையாளருமான பெரிய அடி சூரியமூர்த்தி (55) திருகோணமலை அவரது வீட்டு வாசலுக்கு அழைக்கப்பட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் வயிற்றில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

2 ஜுன் 2005
வவுனியாவிலுள்ள சன் டிவி நிலையம் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. இது முன்னாள் டெலோ உறுப்பினரொருவரால் நடாத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

ஜுன் 2005

ஈழநாதம் பத்திரிகையின் மட்டு அம்பாறை வினியோகஸ்தர் கண்ணமுத்து அரசகுமார் அப்பத்திரிகை விநியோகித்ததற்காக கொல்லப்பட்டார்.

30 ஜுலை 2005
ஆரையம்பதியில் வைத்து தினமுரசு பத்திரிகையாளர் சுடப்பட்டு பலத்த காயத்துடன் அஸபத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு இரு நாட்களுக்கு முன்னர் தான் (RSF-Reporters Without Borders) எல்லைகடந்த பத்திரிகையாளர் அமைப்பு நோர்வே நாடு பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பதில் இருசாராரையும் நிர்ப்பந்திக்கும்படி கோரியிருந்தது.

12 ஓகஸ்ட் 2005
பிரபல தொலைகாட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளர் ரேணங்கி செல்வராஜன் மற்றும் அவரத கணவர் கொழும்பில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

29 ஓகஸ்ட் 2005
யாழ் சுடர்ஒலி பத்திரிகை காரியாலயத்தின் மீது கிரனேட் எரியப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானது. பாதுகாப்பு ஊழியர் கொல்லப்பட்டதுடன் ஊழியர்கள் இருவர் படுகாயத்துக்குள்ளானார்கள்.

30 ஓகஸ்ட் 2005
கொழும்பில் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை செய்தியிட சென்ற உதயன், சுடர்ஒலி பத்திரிகையின் நிருபர் யதுர்சன் பிரோமசந்திரன் ஜே.வி.பி. உறுப்பினர்களால் தாக்கப்பட்டு உடமைகள் பறிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் விடுதலைப் புலியைச் செர்ந்தவர் என்று ஜே.வி.பி.யினர் கூறியிருந்தனர். ஒரு நாள் பொலிசில் தடுத்து வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். இதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் தலைவர்களில் ஒருவரால் பகிரங்கமாகவே கூட்டமொன்றில் பத்திரிகைகளுக்கான அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதென பத்திரிகையார் பாதுகாப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.

16 ஒக்டோபர் 2005
சண்டே லீடர் மற்றும் இருதின ஆகிய பத்திரிகைகளை அச்சிடும் இரத்மலானை அச்சகத்துக்குள் நுழைந்த ஆயதக் கும்பல் அங்கிருந்தவர்களைத் தாக்கி அதனை நிறுத்தும்படி கூறிவிட்டு 40 தொகுதி கட்டுகளை தீயிட்டு கொழுத்தி விட்டுச் சென்றனர்.

ஒக்டோபர் 2005
தினமுரசு பத்திரிகையை விநியோகித்துக்கொண்டிருந்த விநியோகஸ்தர் கிங்ஸ்லி வீரரட்ன கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டு 15 நிமிடத்தில் தினமுரசு காரியாலயத்தில் தரிக்கப்பட்ட வானில் குண்டு வெடித்தது.

29 ஒக்டோபர் 2005
அரச புலனாய்வு உத்தியோகத்தர் ரிஸ் மீடின் என்பவர் தொடர்பாக தகவல் சேகரிக்க சென்ற சண்டே லீடர் பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலாளர்களான திருமதி ராணி முஹமட்புகைப்படப்பிடிப்பாளர் பேர்ட்டி மென்டிஸ் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். பேர்ட்டி மென்டிஸ் படுகாயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

15 டிசம்பர் 2005

யாழ் - நமது ஈழநாடு பத்திரிகை காரியாலயம் சுற்றி வளைத்து சோதனையிடப்பட்டது.

17 டிசம்பர் 2005
தினக்குரல் பத்திரிகையாளர் பி.பிரதீபனும் அவருடன் சென்ற தினக்குரல் ஊழியர்கள் இருவரும் கொழும்பு இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து விரல் அடையாளங்கள் எடுக்கப்பட்டு புகைப்படங்கள் பிடிக்கப்பட்டு ஒரு நாள் தடுத்து வைப்பின் பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டின் பின் விடுவிக்கப்பட்டனர்.

19 டிசம்பர் 2005
டிசம்பர் 19 அன்று யாழ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர், விரிவுரையாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார், இராணவும் இணைந்து தாக்கினர். இதன் போது சபேசன் (தினக்குரல்), வின்ஸ்டன் (தினகரன்), ஜெராட் (நமது ஈழநாடு) ஆகியோர் பலமாக தாக்கப்பட்டதுடன் அவர்களின் கமராக்கள் சேதமாக்கப்பட்டன.

22 டிசம்பர் 2005

தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார்.



5 ஜனவரி 2006

இராணுவ சுற்றிவளைப்பில் கைதுக்குள்ளாக்கப்பட்டு கைது க்குள்ளாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் பலர் குறித்த செய்தி சேகரிப்புக்காக சென்ற வீரகேசரி பத்திரிகையின் மூத்த புகைப்படப்பிடிப்பாளர் ஜோய் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு பலத்த விசாரணைக்குள்ளாக்கப்பட்டார்.

5 ஜனவரி 2006
இராணுவ அரண் மீதான கிரனேட் தாக்குதல் குறித்த செய்தி சேகரிக்கச் சென்ற யாழ் தினக்குரல் பத்திரிகையைச் சேர்ந்த பத்திரிகை நிருபர்கள் துரத்தித் தாக்கப்பட்டதுடன் அவர்களின் அலுவலகம் சோதனையிடப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்.

24 ஜனவரி 2006
சுப்பிரமணியம் சுகிர்தராஜா சுடர்ஒலி பத்திரிகையின் நிருபர்திருகோணமலையில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கி தாரர்களால் கொல்லப்பட்டார். இவர் வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வெளியே சென்ற வேளையில் வீட்டுக்கு சமீபமாக கொல்லப்பட்டார்.

1 பெப்ரவரி 2006
ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவங்சவினால் சண்டே லீடர்ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

16 பெப்ரவரி 2006
புத்தளத்தில் நிகழ்ந்த அரசியல் கோஸ்டிச் சண்டையை படம் எடுக்கச் சென்ற எம்.டி.வி. பத்திரிகையாளர் பிரசாத் பூணமால் தாக்கப்பட்டு அவரது கமரொக்கள் சேதமாக்கப்பட்டன.

17 பெப்ரவரி 2006
திருகோணமலையைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்களுக்கு (சசிகுமார் -சூரியன் எப்.எம். மற்றும் சாலி மொஹமட் சுடர்ஒலி)கொலை மிரட்டல் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எதிரி அழிப்பு இயக்கம் என்கிற பெயரில் இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

24 பெப்ரவரி 2006
சுவர்ணவாகினி தொலைக்காட்சி சேவையின் அரசியல் நிகழ்ச்சி நடாத்தும் மனோஸ் திலங்க பொரல்லையில் இரவு நேரம் சென்றுகொண்டிருந்த போது கெப் ரக வாகனத்தில் வந்தவர்களால் துப்பாக்கி மிரட்டலுக்கு உள்ளானார்.





ஊடகங்களும் பண்டாரநாயக்கா சேனநாயக்கா குடும்பங்களின் செல்வாக்கும்

என்.சரவணன்

ஜனாதிபதித் தேர்தல் ஆயத்தங்கள் சூடு பறக்க 13 வேட்பாளர்களுமாக செய்துகொண்டி­ருக்க பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஆளும் வர்க்க குழுமங்கள் ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்­குள் கொண்டு வரவும் அல்லது அவற்றை கைக்குள் போட்டுக்கொள்ளவுமாக முயற்சிகளைச் செய்து வருகின்றன. அரச ஊடகங்களான, ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி சேவை (ITN) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) என்பவற்றை பொ.ஐ.மு.வும், டீ.என்.எல். (TNL) தொலைக்காட்சிச் சேவை மற்றும் ஒலிபரப்புச் சேவை (டீ.என்.எல். ரணிலின் சகோதரன் ஷான் விக்கிரமசிங்கவின் நிறுவனம் என்பது தெரிந்ததே.) என்பனவற்றை ஐ.தே.க.வும் தமது கைக்குள் போட்டுக்கொண்டுள்ளன. இந்த இரு பிரதான கட்சிகளும் இவ்வாறு இலத்திரனியல் ஊடகங்களை மட்டுமன்றி அச்சு ஊடகங்களையும் இவ்வாறு தமது கைக்குள் கொண்டு வருவதற்கான எத்தனிப்புகளை முனைப்பாக தற்போது செய்து வருகின்றன. (ஐ.தே.க. சண்டே லீடரையும் பொ.ஐ.மு லேக் ஹவுஸ் பத்திரிகைகளையும் ஏலவே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன.)

ஐ.தே.க. இவ்வாறு ஆளுங்கட்சியை அம்பலப்படுத்த ஊடகங்களை பயன்படுத்துவது ஆளுங்கட்சிக்கு பெரும் தலையிடியாகிவிட்டிருக்­கிற நிலையில் திடீரென தகவல் தொடர்பு அமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதித்தேர்தல் சட்டத்தின்படி அரச தொலைக்காட்சிச் சேவைக­ளில் மட்டும்தான் ஜனாதிபதி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யமுடியும் என்று கூறி அந்தச் சட்டங்களின் மூலம் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்­களை நிறுத்தும் முயற்சியில் இறங்கவே, ஏனைய தனியார் தொலைக்காட்சி சேவைகள் மற்றும் தொடர்பூடகவியலாளர்கள் இதற்கு எதிராக கிளம்பியுள்ளனர். தொலைக்காட்சி சேவைகள் இலங்கைக்கு அறிமுகமாகுமுன் (அதாவது 1972இல்) கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி அரசு கருத்துச் சுதந்திரத்தை பறிக்க முயற்சிக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அரச பயங்கரவாதத்தை பல்வேறு பரிமா­ணங்களில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வழிமுறைகளின் மூலம் மேற்கொள்வதை பொதுப்புத்தி மட்டத்தில் கூட எவராலும் அறிய முடியும். ஒரு அடக்குமுறை அரசு அப்படித்தான் செய்யும். செய்து வருகிறது. ஆனால் அதே வேளை இலங்கையில் தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் இலங்கையின் ஆதிக்க சித்தாந்த வெறியைப் பரப்புவதில் ஆற்றி வரும் பாத்திரத்தை எவரும் அறிவர்.

இலங்கையில் ஒரு புறம் தமிழ் மக்கள் மீது கடும் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற நிலையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தைப் பலப்படுத்துவதில் டீ.என்.எல். தொலைக்காட்சி சேவையின் பாத்திரம் முக்கியமானது.

இலத்திரனியல் ஊடகங்களின் வருகை

இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகத்தோடு அந்நிய ஏகாதிபத்திய பல்தேசியக் கம்பனிகள் இலங்கையில் கடைவிரிப்பதெனில் தமது நுகர்பொருள் கலாசார பிரச்சாரத்துக்காக இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களின் வியாபகப்படுத்துவது முன்நிபந்த­னையாகக் கருதின. போட்டிமிக்க திறந்த சந்தையில் இது அத்தியாவசியமான ஒன்றெனக் கருதிய முதலீட்டாளர்கள் இலங்கையில் தொலைக்காட்சி சேவையை ஆரம்பிப்பதில் எமது நாட்டுத் தலைவர்களை விட அதிக அக்கறை எடுத்துக்கொண்டது இதன் காரணமாகத் தான். 1978இல் ஜப்பான் அரசு இதற்கு அதிகளவு உதவியிருந்தது. இலங்கையில் முதலாவது தொலைக்காட்சி சேவையான ஐ.டீ.என். (சுயாதீன தொலைக்காட்சி சேவை 1979 ஏப்ரல் 14ஆம் திகதி முதலாவது ஒலிபரப்பை ஆரம்பித்தது.

இலங்கையியை அந்நிய சுரண்டலுக்கு திறந்து விட்ட அன்றைய ஜனாதிபதி ஜே.ஆரைப் பயன்படுத்தி, ஜே.ஆரின் உறவினரான ஷான் விக்கிரமசிங்கவும், அனில் விஜேவர்தனவும் கூட்டுச் சேர்ந்து இந்த தனியார் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தனர். அந்த ஷான் விக்கிர­மசிங்க தான் இன்றைய டீ.என்.எல். நிறுவனத்தின் உரிமையாளரும் ரணில் விக்கிரமசிங்கவின் சகோதரனுமாவார். (இவரின் மகள் இஷினி விக்கிரமசிங்க இந்த டீ.என்.எல். சேவையின் செய்திப் பொறுப்பாளராக இருந்து புலிகள் குறித்த ஒரு செய்தியை வெளியிட்டார் என்று அரசினால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவரும், அதன் பின்னர் புகழ்பெற்ற நிகழ்ச்சியான ஓல்வேஸ் பிரேக் டவுன் நிகழ்ச்­சியை தயாரித்து வழங்கி பின்னர் அதனை நிறுத்த தகப்பனார் செய்த முயற்சியின் விளைவாக அதிலிருந்து விலகி இன்று அரசாங்கத்துடன் இணைந்து கொழும்பு மேற்குக்கான பொ.ஐ.மு.­வின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்)

1979 யூன் மாதம் 5ஆம் திகதி 39’5 இலக்கம்கொண்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஜே.ஆர் அரசாங்கம் ”வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி சேவை”யை (ITN) அரசுடமையாக்கியது. 1982ஆம் ஆண்டு பெப்ர­வரி 15இலிருந்து ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையையும் ஆரம்பித்தது அரசாங்கம். அதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி சேவைகள் பற்றி பார்க்க அட்டவணையில் பார்க்கவும்.

இவற்றில் இன்றும் இனவாதத்தைக் கக்குகின்ற நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்ற முக்கிய சேவை டீ.என்.எல். ஆகும். இச்சேவைக்கும் ரணி­லுக்கும் தொடர்பில்லை என்று ரணிலே கூறி வருகின்ற போதும், அதன் மீதான மறைமுக கட்டுப்பாடு ஊரறிந்த இரகசியம். ”ஓல்வேஸ் பிரேக்டவுன்” நிகழ்ச்சி ரணிலுக்கு பாதகமானது என்று கூறி அதனை நிறுத்துவதற்கு காரணமாக இருந்ததும் அதன் விளைவாக இஷனி வெளியேற நேரிட்டதும் ரணிலால் தான். அரசின் செய்திகளை மறுக்கின்ற சாராம்சத்தைக் கொண்டதும், அரசை அம்பலப்படுத்துகின்ற செய்திகளையும் வெளிப்­படுத்துகின்ற வகையிலும் ஐ.தே.க.வின் பிரச்­சாரங்களை கொண்டு செல்வதும் டீ.என்.எல்லின் வழமை. இந்த பொ.ஐ.மு. எதிர்ப்பு நிலை சில வேளைகளில் போர்முனைச் செய்திகளை புலிகளுக்கு சாதகமான வகையிலும் அமைந்து விடுவது உண்டு. ஐ.தே.க.வின் ஆதரவு பத்திரிகையான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை வைத்து ஆங்கிலத்திலும் சமுதித்தவை வைத்து சிங்களத்திலும் அரசை அம்பலப்படுத்தும் அரசியல் விவாதங்களை டீ.என்.எல். தொடர்ந்து நடத்தி வருகிறது. அரசைக் கடுமையாக அவ்வவ் காலகட்டங்களில் கண்டனம் செய்பவர்களைப் பிடித்து அவர்களுக்கு களமமைத்துத் கொடுப்பதற்கூடாக இது நடைபெறுகிறது.

அது போல கங்கொடவில சோம ஹிமியை ஊதிப்பெருப்பித்ததும், அவரைப்போலவே வேறும் பல இனவாதத் தரப்பினரை வைத்து இனவா­தத்தை திட்டமிட்டு கக்கவைத்ததிலும் டீ.என்.எல். சேவைக்கு முக்கிய பங்குண்டு. சிங்கள வீரவிதா­னவின் நிகழ்ச்சிகளை அவர்களின் செயற்பாடுகள் என்பவற்றுக்குப் பெரும் பிரச்சாரத்தையும் டீ.என்.எல்லைத் தவிர வேறு எந்த தொலைக்­காட்சி சேவையும் அதிகமாக வழங்கியது இல்லை. அதுவும் விளம்பரமின்றி தமது தயாரிப்பாகவே மணத்தியாலக்கணக்கில் அவ்வாறு ஒளிபரப்பப்­பட்டுள்ளன.

பொ.ஐ.மு. அரசாங்கம், தமது கட்டுப்பாட்­டுக்குள் இருக்கின்ற ஊடகங்களை ஆளுங்கட்சி­யின் நலன்களுக்குப் பயன்படுத்துவது கிடையாது என்று கூறுவது போலவே இந்த டீ.என்.எல் சேவைக்கும் தமக்கும் எந்த தொடர்பும் கிடை­யாது என்று ரணில் போன்றோர் கூறிவருகின்றனர்.

1990 ஒக்டோபர் 20ஆம் திகதி டெலிஷான் லிமிட்டட் நிறுவனம் தொலைக்காட்சி சேவை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தை ஷான் விக்கிரமசிங்க செய்திருக்கிறார். அதனை அன்றைய கலாச்சார அலுவல்கள், தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த வி.ஜே.மு.­லொக்குபண்டாரவின் மூலம் அனுமதிக்கச் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான மேற்படி திகதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் அவர் தாம் அதற்கு முன்னர் ”கம் உதாவ” மற்றும் படை­யினருக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை தயா­ரித்து வழங்கி வந்தவ­ரென்றும் தான் தொட­ரப்போகும் தொலைக்­காட்சி சேவைக்கு படையில் இருந்து அங்­கவீனமுற்றிருப்போருக்கு அச்சேவையில் தொழில் முன்னுரிமை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். (இது குறித்த கடிதங்­களின் பிரதிகளை சிங்­கள வாராந்த பத்திரிகையான சிலுமின 18-07-99இல் வெளியாகி­யிருக்கிறது.) 1991-03-18 கூடிய அமைச்ச­ரவையில் இதற்கான அனுமதி நிறைவேற்­றப்பட்டுள்ளது. 1991-08-07 அன்று இதற்கான முழுமையான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஷான் விக்கிரமசிங்க தமது நிறுவனமான டெலிஷான் லிமிட்டட்டை, டெலிஷான் நெட்வேர்க் பிரைவேட் லிமிட்டட் என பெயர் மாற்றம் செய்வதாக தகவல் அமைச்சுக்கு அறிவிப்பதற்காக எழுதப்பட்ட 05-05-91 திகதியிடப்பட்ட கடிதத்தில் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டு விலாசமான இல.115, 5வது ஒழுங்கை, கொழும்பு-07 எனும் விலாசமிடப்பட்டுள்ளது. இதே விலாசம் தான் இது தொடர்பான ஏனைய கடிதங்களுக்குமான விலாசமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பம் வேகமான மாற்றத்துக்கான பாத்திரத்தை ஆற்றி வரும் நிலையில் கணிணி மற்றும் இணையத்தின் தொழிற்பாடு என்பவை மேலும் ஆழமாக நிலைநிறுத்தப்படும் வரை இந்தத் தொலைகாட்சி மற்றும் வானொலி போன்ற இலத்திரனியல் ஊடகங்கள் பாரிய பங்களிப்பை ஆற்றி வரவே செய்யும். இப்படிப்பட்ட நிலையில் இலங்கையின் இந்த தகவல் துறையை கைப்பற்றி தமது நலன்களை அடைய முயற்சி செய்யும் சக்திகள் ஏறாளம். பெருமுதலாளிகள், தரகுமுதலாளிகள், அவர்களின் கருவிகளான ஏனைய ஆதிக்க சக்திகள் மற்றும் அளும் குழுமங்கள் என பல்வேறு சக்திகள் உள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரை இலங்கையில் முக்கியமாக இரண்டு குடும்பத்­தினரின் செல்வாக்கு தான் இலங்கையின் தொடர்பூடகத் துறையிலும் சரி அரசியல் துறை­யிலும் சரி போட்டிபோட்டு தமதாதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றனர். அவர்களின் இந்தப்போட்டிக்குப் பின்னால் வெறும் குடும்ப அந்தஸ்து மற்றும் சாதியம் என்பவை முக்கியமாக தொழிற்பட்டிருப்பதை கூர்மையாக அவதா­னித்தால் வெளிப்படும்.

சேனநாயக்க குடும்பம் மற்றும் பண்டாரநா­யக்காவின் குடும்பம் என்பவற்றைச் சேர்ந்த­வர்களின் இந்த மோதலை விளங்குவதென்றால் அதன் பின்புலத்தை சற்று விளங்குவது அவசியம்.

சேனநாயக்க குடும்பம் கொவிகம சாதிப் பின்னணியைக் கொண்டது. ஆனால் பண்டாரநா­யக்காவின் குடும்பம் அளவுக்கு கொவிகம சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலப்பி­ரபுத்துவ மேற்தட்டு பின்னணியைச் சேர்ந்தவர்கள் இல்லை. எவ்வாறிருந்த போதும் நவீன பொருளா­தாரத் துறையில் அவர்கள் காலப்போக்கில் மூதலீடுகளைச் செய்தும், தரகுமுதலாளித்துவ பாத்திரத்தை வகித்ததாலும் அவர்களின் பொரு­ளாதாரப் பின்னணி இலங்கையில் முக்கியத்து­வமானது. (குடும்பப் பின்னணியை விளக்கும் மரவடிவிலான வரைபைப் பார்க்க)

இன்று இலங்கையின் அதிபேரினவாதத்தைக் கக்குகின்ற பத்திரிகைகளான த ஐலண்ட் மற்றும் திவய்ன ஆகிய அதிவிற்பனையையுடைய பத்தி­ரிகைகளை வெளியிடும் ”உபாலி நிறுவனம்” ரத்வத்தை குடும்பத்துக்கு சொந்தமானது என்பதும் (சீவலி ரத்வத்தை-இவர் இலங்கை பாதுகாப்பு படைக்கு தேவையான ஆயுத இறக்குமதி ஏஜென்டாக நெடுங்காலமாக இருந்து வருவதைப் பலர் அறிந்திருப்பர். அது போல திவய்னவின் பேரினவாதப் போக்குக்குக் காரணம் இந்த ஆயுத கொமிசனின் மூலம் கிடைக்கின்ற பெரும் லாபத்தை தக்கவைப்பதே. இனவெறியை அப்படியே தக்கவைப்பதும் அதனை கூர்மைப்­படுத்துவதுமே போரை அதிகரிக்கச் செய்வதோடு ஆயுதத் தேவையும் அதிகப்படுத்தும் என்பதை இவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்), இன்னுமொரு தினசரி பத்திரிகையான லங்காதீப மற்றும் சண்டே டைம்ஸ் ஆகியவற்றை வெளி­யிடும் விஜய வெளியீட்டு நிறுவனம் விஜயவர்தன குடும்பத்துக்கு சொந்தமானவை என்பதும் தெரிந்ததே. அது போல ரணிலின் சகோதரன் ஷான் விக்கிரமசிங்க டீ.என்.எல் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை நடத்தும் டெலிஷான் நெட்வேர்க் பிரைவேட் லிமிட்டட்டுக்கு சொந்­தக்காரர் என்பதும் முக்கியமானது.

இந்தக்குடும்பங்கள் தான் இன்றைய பேரின­வாத, சாதிய ஆதிக்க, மற்றும் நுகர்பொருள் கலாசாரத்தைத் திணிக்கின்ற, அந்நிய முதலீட்டுத் துறைகளுக்கு பிரசாரம் செய்கின்ற, ஆணாதிக்க சித்தாந்தங்களை நிலைநிறுத்துகின்ற ஆளும் பிரதான கட்சிகள் இரண்டையும் பிரதிநிதித்துவப்­படுத்துகின்ற முக்கிய சக்திகளாக இருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்வோம். மேற்தோற்­றத்தில் இவை அத்தனை பெரிய ஒன்றாக வெளித் தெரியாவிட்டாலும் இந்த சக்திகளின் வர்க்கப் பின்னணியானது இந்த அத்தனை ஆதிக்க சித்தாந்தங்களையும் தக்க வைப்பதன் மூலம் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றன என்றால் அது மிகையில்லை. இப்படியான இன்னொரு கோணத்திலான பார்வை வேறு வெளிச்சங்க­ளையும் எமக்கு வெளிப்படுத்தலாம்.

சரிநிகர்-185

எழுதுவதற்கும் இனித் தடை!



என்.சரவணன்

கடந்த ஜனவரி 28ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது எம்மெல்லோருக்கும் தெரிந்ததே. அவசரகால சட்டப் பிரமாண­ங்களின்படி பிரகடனப்படுத்­தப் பட்டுள்ள இந்த மோசகரமான விதி­கள் குறித்து இத்தனை வாரங்­க­ளாக எவரும் அவ்வளவு பிரச்சி­னைக்குரிய ஒன்றாகக் கருதியிருக்­கவில்லை. ஏதோ புலிகளுக்கு எதி­ரான ஒன்றாகவே கருதிவந்த வேளை இந்த விதிகள் மக்களின் கருத்த­றியும் சுதந்திரத்­திற்கு எதிரான­தென்பதையும், அரசியல் பழிவாங்க­லுக்கு வகைசெய்யும் சட்டமாக­வும், பத்திரிகை­களின் சுதந்திர வெளியீ­ட்டுக்கு அச்சுறுத்­தலானதென்ப­தையும் அண்மையில் தான் திடீரென கண்டிருக்கின்­றனர். எனவே இப்போது தான் பலர் துயிலி­லிருந்து மீண்டு இவ்விதிகளு­க்கெதிராகப் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தி­ருக்கின்றனர்.

இந்தச் சட்ட விதிகளின் அபாய­த்தை முதலில் சகல பத்திரிகையா­சிரியர்களது கவனத்துக்கும் கொண்டு வந்தவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் சிங்க ரணதுங்க தான். அவசர கடிதமொ­ன்றின் மூலம் பத்திரிகையாசிரியர்க­ளுக்கு இந்த விடயத்தை அறிவித்த அவர் உடனடியாக இதற்கெதிரான நடவடிக்­கைகளில் இறங்கியாக வேண்டுமென அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

புதிய விதிகளின் படி

(அ) ”தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தின் அல்லது இயக்கம் சார்ந்தவர்களால் பிரசுரிக்கப்படும் எழுத்துக்களை அல்லது பிரசுரங்களை விநியோகிப்­பது அச்சடிப்பது பிரசுரிப்பது,

(ஆ) இந்த இயக்கத்தின் நோக்­கங்­களை முன்னெடுத்துச் செல்லு­முகமாக தகவல்களைப் பரிமாறு­வது பரிமாற முற்படுவது, அல்லது இயக்கத்தின் தீர்மானங்களை அல்லது கட்டளைகளை தகவல் பரிமாற்றம் செய்வது” என்பன தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

இக்குற்றத்துக்கு இலக்கானவர்­கள் ஏழு வருடங்களுக்குக் குறை­யாத 15 வருடங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

சாராம்சத்தில் சொல்லப் போனால் இனி புலிகளின் செய்தி­களை, பேட்டிகளை, புகைப்படங்­களைப் பிரசுரிக்க பத்திரிகை­கள் முனைந்தால் அந்தோ கதி தான்.
இந்த விதிகளைப் கண்டித்து ”சுதந்தி­ரப் ஊடக இயக்கத்தினர்” (FMM-Free Media Movement) அறிக்கை வெளியி­டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்­டாலும் கூட இது வரை அப்படி எந்த வித அறிக்கை­யும் வெளியிடப்படவி­ல்லை. சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என சட்ட வல்லுனர்களு­டன் கலந்தா­லோசித்து வருவதாக அதன் செயலாளர் சீதா ரஞ்சனி சரிநிகரு­க்கு தெரிவித்தார். சீதா ரஞ்சனி கடமையாற்றி வரும் ”யுக்திய” (சரிநிகரின் சகோதர பத்திரிகை) பத்திரிகை இறுதியாக வெளிவந்த தமது இதழில் முன்பக்க­த்தில் இச்செய்தியை வெளியிட்டு கூடவே புதிய சட்ட விதிகளுக்கு சவால் விடும் வகையில் வகையில் புலிகளை ஆதாரம் காட்டி ஒரு செய்தியையும் பிரசுரித்துள்ளது.

முல்லைத்தீவில் புலிகளால் கைப்பற்ற­ப்பட்ட பகுதிகளில் பொது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்­பதாகவும் அங்கு புலிகளின் சிவில் நிர்வாகம் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாகவும் குறிப்பிட்­டுள்ள அந்தச் செய்தி புலிகளின் மார்ச் 17ஆம் திகதியன்று வெளியிட்ட அறிக்கை­யை ஆதாரம் காட்டியிரு­க்கிறது யுக்திய.

இந்தப் புதிய விதிகளால் பத்தி­ரிகைகள் மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தும் உரிமையை இழந்துள்­ளன. யாருடைய பணத்தினை வரியாக வசூலித்து இந்த யுத்தம் நடத்தப்படுகி­றதோ எவர்கள் இந்த யுத்தத்தினால் நாளுக்கு நாள் கொல்லப்பட்டுக்க கொண்­டிருக்கிறார்களோ, அந்த மக்களுக்கு இந்த யுத்தத்தின் உண்மைகளை தெரிவிக்க முடியா­மல் போகிறது. மக்களைப் பொறுத்­தளவில் யுத்தத்தின் பங்குதாரர்க­ளாகவே உள்ளனர்.

இனி யுத்தம் பற்றி நடுநிலைமை­யான செய்திகளை வழங்க பத்திரிகைகளுக்கு இருந்த சந்தர்ப்பம் கூட பறி போய்விட்டது.

இத்தனை காலம் யுத்தம் குறித்த செய்திகளையும் வடக்கு நிலவரங்களை­யும் குறித்து அரசா­ங்கம் என்ன அறிவித்தல் வழங்கிய போதும் புலிகளின் பக்க நியாயங்­களையும் அறிக்கைகளையும் ஒரு முறை பார்த்தால் கிட்டத்தட்ட நிலைமை­யை ஓரளவு ஊகிக்கலாம் என்று கருதி வந்த ஊடகங்களுக்கு இனி அரசாங்கம் சொல்வது மட்டும் தான் தகவல்.

ஆய்வாளர்களுக்கு கூட இனி புலிக­ளின் தகவல்களை மேற்கோள் காட்டி எந்த விடயமும் எழுத முடியாது என்பது ஒழுங்­கான ஆய்வு­களுக்கு கூட இருந்த வாய்ப்பு­கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று கூடக் கூறலாம்.

கள நிலவரம் கூட அரசாங்கம் கூட்டிச் சென்று காட்டும் இடங்களை­யும், அங்கு அரசாங்கம் சொல்லும் தகவல்களையும், கருத்துக்களை­யும் மட்டும் தான் தொடர்பூடகங்கள் பயன்படுத்த முடியும். ஆனால் புலிக­ளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களு­க்குப் போய் அவர்களின் பேட்டி­கள், புகைப் படங்கள், செய்திகள் என்பன­வற்றைப் பிரசுரிக்க முடியாது. இந்த சுதந்தரமாக கருத்தறியும் அடிப்ப­டைச் சுதந்திரம் பறிக்கப்பட்டி­ருக்கும் இந்தச் சட்ட விதிகளின் அபாயகரமான விளைவுகளை இன்னும் பலர் உணராதுள்ளதன் காரணம் தான் விளங்கவில்லை.

இதில் உள்ள பெரும் வேடிக்கை என்னவென்றால், ஜனவரி 28ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வந்த இவ்விதியின் பின்னர் வாராந்தம் பாதுகாப்பு படையின­ரால் நடத்தப்­பட்டு வந்த பத்திரிகையாளர் மாநாட்டின் போது அவர்களாலேயே மீளப்பட்டுள்ளது தான்.

ஒவ்வொரு வாரமும் பிரிகேடியர் சரத் முனசிங்க பத்திhpகையாளர் மாநாட்டின் போது ”புலிக­ளின் வானொலியை இடை மறித்து கேட்ட போது அவர்களின் வானொ­லியில் இன்னது கூறப்பட்டது”எனக் கூறி வந்துள்ளார். இந்த விதிகளை முதலில் மீறியிருப்பதே இதனை நடைமுறைக்குக் கொண்டு வந்த அரசாங்கமும், பாதுகாப்பு துறையி­னருமே என்றால் இதை விட வேடிக்­கையும், சட்ட துஷ்பிரயோக­மும் வேறென்ன?

இந்தச் சட்ட விதிகள் இப்படி­யான துஷ்­பிரயோகங்க­ளுக்கு நிச்ச­யம் இடமளித்து­ள்ளது. இது மட்டும­ன்றி இந்தச் சட்டத்தைப் போட்டவ­ர்களே மீறலாம் என்பது எவ்வளவு பெரிய ஜனநாயக விரோ­தச் செயல்? எனவே ஒட்டுமொத்த அடக்குமுறை­க்கும் பழிவாங்­கலு­க்கும் பயன்படப் போகும் இந்தச் சட்டம் அரச பயங்க­ரவாதத்தை தடையின்றி செய்யப் பிறப்பித்துள்ள சட்ட அங்கீகார­மென்றெ கூற வேண்டும்.

மேலும் நடைமுறையில் இருக்­கும் அரசாங்கக் கட்டுப்பாட்டு தொட­ர்பு சாதன­ங்களைப் போலவே ஏனைய தொடர்பு சாதனங்களும் இனிமேல் அரசாங்கம் தரும் செய்தி­களை மட்டும் தரப்போகின்ற அபாயம் வந்துள்ளது. அது தான் அரசின் தேவையும் கூட. சகல தொடர்பு ஊடகங்­களையும் அரசின் பிரச்சார ஊடகமாக மட்டும் இருக்கச் செய்வதே அதன் தேவை. இந்த தேவையை அடைவதற்கு அரசு கையாண்டுள்ள இந்தப் ”பயங்கர­வாத” நடவடிக்கையை எதிர்த்து சில பத்திரிகை­கள் முடிந்தால் கைது செய்யட்டும் அதன் பின் பார்ப்போம். சட்டத்தை முகம் கொண்டு அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை அம்பலப்படுத்து­வோம் எனச் சில நடவடிக்­கைகளை ஆரம்பித்திருக்கின்ற போதும் இது எவ்வளவு தூரம் சாத்தியமாகப் போகிறது? தொடர்ந்து தாக்குப் பிடிக்குமா? என்பதே கேள்வியாக இருக்கிறது.

எழுத்தாளர் கடத்தல்: சோடிக்கப்படும் குற்றங்கள்!





என்.சரவணன்

எங்களோடு வர இருந்தவரும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் மும்முர­மாக இருந்தவருமான நண்பர் மது கைது செய்­யப்­­பட்டுள்ள அவலகரமான நிலையி­லேயே நாங்­கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்­கிறோம். இப்படிப்பட்ட நிலை தொடர்ந்து கொண்டி­ருக்கும் நிலையில் எங்களுக்கெல்­லாம் கௌரவிப்பு எதற்கு? இப்படிப்பட்ட நிகழ்ச்சி தான் எதற்கு? நாங்கள் இந்த நிகழ்ச்சியையே நடத்தாமல் எமது எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும்...”

இவ்வாறு சிறந்த சிறுகதைத் தொகுதிக்­காகக் திருமலை­­­­­­யில் நடந்த தமிழ் இலக்கிய விழாவின் போது கௌரவிக்கப்பட்ட மு.பொன்­­னம்­பலம் அவர்கள் அங்கு பேசும் போது தெரிவித்தார். மு.பொவின் இந்தப் பேச்சு இன்றைய எமது அவலத்தைத் துலாம்­பரமாக எடுத்துக் காட்டியது. மு.பொவின் இந்தப் பேச்சு அந்த மேடை­யிலிருந்த சிலருக்கு நாரசமாய் இருந்திருப்­பினும், பெரும்பாலானோர் அதனைத் தமது இதயத்தின் குரலாகவே கண்டனர். மு.பொ. பேசி முடிந்ததும் அவரிடம் முனைவர் அரசு நீங்கள் இதனை இந்த இடத்தில் தெரிவிக்கா­மல் இருந்திருந்தால் நான் தெரிவித்திருப்பேன் என்றார்.

விபவி மாற்று கலாசார நிலையத்­தினரால் வெளியிடப்படும் செய்தி இதழின் ஆசிரியரும், சரிநிகரில் இலக்கியப் பத்தி­களை எழுதி வருபவரும், இலக்கிய எழுத்­தா­ள­ரு­மான தெ.மது­­சூதனன் கைது செய்யப்பட்டு ஒரு வாரமும் தாண்டி விட்டது.

இதுவரை பொலிஸ் தரப்பில் கைதுக்­கான காரணம் எதுவும் உத்தியோக­பூர்வமாகத் தெரிவிக்­கப்படவில்லை.

கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி மாலை 5.50 மணியளவில் தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த முனைவர் வி.அரசு, மற்றும் ராஜேந்திரம் ஆகியோருடன் காலி வீதியில் ”ஹோலி பெமிலி கொன்வன்ட்” பாடசாலைக்கு அருகில் வைத்து இனந்­தெரியாத சிவில் உடை தரித்த நபர்க­ளால் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார் மதுசூதனன்.

இந்தக் கைது எப்படி நடந்தது? பேராசிரியர் அரசு இப்படி விளக்குகிறார் நானும் என்னுடன் தமிழ்­ நாட்டிலிருந்து வந்திருந்த பேராசிரியர் இராஜேந்திரனும் நண்பர் மதுவுடன் பம்பலப்பிட்டி கிறீன்ஸ­்லண்ட் ஹோட்ட­லி­லி­ருந்து புறப்பட்டு காலி வீதியில் உரையாடியபடி நடந்து வந்து கொண்டிருந்தோம். கொன்­வென்ட்­க்கு அருகில் வந்து கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் திடீரென்று மதுவின் தோளில் கையைப் போட்டுப் பிடித்துக் கொண்டார் முதலில் மதுவின் கையைப் பிடித்தவர் அவருக்கு மிக நெருக்கமான நண்பர் யாரோ என நினைத்த போதும் மறுகணமே அந்தப்பிடி ஒரு பொலிசாருடைய பிடி என்பதை உணர்த்திற்று. நாம் சுதாகரித்துக் கொள்ள முன்னரே அவர் ஜீப்பினுள் ஏற்றப்பட்டர். மதுவைப் பிடித்து ஏற்றியவர் வெள்ளை நிற ரீ சேர்ட்டும் நீல நிற முழுக்­காற்சட்டையும் அணிந்திருந்தார் ஜீப்பினுள் இருந்த ஏனை­யோர் சீருடையில் இருந்திருக்­கிறார்கள். கணநேரத்துள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. நாங்கள் அதிர்ந்து போனோம்.

பிறகு என்ன நடந்தது?

பொலிஸ் நிலையங்களுடனும், மனித உரிமைகள் அமைப்புகள் பலவற்றுடனும், தமிழ்-சிங்கள அரசியற் தலைவர்களுடனும், பத்திரிகையாளர் அமைப்புகள், வழக்கறி­ஞர்கள், மனித உரிமையாளர்கள் என்போ­ரால் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் கூட ஏறத்தாழ 17 மணித்தியாளங்கள் வரை ”மது” யாரால் கொண்டு செல்லப்பட்டார்? எதற்காகக் கொண்டு செல்லப்பட்டார்? எங்கு வைக்கப்பட்­டி­ருக்கிறார் என்பதை அறிய முடியாதிருந்தது.

பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொள்­ளுப்­பிட்டி, கிருலப்பனை, நாரஹேன்பிட்டி என்று ஒவ்வொரு பொலிஸ் நிலையமாக விசாரித்த போதும் தாம் கைது செய்ய­வில்லை என்றும், தமக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்றுமே பதில் கிடைத்தது. இடையில் ஒரு தடவை­­ பம்பலப்பட்டி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்­பட்டி­ருக்கிறார் என்கின்ற ஆறுதல் செய்தியும் கூட பின்னர் விசாரித்ததில் பொய்யானது.

இறுதியில் மறு நாள் ஒரு பத்திரிகை­யாளர் மூலமாக பேலியகொட பொலிஸில் தடுத்து வைக்கப்­பட்டுள்ளதாகத் தெரிய வந்தது. தகவ­ல­றிந்து மதுவைப் பார்க்கச் சென்ற தகப்ப­னாரை சந்திக்க பொலிஸார் விடவும் இல்லை. கைதுக்­கான காரணம் எதனையும் தெரிவிக்க­வுமில்லை.

கைது செய்யப்பட்ட அன்று புதிதாக ஜனாதிபதியால் தலைமை தாங்கும் வகையில் அமைக்­கப்பட்ட தொல்லைத் தவிர்ப்பு குழு­வுக்கு, மனித உரிமைகள் நடவடிக்கைக் குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்று­டன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போதும் தொலைபேசியை எடுக்க அங்கு எவரும் இருக்கவில்லை. ஆயினும் அக்­குழுவின் உறுப்பினர் ஒருவரூடாக அவர்களு­க்குத் தகவல் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் மது மீது தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

28ஆம் திகதியன்று தொடக்கம் மது 6ஆம் மாடிக்கு சீ.ஐ.டி.யின் தலைமை­யகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று வரை அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை திறந்த பல்கலைக்­கழகத்தில் கற்கும் மதுவின் இரு சகோதரர்­களும் வீட்டில் வைத்து மது ராகவன் (23), மது சொருபன் (22) கைது செய்யப்பட்டு அவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்­பட்டுள்ளனர்.

இது குறித்து மனித உரிமைகள் நடவடிக்­கைக் குழு எனும் அமைப்பு சர்வ­தேச ரீதியில் பல மனித உரிமைகள் அமைப்பு­களுக்கு தெரிவித்து ஜனாதிபதி, ஜனாதிபதி­யின் செய­லாளர் பாலபட்டபந்தி, தொல்லைத் தவிர்ப்பு குழுவின் செயலாளர் அமைச்சர் லக்ஷ்மன் ஜயக்கொடி போன்றோரின் விலாசம், பெக்ஸ் இலக்கம் என்பவற்றை வெளியிட்டு, இந்த மோசமான அடிப்படை உரிமை மீறலை எதிர்­த்து பொறுப்புமிக்கவர்களை நடவ­டிக்கை எடுக்­கக் கோரும்படி சகல மனித நேய அமைப்­புகளையும் வேண்டி இன்டர்­நெட், மற்றும் ஈ.மெயில் என்பவற்றுக்கூடாக சர்வதேச ரீதியில் முயற்சிகளை மேற்கொண்­டுள்ளது.

இதனைச் செய்து இரு நாட்களுக்குள் அதாவது செப்டம்பர் 1ஆம் திகதியன்றி­லிருந்து ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழு ”அக்கடிதம் தங்களுக்கு கிடைத்­தமை குறித்­தும் அதன்மீது முறைப்­படி நடவடிக்கை எடுக்­கத் தொடங்கி­யிருப்பதாகவும் மேற்படி இயக்­கத்­துக்கு பதிலளித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த இனவெறிக்கெதிரான கலைஞர்கள் (Artists Against Racism) என்ற அமைப்பு தம்­மு­­­­டன் தொடர்புடைய அமைப்பு­களுக்­கூடாக இதனை மேற்கொள்வதாகவும் மேலதி­கமாக தெரிவிக்க வேண்டிய சர்வதேச அமைப்புகளின் முகவரிகளையும், இன்டர்நெட் வெப்தள மற்றும் ஈ.மெயில் விலாசங்களையும் கொடுத்துள்ளது.

இது போன்ற இன்னுமொரு அறிக்­கையை தொல்லைத் தவிர்ப்புக் குழுவுக்கு அனுப்பி வைத்­துள்ள சுதந்திர பத்திரிகை­யாளர் இயக்­கம் சகலரையும் விழிப்புடன் இதனை கண்டி­க்கும்படி கோரியிருக்கிறது. இவ்வமைப்­பும் மேற்படி கண்டனங்களை தொடர்புசாதன அமைச்சர் மங்கள சமரவீர­வுக்கும், நீதி அமைச்சர் ஜீ.எல்.பீரிசுக்கும் அறிவிக்கும்படி கோரி அவ்வறிக்கையில் அமைச்சர்களின் விலாசங்களைக் குறிப்­பிட்டுள்ளது.

வழமைபோல சிங்கள பத்திரிகைகளின் அழுத்தம் அக்கறை குறைவான போதிலும் இந்தளவு ஆதரவுச் சக்திகளும் இருப்பது தமிழ் பத்திரிகையாளர்களை ஓரளவு நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

மதுவை விடுதலை செய்வதற்கு இவ்வளவு முயற்சிகள் செய்யப்பட்டு வரும் இதே வேளை பொலிஸார் தரப்பில் புதிய புதிய சோடனைக் கதைகள் மாறி மாறி வெளிவந்து கொண்டிருக்கின்றன. உத்தி­யோகபூர்வமாக இதுவரை எதனையும் தெரிவிக்காத பாதுகாப்­புத் துறையினர் வெவ்வேறு தரப்பினருக்கு தொpவித்­துள்ள கருத்துக்கள் வேடிக்கை­யானவை. ஆரம்பத்­தில் தமிழ் நாட்டிலிருந்து இலங்கை வந்த பேராசிரியர்களை புலிகளின் பிரதேசங்­களுக்கு அழைத்துச் செல்வதாக தொலை­பேசியின் மூலம் உரையாற்றியதை தாங்கள் பதிவு செய்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்­ளனர். ஆனால் முனைவர் அரசு அவர்களிடம் இது குறித்து வினவிய போது ”நான் வந்தது தொடக்கம் அவரை தொலை­பேசியில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசி­யமே இருக்கவில்லை. மது எங்களுடன் தான் அதிக நேரம் இருந்தார். பின்னர் எப்படி தொலை­பேசி உரையாடலை பதிவு செய்த­தாக தெரிவிப்பர்? அது நிச்சயம் பொய்..!” என்றார்.

கைது செய்யப்பட்ட பாதாளலோக நபர் ஒருவருக்கும் மதுவுக்கும் தொடர்பு இருக்­கிறது. அதனால் தான் மது கைது செய்யப்­பட்டதாக இன்னொரு தகவல் வெளியிடப்­பட்டிருக்கிறது.

புலிகளுடைய அரசியற் பிரிவுக்கும் மதுவு­க்கும் தொடர்பிருப்பதாக இன்னொரு தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இறுதியாகக் கிடைத்த இன்னொரு தக­வல் பொலிஸார் எவ்வாறு மொட்டந் தலைக்­கும் முழங்காலுக்குமிடையே முடிச்­சுப் போடு­வார்கள் என்பதை விளக்குகிறது. தமிழ்­நாட்டிலிருந்து வந்திருக்கும் பேராசிரியர் இரா­ஜேந்திரன் தி.மு.க கருணாநிதிக்கு நெருக்க­மானவர். கருணாநிதி திராவிட கழக நெடு­மாற­­னுக்கு நெருக்கமானவர். நெடு­மாறன் புலிக­ளுக்கு நெருக்கமானவர். ஆக, மதுவுக்­கும் புலிகளுக்கும் உறவு இருக்­கிறதாம். எப்படி இருக்கிறது பொலிஸா­ருடைய கன்டுபிடிப்பு?

இவையெல்லாம் மதுவைக் காரண­மின்றிக் கைது செய்த பொலிஸார் ஏதாவது காரணம் ஒன்றைச் சோடிக்க முயல்வதைக் காட்டுகிறது அல்லவா?

இது மதுவுக்கு மட்டும் நேரும் விடயம­ல்ல. இன்று கைது செய்யப்படுகிற பெரும்­பாலான தமிழ் இளைஞர் யுவதிகளிள் நிலையும் இது தான்.

கைது செய்யப்படும் போது கைதுக்­கான காரணத்­தைத் தெரிவிக்கும் பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும், கைது செய்யப்படுபவர் காரண­மின்றி தடுத்து வைக்கப்படுதல் தவிர்க்­கப்பட வேண்டும். கைது செய்யப்பட்டவரை அவருடைய நெருங்கிய உறவினரோ, சட்டத்­தரணியோ பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுக் கொண்டே போகும் அப்பாவிகள் தண்டிக்கப்படலாகாது எனும் நோக்கிலான விடயங்கள் எவையும் இன்ன­மும் கடைப்பிடிக்கப்படுவதாகத் தொpய­வில்லை. இலங்கையில் பணியாற்றும் மனித உரிமை நிறுவனங்களும் இது தொடர்பாக அவை விடுத்த அறிக்கைகளையும், மேற்­கொண்ட நடவடிக்கை­களையும் அரசு கண்டு கொண்ட­தாகவே தெரியவில்லை.

இலங்கையின் சிங்கள பௌத்த பேரின­வாத அரசிடம் - அது எவ்வளவு தான் மனிதா­பிமான முகமூடியை அணிந்து கொண்ட போதும் - நீதியை எதிர்பார்ப்பது மடமை அல்லவா என்று நீங்கள் சொல்வது புரிகிறது.

இதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி!

அரட்டுவ தரகு முதலாளித்துவ பத்திரிகை?


என்.சரவணன்

”இலங்கையின் முதலாவது பொருளியல் பத்திரிகை” என்கின்ற தடித்த எழுத்துடன் சேர்த்து ”அரட்டுவ” என்கின்ற பெயரில் வாராந்தப் பத்திரிகையொன்று நவம்பர் தொடக்கம் கொழும்பிலிருந்து வெளிவரத் தொடங்கியிருக்கிறது.

பொருளியல் விவகாரங்களை வெளிக் கொணர்கிற அரட்டுவ என்கின்ற இந்தப் பத்திரிகையின் தமிழ் அர்த்தம் ”மரவைரம்” என்பதே.

உண்மையிலேயே இந்தப் பத்திரிகை பொருளியல் விவகாரங்களைப் பற்றிப் பேசுவதற்கென்றே உருவாக்கப்­பட்டிருக்கிற பத்திரிகை தான். உள்ளூர் வெளியூர் பொருளியல் நிலமைகள், அதன் தந்திரோபாயங்கள் மற்றும் அவை குறித்த செய்திகள், பேட்டிகள், ஆய்வுக் கட்டுரைகள், சந்தை நிலவரங்கள் என்பனவற்றை வெளியிட்டு வருகிறது. சுருக்கமாகக் கூறுவதானால் இந்தப் பத்திரிகை இலங்கையின் உள்ளுர் முதலாளிமார் சிலரின் சந்தை வாய்ப்புகளை பலப்படுத்துகின்ற வகையில் தங்களின் பலத்தை வெளிக்காட்டுவதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள பத்திரிகையென்பதையே காட்டுகிறது.

”சர்வதேச வலைப் பின்னலுடன் (internet) இணைத்துக் கொண்ட இலங்கையின் முத­லாவது பொரு­ளியல் பத்திரிகை” என்று ஆசிரியர் தலை­யங்கப் பகுதியில் குறிப்பி­டப்பட்டுள்ளது. அதன் வெப் தளத்தின் விலா­சம் WWW.waratuwa.lk என்று குறிப்பிட்டுள்ளது.

அதே ஆசிரியர் தலையங்கப் பகுதியில் ஆசிரியரின் பெயருக்கு முன் ஆரம்பகர்த்தா-'லலித் கொத்தலாவல' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது உங்களுக்கு ஓரளவு பின்னணி விளங்கியிருக்க வேண்டும்.

லலித் கொத்தலாவல வேறு யாருமல்ல செலிங்கோ நிறுவனம், செய்லான் வங்கி, புளு டயமன்ட் நிறுவனம் என இலங்கையின் முக்கிய பல நிறுவனங்களின் இயக்குனரும் இலங்­கையின் முதன்மை தொழிலதிபர்களில் ஒருவருமான இவர் பொருளாதாரத் துறையில் மாத்திரமல்ல சமீப காலமாக அரசியல் விவகாரங்களிலும் பேசப்படுபவர்.

லலித் கொத்தலாவல-பின்னணி

இனப்பிரச்சினையில் சகல கட்சிகளையும் இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியெனக்கூறி சர்வகட்சி மாநாடு, பேச்சுவார்த்தை சமரச முயற்சியென ஆரவாரங்களைப் புரிந்து கொண்டிருந்த வர்த்தக சமூகத்தின் தலைவரும் இவர் தான். இலங்கை அரசின் ”தேசமான்ய” விருதினைப் பெற்றவர். இதைத் தவிர இவரைப் பற்றி எவரும் அறியாத கதையொன்றும் உண்டு. சிங்கள வீரவிதான இயக்­கத்துடன் மறைமுகமாக பணிபுரிகின்ற முக்கிய தொழிலதிபர்களில் இவரின் பெயரும் உண்டு. ஆனால் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் இறங்கியிருக்கும் வர்த்தக சமூகத்துடன் இவரும் இறங்கியிருந்தபடியால் இவருக்கும் சிங்கள வீரவிதான இயக்கத்துக்கும் உறவு தற்போது சுமுகமாக இல்லையென்கின்ற கதையும் அடிபடுகின்றது.

இந்தப் பத்திரிகையில் தொடர்ச்சியாக வர்த்தகப் பிரச்சினைகள் எனும் பகுதியில் வர்த்தக முயற்சியில் ஈடுபட்டுள்ளோரின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் லலித் கொத்தலாவல. தனது வர்த்தக நிறுவனங்கள் அனைத்தினதும் விளம்பரங்கள் இதில் இடம்பெறுகின்றன. 12 (Droadsheet size) பக்கங்களில் நான்கில் ஒரு பகுதி இப்படியான விளம்பரங்களைக் கொண்டுள்ளன.

ஏன் திடீரென்று இப்பத்திரிகையை இவர் ஆரம்பிக்க வேண்டுமென்கின்ற கேள்விக்கு பல்வேறு கதைகள் உண்டு.

94 மாயையும்
பத்திரிகைகளின் வீழ்ச்சியும்

இது ஒரு கிளர்ச்சி அலை உள்ள காலமாக இல்லை. முன்னர் பிரேமதாச காலத்தில் இருந்த ஒருவித கிளர்ச்­சித்தனமான ஆரவாரமான அரசியல் ஆர்வமும் உணர்ச்சிமி­குந்ததுமான காலமாக இது இல்லை. 94இல் பொது ஜன ஐக்கிய முன்னணியை பதவியில் அமர்த்துவதில் பாரிய பாத்திரத்தை பத்திரிகைகளும், வெகுஜன மற்றும் தன்னார்வ இயக்கங்களும், புத்திஜீவிகளும் ஆற்றியிருந்தனர். அந்த மாயையிலிருந்து இன்னும் விடுபடாதோர் பலர். இந்த அரசாங்கத்தை அம்பலப­்படுத்துவது தங்களின் முன்னைய நிலைப்பாட்டை சந்தேகிக்கச் செய்யும் என்றும் நேர்மையாக ஒத்துக்கொள்வதை கௌரவப் பிரச்சினையாக கொண்டும் இன்னும் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கும் தரப்பினர் சிலர். இவர்கள் வெறும் தனிநபர்களாக மாத்திரமல்ல அமைப்பு ரீதியான சக்திகளாகவும் உள்ளனர்.

இப்படிப்பட்ட சக்திகள்-குறிப்பாக வெகுஜன-தன்னார்வக் குழுக்கள்- மக்களின் போராட்ட குணாம்சங்களை கேலிக்கூத்தாக்குவதில் முக்கிய பாத்திரத்தை ஆற்றியுள்ளன. 94 அலைக்குப் பின்னர் காத்திரமான போராட்டங்களை இது வரை இந்த சக்திகள் நடத்தியதில்லை. ஆர்ப்பாட்டம் என்கின்ற பெயரில் சர்வதேச நினைவு தினங்களில் செய்யப்படும் ஆர்ப்பாட்­டங்களைக் கூட காலாகாலத்தில் நடைபெறும் சம்பிரதாய மதச் சடங்குகளைப் போல ஆக்கி அவற்றின் காத்திரத்தை இழக்கச் செய்து மக்களை சலிப்படையச் செய்வதில் இச்சக்திகள் ஆற்றிய பாத்திரம் அபாரமானது.

இப்படிப்பட்ட சலிப்பும், வெறுப்பும், ஆத்திரமும் இந்த கட்டமைப்பை நோக்கியும், இக்கட்டமைப்பை பாதுகாக்கின்ற இயந்திரங்களின் மீதும் மையப்படுத்தக்கூடிய, மையப்படுத்த வேண்டிய முக்கிய சக்திகள் அனைத்தும் அரசாங்கத்தை பாதுகாக்கின்ற நிலையில் மக்களை விழிப்பூட்டுவதற்கான வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்­பட்டதாகவே உள்ளது. அல்லது முட்டுக்கட்டை போடப்பட்டதாகவே உள்ளது. இந்த நிலையானது அத்தனை துயரங்களும் உருமறைப்பு செய்யப்பட்டு மக்களின் போராட்ட அலை தணிக்கப்பட்டு ஒரு இன்று கிளர்ச்சிகர அலைக்குhpய காலமாக இல்லாமல் ஆக்கிவிட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலை பத்திரிகைகளின் விற்பனை வீழ்ச்சிக்கும் காரணமானது. பிரேமதாச காலத்தில் அறுபதினாயிரம் பிரதிகள் வரை விற்பனையான மாற்றுப்பத்திரிகைகள் இன்று பத்தா­யிரத்துக்கும் குறைவாக ஆகியிருப்பதும் இதன் விளைவாகவே. சகல பத்திரிகைகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டது. எனவே அப்படி ஒரு கிளர்ச்சிகரமான சூழல் அமையப்படாத நிலையில் வெகுஜன-அரசியல் மற்றும் செய்திப் பத்திhpகைகளின் ஆரம்பிப்புகள் வர்த்தக நோக்கமற்றவையாகத் தான் இருக்க முடியும். விற்பனையை இலக்காகக் கொண்டு இந்தச் சூழலில் பத்திhpகைகள் தொடங்கப்படுவதென்பது சந்தை நிலைவரத்தை சரியாக அறியாததாகத்தான் இருக்க முடியும். மேலும் அப்படி தொடங்கப்படுபவை ஏலவே உள்ளவற்றிலிருந்து மாறுப்­பட்டிருப்பதும் நிபந்தனைக்குரியவை. இருப்பனவற்றை செய்ய இன்னொன்று எதற்கு?
புதிய வரவு எதன் அறிகுறி?

எனவே இப்படிப்பட்ட நிலையில் பத்திhpகைகள் பலவற்றின் வரவு ஆச்சிரியத்தை ஊட்டுகின்றன. சில பத்திhpகைகள் புதியனவற்றைத் தொடுகின்றன. இவை ஓரளவு இருப்புக் கொள்கின்றன. ஆனால் சமீப காலமாக சிங்களச் சூழலை எடுத்துக் கொண்டால் புதிதாக முளைக்கின்ற பல பத்திரிகைகள் ஏனையவற்றிலிருந்து பெரிதாக மாறுபடவில்லை. வாராந்தப்பத்திரிகைகள் மாத்திரம், ச(த்)திய, யுக்திய, ராவய, சத்தின, நிதஹாச, அரட்டுவ... என பத்திரிகைகள் பல வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதை விட மாதமிருமுறை, மாதாந்தம் என்றும் வேறு பத்திரிகைகளும், பல சஞ்சிகைகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் அரட்டுவ பத்திரிகையின் தோற்றம் நிச்சயமாக வர்த்தக நோக்கைக் கொண்டிருக்க முடியாது. விளம்பர அல்லது வேறு அரசியல் நோக்கங்களுக்காகத் தான் இருக்க முடியும். டிசம்பர் 11ஆம் திகதியிலிருந்து மாதாந்தமாக வெளிவரத் தொடங்கியிருக்கும் ”சத்தின' எனும் இன்னுமொரு பத்திரிகையின் நோக்கத்தைத் தேடிப்பார்த்த போது சுனில் அபேவர்தன என்பவர் (இவர் முன்னாள் நவ சமசமாஜக்கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் குசலா அபேவர்தனவின் மகன். இன்று இலங்கைக்கான கோக்காகோலா கம்பனியின் பெருமளவு பங்குகள் இவருக்கு உரியது. இவர் இப்பத்திரிகையைத் தவிர ”நிதஹச” (சுதந்திரம்) மற்றும் ”Independent” எனும் பெயரில் கலரில் 40 கிராம் வெள்ளைத்­தாளில் ஆங்கில வாராந்தப் பத்திரிகையையும் தொடக்­கியிருக்கிறார். இது ஒக்டோபரில் இருந்து வெளி­வரத் தொடங்கியுள்ளது.) தான் எதிர்கால அரசியல் நுழைவுக்கு களமமைக்கின்ற நோக்கிலேயே இந்த பத்திரிகைகளை தொடக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வகையில் அரட்டுவ பத்திரிகைக்கும் நிச்சயம் ஒரு நோக்கமுண்டு. அந்த நோக்கம் தனது வர்த்தக ஏகபோகத்தை சுயவிளம்பரம் செய்கின்ற நோக்கமாகவும் இருக்கலாம், அல்லது எதிர்கால அரசியல் நோக்கங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம். ஏற்கெனவே சிங்கள வர்த்தகர்களைப் பலப்படுத்துவதே தமிழ்த் தேசியத்தை வீழ்த்த முக்கிய ஆயுதமென்று சிங்கள வீரவிதான இயக்கம் நாடளாவிய ரீதியில் சிங்கள வர்த்தகர் சங்கங்களை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் பயங்கரவாத பூச்சாண்டித் தனத்தைப் பயன்படுத்தி தமிழ் வர்த்தகர்களை விரட்டுவது, விட்டுவிட்டு ஓடச்செய்வது, அவற்றைக் கைப்பற்றுவது, புதிய தமிழ் வர்த்தகர்களுக்கான வாய்ப்புகளை கிடைக்­­காமல் செய்வது என அவ்வி­யக்கம் ஏற்கெனவே பணிகளை ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் சிங்கள வர்த்தகர்களைப் பலப்ப­டுத்துகின்ற அந்த தந்திரோபாயங்களில் ஒன்று தான் இந்த அரட்டுவ பத்திரிகையா என்கின்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் பெண் தொழிலாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், பெரு முதலாளிகள், என பல தரப்பினரது கட்டுரைகள், வெளிவந்திருக்கின்றன. ஆனால் இது வரை வெளிவந்துள்ள ஐந்து இதழ்களில் தமிழ்-முஸ்லிம் வர்த்தகர்களைப் பற்றியோ தமிழ் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் இனவாத சிக்கல்கள் குறித்தோ எதுவும் எழுதப்படாதது இந்த சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன.

மூலதனத்துக்கு ஆபத்து?

திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு இந்த வருடத்தோடு 20 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 20 வருடகால விளைவாக இலங்கை அந்நியநாடுகளின் முதலீடுகளை நிபந்தனையின்றி திறந்துவிட்டுள்ளது. இன்று மனித வளம், இலங்கையின் கனிய வளம் என இலங்கையின் தேசிய சொத்துக்கள் அத்தனையும் அந்நியருக்கு சுரண்ட வழிதிறந்துவிடப்பட்டுள்ளமையானது உள்ளூர் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரை அந்நிய முதலீட்டாளர்களுடன் கூட்டு சேர்ந்து சுதேச சொத்துக்களை தாரைவார்த்துக் கொடுக்கின்ற தரகர்களாக ஆக்கியது. உற்பத்தித்துறையைச் சார்ந்த உள்ளூர் முதலாளிகளையும் பல்தேசிய தரகு முதலாளிகளாக ஆக்கியது. இப்படிப்பட்ட தரகர்களில் ஒருவரே இந்த லலித் கொத்தலாவல.

அண்மைய இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் வர்த்தக சமூகத்தின் முயற்சியையும் கூட இந்தப் பின்னணிகளோடு தான் நோக்க வேண்டியுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை வன்முறைகள், குண்டு வெடிப்புகள், யுத்த நெருக்கடிகள் என்பற்றின் காரணமாக வெளிநாட்டு (கூட்டு) மூதலீடுகளுக்கான ஆபத்து நேர்ந்துள்ளது. இதன் காரணமாக இலங்கை எனும் சந்தை மட்டும் பாதிக்கப்படவில்லை. அவர்களின் மூலதனமும் சேர்த்து பாதிக்கப்படுகிறது. எனவே தான் இன்று தவிர்க்க முடியாமல் இந்த முதலாளித்துவ வர்க்கத்தினர் (அந்நிய முதலீட்டாளர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவும்,) தவிர்க்க இயலாமல் நேரடியாகவே அரசியலில் தலையிட வேண்டியவர்களாக ஆகினர். அதன் விளைவு தான் வர்த்தக சமூகத்தின் சர்வ கட்சி மாநாடு மற்றும் இத்தியாதிகள்.

லலித் கொத்தலாவல மத்திய வங்கி குண்டு வெடிப்பின் போது செலிங்கோ நிறுவனத்தில் வைத்து காயப்பட்டு இரத்தம் சிந்தியவரென்றும், அவரது ஒரு கண் அதிகம் பாதிக்கப்பட்டதென்றும் எனவே அவரால் இனப்பிரச்சினையின் கோரத்தை நேரடியாகவே அனுபவிக்க முடிந்தவர் என்றும் ”சர்வகட்சி மாநாட்டு” முயற்சிகளில் இவரின் பாத்திரமும் அந்தப் பின்னணிகளைக் கொண்டது என்றும் கூறுகின்ற சிலரும் உள்ளனர். ஆனால் முதலாளித்துவத்தின் வடிவத்தையும் அதன் தந்திரோபா­யங்களையும் விளங்கிக்கொள்கின்ற எவருக்கும் அவை காரணங்­களாக இராது.

இப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு முதலாளியால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பத்திhpகையையும் அவரின் பின்னணி பணிகளையும் முதலாளித்துவக் கூட்டு தனது மூலதனத்தை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் குறித்தும் அவதானம் கொள்வதன் மூலமாக இந்த பத்திhpகையின் வரவை ஓரளவு விளங்கிக் கொள்ள முடியும்.

இதே வேளை ஒன்றைக் குறிப்பிட வேண்டும். தமிழ் சிவிலியன்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் எப்படி சிங்களப் பத்திரிகைகளில் பேசாப்பொருளாக வைத்திருக்கும் பெரும்போக்கு தொடர்கின்றதோ அது போல தமிழ் பத்திரிகைகளில் இது தங்களின் தேசம் என்கின்ற உணர்வுக்கு வாய்ப்பற்றவர்களாக ஆக்கப்­பட்டதனாலோ என்னவோ ”ஒட்டு மொத்த” இலங்கையின் தேசிய அபிவிருத்தி, பொருளாதாரம் போன்ற விடயங்களும் தமிழ்ச் சூழலில் பேசாப்பொருளாக இருக்கின்றன. சிங்களப் பத்திரிகைகளில் தேசிய அபிவிருத்தி, தேசிய சீரழிவுகள், தேசிய பொருளாதாரம் சிவில் நிர்வாகம் என்பன குறித்து அதிகம் பேசப்படுகிற அதே வேளை தமிழ் பத்திரிகைகளில் இவை குறித்து அதிகமாக அலட்டிக்கொள்ளாத போக்கை எவரும் அடையாளம் காணலாம்.

அந்த வகையில் இந்த அரட்டுவ எனும் பத்திரிகையின் வரவு மேற்கூறிய காரணங்களோடு சிங்களச் சூழலில், பொருளாதாரம் குறித்த விடயத்தை மட்டுமே பேசுபொருளாக்கியிருக்கும் தனிப்பத்திரிகையாகவும் கொள்ளலாம்.

பத்திரிகையாளர்கள் தடுத்து வைப்பு!




என்.சரவணன்

கடந்த 9ஆம் திகதி இரத்தினபுரியிலுள்ள தோட்டப்பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களைப் பற்றி செய்தியிடவென அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டதுடன் அவர்கள் தமது கடமையை செய்வதற்கு இடையூறாகவும் இருந்துள்ளனர்.

செப்டம்பர் 24ஆம் திகதி கொழும்பிலிருந்து இரத்தினபுரி நோக்கி சரிநிகர் பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் இருவரும், இன்போர்ம் நிறுவனம் (INFORM), மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (Center for Policy Alternative), மனித உரிமைகள் செயலணி (Human Rights Action Committee), ஆகியவற்றின் பிரதிநிதிகளும் ஹிரு பத்திரிகையைச் சேர்ந்த ஒருவருமாக ஆறு பேர் சென்றிருந்தார்கள்.

வேவல்வத்தைப் பிரதேசத்தில் தகவல்களை சேகாpத்துக் கொண்டிருந்த போது தோட்ட உதவி சுப்பிரின்டன்ட் ஒரு கூட்டத்துடன் அங்கு வந்து, பத்திரிகையாளர்கள் எவரையும் அனுமதிக்க முடியாது என்றும், இராணுவத்தின் அனுமதியைப் பெற்று வரும்படியும் சத்தமிட்டார். இதைத் தொடர்ந்து, அருகிலிருந்த வேவல்வத்தை பொலிஸ் காவல் நிலையத்தில் அனுமதியைப் பெறுவதற்குச் அப்பத்திரிகையாளர்கள் சென்றிருந்த போது, பொலிஸார் புகைப்படம் எடுக்கவோ வீடியோ எடுக்கவோ கூடாது என்று உத்தரவிட்டுவிட்டு போக அனுமதித்தனர். (ஏற்கெனவே பலர் சென்று எடுத்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகிருந்தன என்பது கவனிக்கத்தக்கது.)

ஆனாலும், பொலிஸார் இவர்கள் போகுமிடமெல்லாம் பின்தொடர்ந்தனர். அவர்கள் தகவல்களை திரட்டிக் கொண்டிருந்த போதெல்லாம் பொலிஸாரும் கூட இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சொந்த அவலங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த இது பெரும் தடையாக இருந்தது. பத்திரிகையாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாகச் செய்யவும் இது பெரும் இடையூறாக இருந்தது.

பிற்பகல் 1.30 மணியளவில் ஒரு பொலிஸ்காரர் இவர்களிடம் வந்து ”சொல்லியும் கேளாமல் நீங்கள் புகைப்படங்கள் எடுத்திருக்கிறீர்கள் உடனேயே உங்களை ”மாத்தையா” வரச்சொன்னார்...” என அழைத்துச் சென்றனர். பத்திரிகையாளர்கள் பொலிஸ் நிலையத்தை அடைந்த போது, அவர்களுடன் உரையாடியவர்கள் மற்றும் அவர்களின் தகவல் திரட்டலுக்கு உதவி செய்தவர்கள் எனப் பலரும், பொலிஸ் நிலையத்திற்கு கைது செய்து கொண்டு வரப்பட்டிருந்தனர்.

அவர்களின் முன்னிலையில் அந்நிலையத்தின் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் பனாகொட எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், ”நீங்கள் புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள்” எனக் கூறி சத்தம் போட்டதுடன் அவர்களால் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் அடங்கிய ஒலிப்பதிவு நாடாக்களை பலவந்தமாக பறித்துப் போட்டுக் கேட்டார். அவர் அப்படிக் கேட்டுக் கொண்டிருக்கையில் அந்த ஒலிப்பதிவு நாடாவில் பத்திரிகையாளர்களுக்கு வாக்குமூலமளித்தவர்களில் சிலரும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

சில மணி நேரங்களாக அங்கு தடுத்துவைக்கப்பட்டதன் பின் அவர்களை போகுமாறு கூறி, ஒலிப்பதிவு நாடாக்களை திருப்பிக் கொடுத்தனர்.

-பத்திரிகையாளர்களின் பின்னால் பொலிஸாரை பின் தொடரவைத்ததன் மூலம் சுதந்திரமாக அவர்களை தரவுகள் சேகரிக்க விடாததுடன்,

-பாதிக்கப்பட்டவர்கள் நடந்ததை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் தடையாக இருந்தனர்.

-இறுதியில் புகைப்படமெடுத்த குற்றச்சாட்டின் பேரில் பத்திரிகையாளர்களை தடுத்து விசாரித்தது மட்டுமன்றி

-அவர்களின் தனிப்பட்ட விபரங்களையும் பொலிஸில் பதிவு செய்து கொண்டனர்.

-அவர்களுக்கு தகவல் தந்தவர்களையும் பொலிசுக்கு கொண்டு வந்து விசாரித்ததுடன், நம்பிக்கையின் பேரில் அவர்களுக்கு மட்டுமேயென வழங்கப்பட்ட கருத்துக்களையும், தகவல்களையும் அடக்கிய பதிவு நாடாக்களை நிர்ப்பந்தமாக போட்டுக் கேட்டனர். இது பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமையில் தலையிடும் ஒரு விடயம் என்கின்ற அதேவேளை, தகவல் தந்தவர்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்தை இது விளைவிக்கவும் கூடும் என்று நினைக்காமலிருக்க முடியவில்லை.

இந்த ஒலிப்பதிவு நாடாவில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்களில்

1. சம்பவம் நடந்த 9ஆம் திகதியன்று 11 பொலிஸாரின் மேற்பார்வையின் கீழேயே நடந்தது என்றும்,

2. சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தமது காடைத்தனத்தை 5 மணித்தியாளங்களுக்குள், நடத்தி முடிப்பதற்கு பொலிஸாரால் ஆசீர்வாதம் வழங்கப்பட்டிருந்ததாகவும், 5 மணித்தியாளங்களுக்குப் பின்னர் ஏன் இன்னமும் போகவில்லையா என்று அவர்களை நோக்கி பொலிஸாரே கேட்டனரென்றும்,

3. பொலிஸாருக்கும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாகவும், தினமும் இரவில் அவர்களுடன் தான் குடியும் கும்மாளமுமாக இருப்பதாகவும்,

4. இது வரை பொலிஸார் சம்பவத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களில் எவரின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும்
கூறப்பட்ட தகவல்கள் அந்த ஒலிப்பதிவில் உள்ளடங்கும்.

அங்கு சென்ற பத்திhpகையாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் திரட்டிய தகவல்கள் இவ்வன்முறைச் சம்பவத்தில் பொலிசுக்கும் பங்கு இருக்கின்றது என்பது வெளிப்படையாக தெரிவித்துவிடும் என்பதாலேயே அவர்கள் எம்மை இவ்வாறு தடுத்து வைத்தார்கள் என்று கூறுகிறார் அங்கு சென்ற பத்திரிகையாளர் ஒருவர்.

தொட்பூடகச் சுதந்திரம்: இலங்கை 10வது இடத்தில் freedom house அறிக்கை

என்.சரவணன்
இலங்கையில் நடத்தப்பட்டு வரும் இன அழிப்பு யுத்தம், மற்றும் அதன் காரணமாக ஏற்படும் அழிவுகள், இழப்புகள் என்பனவற்றை மூடிமறைப்பதற்கு அரசு செய்தித் தணிக்கையை அமுல்படுத்தி வருகிறது. அரசின் தரப்பில் இதற்கு கூறப்பட்டுவரும் சாட்டு, எதிரிக்கு அரசின் இரகசிய தகவல்கள் கிட்டாமல் செய்வது என்பதே. ஆனால் அரசுடன் போரிட்டு வரும் புலிகளைப் பொறுத்தள­வில் தகவல்களுக்கு இந்த தொடர்பு சாதனங்களை நம்பி இல்லை என்பதை எவரும் அறிவர்.

எனவே இந்த செய்தித் தணிக்கை மக்களுக்குத் தான். இந்தப் போருக்கு முழுக்க முழுக்க மக்களிடம் இருந்து பலாத்காரமாக வரி அறவிடப்­பட்டு வருகிறது. மக்களிடம் இருந்து பலாத்காரமாக வரியைப் பிடுங்கி அப்பணத்தில் யுத்தம் செய்து கொண்டு மக்க­ளுக்கே அது பற்றிய உண்மையை மறைத்து வருகிறது.
சுருக்கமாகச் சொல்லப்­போனால் போரை விலை கொடுத்து வாங்கும் மக்களுக்கு போர் பற்றி அறியத் தடை!

இந்த செய்தித் தணிக்கை­யானது அவசரகாலச் சட்டத்­தின் கீழேயே அமு­லுக்கு கொண்டு வரப்­பட்டுள்ளது. இந்த செய்தித் தணிக்கையின் மூலமாகவே இன அழிப்புப் போரை மூடி மறைத்து வருகிறது அரசு. அப்படியென்­றால் இந்த அவசரகாலச் சட்டத்தை ஆதரிக்கும் தமிழ் கட்சிகளும் மக்களது எதிரிகளா இல்­லையா? அவசரகால சட்டத்துக்கு ஆதரவளிப்­பவர்கள் தணிக்­கைக்குப் பொறுப்பா­னவர்களா இல்­லையா? தணிக்கைக்கு பொறுப்­பானவர்கள் இனஅழிப்பு மூடி­மறைப்புகளுக்கும் பொறுப்­பானவர்களா இல்லையா?

சமீபத்தில் அமெ­ரிக்காவில் அமெரிக்­கன் ப்ரிடம் ஹவுஸ் (Freedom House) எனப்படும் நிறுவனம் உலகின் பல நாடுகளின் தொடர்பூடகக் கொள்கை பற்றி நடத்திய ஒரு ஆய்­வொன்றின் இறுதி அறிக்கையில் இப்படிப்பட்ட போக்குகளை ”தொடர்பூடக மாபியா கொள்கை” (media mafia) என்றே குறிப்பிடுகிறது.

ஆனால் இலங்கையின் தொடர்பு­சாதன அமைச்சர் மங்கள சமவீரவோ ”உலகி­லேயே சிறந்த தொடர்பூடக சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள் இலங்கையில் தான் உள்ளனர்” என்கிறார்.

மேற்படி ஆய்வறிக்கையின்படி உலகிலேயே தொடர்பூடக சுதந்திரத்தை பேணுவதில் இலங்கை 110 இடத்தைத் தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரிடம் ஹவுஸ் நிறுவனம் அமெரிக்க அரசின் அனுசரணையுடன் இயங்கும் ஒரு நிறுவனம் ஆகும். எனவே இந்த அறிக்கை ஒரு வகையில் அமெரிக்க அரசுக்கு சாதகமான அறிக்கையென்றோ அல்லது பக்கசார்பான அறிக்கையென்றோ கருதவும் இடமுண்டு. அதேவேளை அந்த ஒரே காரணத்துக்காக இதனை நிராகரித்துவிடவும் முடியாது. குறிப்பாக இலங்கையின் நடைமுறை பற்றிய அனுபவம் இங்குள்ள அனைவருக்கும் தெரிந்ததே.

ப்ரிடம் ஹவுஸ் இப்படியான அறிக்கைகளை சமர்ப்பித்து அமெரிக்க அரசுக்கு சில விதந்துரைப்புகளையும் செய்வது வழக்கம். உலகின் ஜனநாயக சுதந்திரத்தை விரிவாக்குவதே இவ்வமைப்­பின் நோக்கமெனக் குறிப்பிடப்படுகிறது. அவ்வறிக்கையிலேயே இலங்கைக்கு 110வது இடம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதன்படி அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் என்பவற்றுக்கு வேறுவேறாக புள்ளிகள் வழங்கப்பட்டி­ருக்கின்றன. நான்கு விடயங்கள் குறித்து இந்த இரு வகை ஊடகங்களுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

A= தொடர்பூடகங்களைப் பாதிக்கும் சட்டங்கள்.

B= தொடர்பூடக சுதந்திரத்தின் மீதான அரசியல் தலையீடுகள்.

C=தொடர்பூடகங்களின் மீதான பொருளாதார அழுத்தங்கள்.

D= வன்முறை நடவடிக்கைகள். (தொடர்பூடகவியலாளர்கள் கொலை செய்யப்படுதல், தணிக்கைச் சட்டங்கள், கைதுகள் போன்றவை)

இதில் 0-15 வரை புள்ளிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள நாடுகளுக்கு 0 புள்ளியும், அதிகளவில் வன்முறையான நாடுகளுக்கு 15 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி உலகில் அதிகளவில் மோசமான கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்ட நிலை ஆப்கானிஸ்தானில் இருப்பதாக இவ்வறிக்கையில் கூறப்படுகிறது. மொத்தம் கருத்துச் சுதந்திர நசுக்குதலில் 100 புள்ளிகளையும் அந்நாடு பெற்றிருப்பதாகக் கூறுகிறது. அந் நாட்டின் சகல தொலை­காட்சி மற்றும் வீடியோ இயந்திரங்களை அழிக்க தலிபான் இயக்கம் கட்டளை இட்டுள்ளதுடன், 1996இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் தொலைக்காட்சிச் சேவையை மூடிவிட்­டனர். அந் நாடு கீழ்வரும் வகையில் புள்ளிகளைப் பெற்றுள்ளது.

A B C D tot

இலத்திரனியல் 15 15 15 5

அச்சு 15 15 15 5 = 100


இப்புள்ளியிடலின்படி இலங்கை பெற்றிருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கை 58 ஆகும். அது கீழ்வரும் வகையில் அமைகிறது.

A B C D tot

இலத்திரனியல் 9 12 5 0

அச்சு 9 11 7 5 58

இதன்படி இலங்கை குறை சுதந்திர­முள்ள நாடாக இனங்காணப்பட்டுள்ளது.
1998இல் அறிமுகப்படுத்தப்பட்ட யுத்த செய்தித் தணிக்கை இலங்கையின் தொடர்பூடக சுதந்திரத்தை மட்டுப்­படுத்தியிருப்பதாகவும், அது போல இராணுவ நடவடிக்கைகளாலும், அவற்­றுடன் தொடர்புடைய காரணங்களாலும் அறிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்­பட்டுள்ளன. அது போல பத்திரிகைக் காரியாலயங்களுக்கு புலனாய்வுப் பொலிஸார் நுழைவது போன்ற பல்வேறு விடயங்கள் இந்த அறிக்கையில் அவதானம் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதன்படி இலங்கையில் சட்டங்களைப் பாவித்தும், அரசியல் தலையீடுகள் புரிந்தும், பொருளாதார நெருக்கடிகளை கொடுத்தும், ஏனைய வன்முறைகளை கட்டவிழ்த்தும் தொடர்பு+டக சுதந்திரங்களின் மீது அரசு தலையீடு செய்திருப்பதாக குறிப்பிடப்­படுகிறது. 1-15 வரையான புள்ளிகளைப் பெற்றுள்ள நாடுகள் 19 அடையாளம் காணப்பட்டுள்ளன. 16-30 வரையான புள்ளிகளைப் பெற்றுள்ள நாடுகள் 49 அடையாளம் காணப்பட்­டுள்ளன. 30 வரையான புள்ளிகளைக் கொண்ட நாடுகள் சுதந்திரமுடைய நாடுகள் (தொடர்பூடக விடயத்தில்) எனக் கொள்ளப்படுகின்றன. அடுத்தது 31-45 வரையான புள்ளிகளைப் பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை 22, மேலும் 46-60 வரையான புள்ளிகளைப் பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை 30 அடையாளம் காணப்பட்டுள்ளன. 31-60 வரையான இந்த வரையறைக்குள் அடங்கும் நாடுகள் குறை சுதந்திரமுடைய நாடுகளாக அடையாளம் காணப்பட்­டுள்ளன. இதற்குள் தான் இலங்கையும் (58) அடங்குகிறது.

61-75 வரையான புள்ளிகள் பெற்றுள்ள நாடுகளை சுதந்திரமில்லாத முதலாவது அணி நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நாடுகள் 42 அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி இலங்கை இந்த அணிக்குள் சிக்க இன்னும் 3 புள்ளிகள் தான் பாக்கி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 76-100 வரையான புள்ளிகள் பெற்றுள்ள நாடுகள் சுதந்திரமில்லாத இரண்டாவது அணி நாடுகளாக (மோசமாக கருத்துச் சுதந்­திரத்தை நசுக்குகிற நாடுகளாக) அடை­யாளம் காணப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட 24 நாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதற்குள் தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

எமது நாட்டில் வரையறையற்ற தொடர்பூடக சுதந்திரம் இருப்பதாக பிதற்றித் திரியும் அரசியல் தலைவர்களுக்கு இவ்வறிக்கையும், ”ஆர்ட்டிகள் 19” (Article) அறிக்கையும் தான் சமர்ப்பணம்.

ஊடகத்தால் எவ்வாறு வழி நடத்தப்படுகிறோம்?


என்.சரவணன்


அடுத்த நூற்றாண்டின் மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் (Media) இருக்கப்போகிறது. ஊடகத்தின் நேர்ப்படியான (positive) பாத்திரத்தைப் போலவே எதிர்மறை (negative) பாத்திரமும் உண்டு.

ஊடகம் இன்று நம்மையெல்லாம் வழிநடத்து­கிறது. நம்மை வழிநடத்துகிறது என்று கூறப்படுவ­தன் அர்த்தம் இன்றைய எமது சிந்தனைகளை தீர்மானிப்பதாக அது ஆகிவிட்டிருக்கிறது.

இன்றைய பெரும்போக்கு (mainstream) எது என்று தீர்மானிக்கும் சக்தியாக அது ஆகிவிட்­டிருக்கிறது. பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களை பெருங்கதையாடல்களாக ஆக்கி அவற்றை நிலை­நிறுத்தும் கருவியாக இது ஆகிவிட்டிருக்கிறது.

ஊடகத்தை யார் கொண்டிருக்கிறாரோ அவரிடம்’அச்சக்தியிடம் மனித நடத்தையை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறதென்று அர்த்தம் என்பர் சிலர். இது உண்மையில் உண்மை. ஊடகத்தை கொண்டிருப்பவர் அல்லது கொண்டிருக்கும் சக்தியிடம் சிந்தனையை மட்டுப்படுத்தும், கட்டுப்படுத்தும், வழிநடத்தும் சக்தி உண்டு.

இவ்வாதத்துக்கு மறுப்பு கூறும் சாரார் இதனை, இன்னும் ஊடகம் சென்றடையாத பின்தங்கிய நாடுகளில்’பின்தங்கிய கிராமங்கள் அதிகமுள்ள உலக சமுதாயத்தில் இக்கருத்து எப்படி சரியாகும் என வினவுவர். ஆனால் பின்தங்கச் செய்யப்பட்ட சமுதாயங்களில் நிச்சயம் ஊடகம் நேரடியாக சென்றடைய வேண்டுமென்பதில்லை. அந்த சமுதாயங்களை அதிகாரம் செலுத்துகின்ற சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டம்சங்கள் இந்த ஊடகங்களால் ஏலவே வழிநடத்தப்பட்டிருக்கும். ஆக, இன்று இந்த ஊடகம் வழிநடத்தாத எந்த சமூகமும் உலகில் இல்லை.

ஊடகம் இன்று சகலவற்றையும் தீர்மானிக்­கின்ற முக்கிய கருவியாக ஆகிவிட்டிருக்கிறது. இன்றைய ஊடகங்களை தன்னகத்தே கொண்டி­ருக்கும் அதிகாரத்துவ சக்திகள், தமது அதிகா­ரத்தை நிலைநாட்ட இந்த ஊடகங்களை மிகவும் தந்திரமாகவும் நுட்பமாகவும் கையாண்டு வருகி­ன்றன. ஏற்கெனவே புரையோடிப் போயிருக்கின்ற அதிகாரத்துவ சிந்தனைகளை, ஆதிக்க சிந்த­னைகளை, உறுதியாக பலப்படுத்துவதில் இவை இந்த கைதேர்ந்த ஊடகங்களை கையாள்கின்றன.

ஆதிக்க பிற்போக்கு சிந்தனைகளையும், மரபார்ந்த அதிகார ஐதீகங்களையும் மீளுறுதி செய்கின்ற சித்தாந்த மேலாதிக்கத்தை இந்த ஊடகங்களைக் கொண்டே இன்று உலகம் முழுவ­துமான அதிகார சக்திகள் செய்து வருகின்றன.

எனவே தான் உலகின் பல்வேறு புரட்சிகர சக்திகள் இன்று ஊடகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முனைப்பு காட்டுகின்றனர். அதுமட்டு­மன்றி இன்றைய புரட்சிகர சமூக மாற்றத்துக்காக போராடும் சக்திகள் எதிரி கொண்டிருக்கும் இந்த ஊடக ஆற்றலை எதிர்த்து நிற்கக்கூடிய வகையில் ஊடக வளங்களை’ஆற்றலை தாமும் கைப்பற்ற முனைகின்றன. இது இன்றைய அதிகாரத்துக்காகப் போராடும் சகல சக்திகளுக்குமான முன்நிபந்த­னையாக - சித்தாந்த மேலாதிக்கத்தை நிலைநாட்­டுகின்ற ஊடகங்கள்- ஆகிவிட்டிருக்கின்றன.

இந்த ஆதிக்க சித்தாந்தங்களை நிலைநாட்­டுவதிலும் மூளைச்சலவை செய்து அடிமைத்துவ சமூக அமைப்பை ஏற்படுத்தவும், அடிபணிய வைக்கும் முயற்சியிலும் இந்த ஊடகங்களை மிகவும் நுட்பமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

நோம் சொம்ஸ்கி இதனை தொடர்பூடக பயங்கரவாதம் (Media Terrorism)என்கிறார். இந்தப் போக்கை ஆராய்கின்ற இன்னும் சில சமூகவியலாளர்கள் இதனை தொடர்பூடக மாபியா (Media Mafia) என்றும் ஊடக வன்முறை (Media Violation) என்றும் குறிப்பிடுகின்றனர். ஒட்டுமொத்­தத்தில் இந்த ஊடகங்கள் இன்று ”அதிகாரத்­துவத்தின் கருவிகளாக” (Media as a Weapon of Power) பயன்படுத்தப்படுகின்றன.

ஊடகங்களின் பன்முகத்தாக்கம் பற்றிய கரிசனையானது தகவல்தொழில்நுட்ப வியாபகத்­தோடு அதிகரித்ததெனலாம். இந்நிலையில் தான் ஊடகவியல் பற்றிய சமூகவியல் ஆய்வுகள் இன்று அதிகரித்துள்ளன. சிவில் சமூகத்தில் அது ஆற்றும் பாத்திரம், உற்பத்தி உறவுகள்- குறிப்பாக மூலதனம் இதில் செலுத்தி வருகின்ற நிர்ப்பந்தங்கள், மூலதனத் திரட்சி ஊடகத்தில் காலூன்ற எடுத்துவரும் முயற்சி, திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பன்னாட்டு நிறுவனங்கள் தரகு முதலாளிகளுக்கூடாக ஊடகத்தைக் கைப்பற்றுவதில் எடுத்துவரும் முயற்சிகள், நவீன அரசுகள் தனது அடக்குமுறை இயந்திரங்களில் ஒன்றாக இதனை பயன்படுத்த தலைப்படுகின்ற போக்கு, அவ்வாறு அடக்குகின்ற மற்றும் அடக்கப்படுகின்ற சக்திகளின் எதிர்காலம் என பல கோணங்களில் இவை குறித்து அலச வேண்டியுள்ளது.

பெரும்பாலும் ஊடகத்தின் உட்கட்டமைப்பு (infra structure) பற்றியே பெருமளவான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கிற நிலையில் அதன் புறச் சக்திகளின் தலையீடு, தாக்கம் எதிர்காலம் குறித்து தற்போதைய ஆய்வுகளில் கூடிய கரிசனை கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே எமது சமூக அமைப்பில் நிலவுகின்ற ஆதிக்க சித்தாந்தங்களை மீளுறுதி செய்து, அதனை மீள கட்டமைக்கின்ற பணியினை ஆற்றுவது ஆதிக்க சக்திகள் தமது அதிகாரத்தை நிலைநாட்ட முன்நிபந்தனையானது. எனவே அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு, அடிமைத்துவத்தை நிலைநாட்டி அதற்கு அடிபணிய வைக்கவோ அல்லது அவற்றுடன் சமரசம் செய்து கொண்டு வாழவோ பழக்க ஏற்கெனவே எமது சமூக அமைப்பில் மதம், கல்வி, பண்பாட்டு கலாசார ஐதீகங்கள், சட்டம் என நிறுவப்பட்டுள்ளன. இவ்வத்தனையையும் ஒருங்கு சேர செய்து முடிக்க இலகுவான வழியாக இன்றைய ஊடகம் ஆற்றல் மிகுந்ததாக உள்ளது. எனவே தான் அதிக்கக் கருவிகள் இதில் அக்கறை செலுத்துவது இன்றிமையாததாக ஆகிவிட்டிருக்கிறது.

அடக்கப்படும் மக்கள் பிரிவினர் முகம் கொடுக்கும் இன்னல்கள் வெகு சாமர்த்தியமாக மூடி மறைக்கும் ஆற்றல் இந்த ஊடகத்துக்கு உண்டு. அதுபோல இல்லாத ஒன்றையும் இருப்பதாக காட்டவோ அல்லது அதனை ஊதிப்பெருப்பிக்கும் ஆற்றலும் இந்த ஊடகத்துக்கு உண்டு. இவ்வாறு மறைப்பதும், ஊதிப்பெருப்பிப்­பதும் ஊடகத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் சக்திகளின் நலன்களிலேயே தங்கியிருக்கின்றன.

கிளின்ரன் மோனிக்கா லிவின்ஸ்கி விவகாரம் பற்றி திரும்பத்திரும்ப பேசும் ஊடகம் உள்நாட்டில் நடந்த கோணேஸ்வரி குறித்தும், கிருஷாந்தி குறித்தும் அதை விட குறைந்த முக்கியத்துவத்­தையே தரும். சிங்கள ஊடகங்கள் அதை விட குறைந்த முக்கியத்துவத்தை தரும் அல்லது ஒன்றும் தராது. கிளின்ரனின் நாய்க்கு சுகமில்லாதது சர்வதேச அளவில் செய்தியாகும் அதே வேளை வன்னிப் பட்டினிச் சாவு உள்ளாட்டிலும் தெரியாமல் செய்யப்படும்.

அமெரிக்காவில் ரொனால்ட் ரேகனும், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா..., இலங்கையில் காமினி பொன்சேக்கா போன்ற வெறும் திரையுலக நட்சத்திரங்கள் அரசியல் பிரமுகர்களாக ஆக்கப்பட்டதும் இந்த சினிமா எனும் ஊடகத்தையும், ஏனைய ஊடகங்களும் ஊதிப்பெருப்பித்து ஏற்படுத்திய மாயை என்பதை நாமெல்லோரும் விளங்கிக் கொள்வோம்.

எப்போதும் எந்த சக்தியும் அல்லது தனிநபரும் தான் கொண்டிருக்கும் அக-புற, ஆற்றல் ’வளங்கள் தக்கவைக்கப்படுவதற்காக’அதிகரிக்கப்படுவதற்காக அவை அதிகாரமாக உருவெடுக்க வைக்கின்றன. வர்க்கம், பால்வாதம், இனவாதம், வயதுத்துவம், பதவி, சாதியம், நிறவாதம் என பல்வேறு வடிவங்களிலும் நிலவுகின்ற ஆதிக்க உறவுகள், அதிகாரத்துவமாக தொடர்ந்தும் நிலைபெற அவை நியாயம் கற்பிக்கப்படவேண்டும். ”மதத்­தின்” பெயரால், ”தூய்மை”யின் பெயரால் இந்த கற்பிதங்கள் குறித்து மூலைச்சலவை மிகுந்த சித்தாந்த மோதிக்கத்தை நிலைநாட்டியே ஆகவேண்டும்.

இப்படி கருத்தேற்றம் செய்யப்பட்ட கற்பிதங்களை நிலைநாட்டுவதில் ஊடகம் முக்கிய பங்காற்றி வருகின்றன.

இந்த வகையில் ஊடகம் பற்றிய நமது பார்வை எளிமைப்படுத்தப்பட்டே இருக்கின்றன. குறைத்து மதிப்பிடப்படுகின்றன. ஊடகம் நம்மை ஒன்றும் செய்து விடமுடியாது என்கின்ற மாயையில் இருத்தப்பட்டுள்ளோம். எனவே தான் ஊடகத்தின் வடிவம், பண்பு, அதன் திசைவழி என்பன குறித்து அவ்வளவாக எம்மத்தியில் அக்கறைக் கிடையாது. தொலைக்காட்­சியில் 30 வினாடிகள் கொண்ட ஒரு விளம்பரத்­துக்கு சராசரியாக அறுபதினாயிரம் ரூபா வரை அறவிடப்பட்டு வருகிறது என்பதைத் தெரிந்தால் அசந்து போவார்கள்.ஒரு தடவைக்கு இவ்வளவு அறவிடப்படுகிறதென்றால் எத்தனை முறை குறிப்­பிட்ட விளம்பரம் வருகின்றது? அப்படி­யெனில் எவ்வளவு தொகை கொடுக்கப்பட வேண்டும்? நம்மீது அது எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லையென்றால் ஒரு நிறுவனம் ஏன் இவ்வளவு தொகையை அவ்விள­ம்பரத்துக்கென ஒதுக்குகிறது? அவ்வாறெனில் விளம்பரம் எவ்வாறு எம்மில் பிரதிபலிக்கின்றது?

தகவல் களஞ்சியங்களை வைத்திருக்கும் சக்திகளால் உலகு ஆளப்படப் போகிறது எனும் கருத்தாக்கம் வலுவாகி வருகின்றது. இது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்­பட்டு வருவதை இன்டர்நெட் செய்திகள் கட்டுரைகளிலிருந்து அறிய முடிகிறது.

எது பற்றிய முடிவுகளுக்கு வருவதற்கும் அடிப்படையில் தரவுகளை-தகவல்களை நம்பி­யிருக்க வேண்டிய தேவை நிலவுகின்ற நிலையில் போட்டி போட்டுக்கொண்டு தகவல்களை முன்கூட்டியே அறிய ’பெற முயற்சிகள் நடக்கி­ன்றன. அது போலவே தகவல்களை களஞ்சியப்­படுத்துவதற்கும் அவற்றைத் தருவதற்காகவும் ’சந்தைப்படுத்துவதற்காவும் போட்டிகள் நிலவப்­போகின்றன. இந்நிலையில் தகவல் தொழில்­நுட்பத்தின் மீது மூலதன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. 'நட்சத்திர யுத்தம்”, ”வான்­வெளி யுத்தம்” என்கிற கருத்தாக்கங்கள் மங்கி இனி வரப்போகும் காலம் தகவல் யுத்தத்துக்கான (IT War ) காலம் என்கிற கருத்தாக்கம் வலுவாகி வருகின்றன.
வெறும் தரவுகள்’தகவல்களை சித்தாந்த சுமையேற்றி பரப்புகின்ற வேலையை ஏற்கெனவே உலகில் முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. அமொpக்கா இதற்காக தமது உயர்ந்தபட்ச தொழில்நுட்­பத்தையும், வளங்களையும் பயன்படுத்தி வருவது இரகசியமானதல்ல.

தரவுகள், தகவல்கள் பரப்பப்படுவதற்கு’ அனுப்பப்படுவதற்கு’விற்பனைசெய்யப்படுவதற்கு முன்னரே அதன் நுகர்வோர் யார் என்று இந்த தகவல் முதலாளிகளால் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. அதற்கேற்றபடி அதன் வடிவம், வரிசை, உள்ளடக்கம், பண்பு என்பன கட்டமைக்­கப்பட்டுவிடுகின்றன.

இத்தகவல்களை வழங்குகின்ற சாதனமாக, சகலவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இது தோன்றி, வளர்ந்து, ஊடுருவி, வியாபித்திருக்­கின்றது. இன்னும் சொல்லப் போனால் எதிர்வரும் மில்லேனியத்தின் (ஆயிரம் ஆண்டுகளைக் குறிக்கின்ற Millennium) முதல் நூற்றாண்டை தகவல் புரட்சி நூற்றாண்டு என்கின்றனர். தகவலைக் கொண்டிருக்கிற சக்திகளே அதிகார சக்திகளாக ஆகக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் எனும் கருத்தாக்கம் இன்று நம்பக்கூடியதாக உள்ளது. ஆதிக்க சக்திகள் தமது அதிகாரத்துவத்தை தக்கவைக்க, அதனை விரிவுபடுத்த மிகக் கனமாக தகவல்களை உற்பத்தி செய்து உற்பத்தி செய்யப்பட்ட அத்தகவலை அரசியல்மயப்படுத்தி’ கருத்தேற்றம் செய்து அல்லது புனைந்து’திரிபுபடுத்தி’பெருப்பித்து சிறுப்பித்து சந்தைக்கு விடுகின்றன.

இதற்காக இரண்டு வகை பிரதான தந்திரோ­பாயங்களை அது அணுகும். முதலாவது, சந்தையில் ஏற்கெனவே கேள்வி அதிகம் (ஏற்கெனவே புரையோடிப்போயுள்ள ஆதிக்கக் கருத்துக்கள்) எதற்கு என பார்த்து அந்த இடைவெளியை நிரப்புவது. இரண்டாவது, தான் சந்தைப்படுத்த விரும்புகின்ற புதிய செய்திகளை’ கருத்தாக்கங்களை சந்தைக்கு விட்டு சமூகத்தை அதற்கு பழக்கப்படுத்துவது, போதைகொள்ளச் செய்வது.

இதனை நாம் உன்னிப்பாக அலச வேண்டியி­ருக்கிறது. அடுத்த நூற்றாண்டின் மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் இருக்கப்போகிற நிலையில் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பது அவசியத்திலும் அவசியம்.

மொத்தத்தில் உலகில் ஆளும் வர்க்கங்கங்கள்’ சக்திகள் தமது நவகாலனித்துவத்தை அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்துச் செல்வது இந்த தகவல் தொழில்நுட்பத்தை நம்பியே என்பதை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய உலகமயமாதல் போக்குக்கூடாக மலினத்துவத்தை வேகமாக மக்கள் மயப்படுத்துவதற்கும் இந்த தகவல் தொழில்நுட்பத்தை’ஊடகத்தைத் தான் நம்பியிருக்கிறது.

ஆக ஒட்டுமொத்தத்தில் நவ பாசிசம் என்பதன் புதிய வடிவம் தகவல் தொழில்நுட்பத்துக்­கூடாகவே மேற்கொள்ளப்படப் போகிறது. அதுபோல அதனை முறியடிக்க முனையும் எந்த சக்தியும் இந்த இதே ஊடகத்தை கருத்திற் கொள்ளாமல் துரும்பு கூட முன்னேற முடியாது என்பது குறித்து மீள மீள எச்சரிக்கை கொள்ள வேண்டியுள்ளது.

ஆணாதிக்கத்தை நிலை நிறுத்துவதில் வெற்றிகாணும் தமிழ், சிங்கள (குடும்ப) மஞ்சட் பத்திரிகைகள்!



என்.சரவணன்


சந்தையில் ஏகப்பட்ட சஞ்சிகைகள் முளைத்து விட்டுள்ளன. தமிழில் மாத்திரமல்ல சிங்களத்திலும் கூட. சிங்களத்தில் எண்ணிலடங்கா சஞ்சி­கைகள் வெளிவருகின்றன. இது எந்த­ளவுக்கு சந்தையில் இவற்றுக்கான கேள்வி இருக்கின்றது என்பதை தெளிவு படுத்துகின்றது. கலர் கலரான இந்தச் சஞ்சிகைகளை பெருமளவு வாசிப்ப­வர்கள் பெண்கள் என்பது சில பத்திரி­கைகள் செய்திருக்கின்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆக பெண் நுகர்­வோரை இலக்காகக் கொண்டு இவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

1977 ஜே.ஆர் ஆட்சியில் அமர்ந்­ததோடு திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகமானது. அந்நிய பல்தேசியக் கம்பனிகள் இலங்கையில் கடைவிhpக்கத் தொடங்கின. அந்நிய­ருக்கு நாட்டின் சொத்துக்களை தாரை வார்க்க தாக்குப்பிடிக்கக்கூடிய அரசாங்கம் தேவைப்பட்டது. தனக்குக் கிடைத்த 6இல் 5 பெரும்பான்மை பாராளுமன்றப் பலத்தைக் கொண்டு மாற்ற கடினமான அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. பல்தேசியக் கம்பனிகள் தமது சந்தையை நிறுவவும், நிலைநிறுத்தவும் தமது பொருட்கள் பற்றிய விளம்பரங்களை ஊதிப்­பெருப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. புதிய நுகர்பொருட்களை அறிமுகப்படுத்தி புதிய நுகர்பொருள் கலாசாரத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை அவை உணர்ந்தன. இதன் விளைவாக மலினக் கலாசாரத்தை பரப்புகின்ற தந்திரோபாயங்களைக் கையாண்டன. இவற்றின் விளைவாக இலங்கையில் பாலியல் திரைப்ப­டங்கள் தொடக்கம், மேற்கத்தேய கலாசார மோகத்தை ஏற்படுத்துகின்ற, போதைக்குள்­ளாக்குகின்ற சஞ்சிகைகள் எல்லாம் கணக்கு வழக்கில்லாமல் வந்து குவிந்து கொண்டிருந்தன. திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஏற்பட்டு வந்த உற்பத்தி, உழைப்பு, வளங்கள் மீதானசுரண்டலை­யும் நாட்டின் நெருக்க­டிகளையும் கண்டு இளம் சந்ததியினர் மத்தியில் எழுச்சிகர சிந்தனைகள் உருவாகாமல் அவை திசைதிருப்பப்படவும் இந்த நுகர்பொருள் கலாசார மோகம் திணிக்கப்பட்டன. போதைப் பொருட்கள் வகைவகையாக வந்து குவிந்தன. ரேஸ் புக்கிகள் வீதியெங்கும் முளைத்தன. பாலியல் தொழிலுக்கு- குறிப்பாக சிறுவர் பாலியலுக்குப் -பேர் போன நாடாக உலக வரைபடத்தில் இலங்கைக்கு இடம் கிடைத்தது.

இவ்வாறான பின்னணியுடன் தான் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளுக்கு உள்ள மவுசை விளங்கிக் கொள்ள முடியும். இன்று இலங்கையில் தமிழ் பேசுவோர் பலர் வாசிக்கும் வாராந்தப் பத்திரிகையாக இருக்கும் தினமுரசு மற்றும் தமிழில் தற்போது ப்ரியா (இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை), ஜனனி (வாரப் பத்திரிகை), ரோஜா (வாரப்பத்திரிகை) போன்ற மலினப் (popular) பத்திரிகைகளைப் போலவே சிங்களத்திலும், சுவந்த, அரலிய, தருனி, சிரிகத்த, பிரியாதரி, எ, நவலிய, ரெஜின, ஏ, நேத்ரா, யுவதிபத்தி, மனாலிய போன்றவை முக்கியமாக வெளிவருகின்றன.

இந்த பத்திரிகைகளின் குவிதலுக்கு இன்னுமொரு முக்கிய காரணம் அச்சுத்தொழில் மற்றும் கணிணிச் செயற்பாடு அச்சுத்துறைக்குள் பெரும் பாத்திரம் செலுத்தத் தொடங்கியமை என்பன முக்கிய கவனத்துக்குரிய காரணங்கள்.

கலர், கலரில் வெளிவரும் இவற்றில் சினிமா ”கசமுசாக்கள்”, பாலியல் கதைகள், கிளுகிளுப்­பூட்டும் காதல் கதைகள், வீட்டுச் சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், கேள்வி பதில், வைத்திய ஆலோசனைகள், என்பன பொதுவாக முக்கிய இடம் வகிக்கின்றன. கதைகளில் வீரசாகசங்கள், காதல், காமம், திகில், அந்தரங்கம் என்பன முக்கிய இடம் பிடித்தன.

ஆமர் வீதியில் உள்ள ஒரு பாதையோரக் கடையில் விசாரித்த போது அங்கு ப்ரியா-10, ஜனனி, 25, ரோஜா-15, தருனி-75, ரெஜின-35, சிரிகத்த-85, நவலிய-35, பிரிந்த,-40, பிரியாதரி-15, நேத்திரா-10, மனாலிய-25, யுவத்திபத்தி 15, ஏ 15 என்கிற ரீதியில் விற்பனையாவதாக அறிய முடிந்தது.

புறக்கோட்டையில் ஒரு நடைபாதை கடையில் விசாரித்த போது அங்கு சராசரியாக ப்ரியா-15, ஜனனி, 30, ரோஜா-20, தருனி-80, ரெஜின-60, சிரிகத்த-105, நவலிய-75, பிரிந்த,-450, பிரியாதரி-300, மனாலிய-25, யுவத்திபத்தி 15, ஏ 600 என்கிற ரீதியில் விற்பனையாவதாக அறிய முடிந்தது.

வாழ்க்கையில் அடைய நினைக்கும் பல விடயங்களை’­கற்பனைகளை இவற்றை வாசிக்கையில் அந்தக் கணங்களில் உள்ளூர ரசித்து ஆனந்தம் கொள்கின்றனர். இதுவே அவர்களை அதிகமாக இவற்றைக் கவரப் பண்ணுகிற உளவியல். அந்த வகையில் ஏற்கெனவே சமூகத்தில் நிறுவப்பட்ட பழமைவாத புனைவுகளுக்குத் தீனி போடும் வகையில் இவை அமைகின்றன. அந்த ஐதீகங்களை மறுஉற்பத்தி செய்யும் வேலையையே இவை செய்து வருகின்றன. ஏலவே நிலை பெற்றுவிட்டுள்ள ஆணாதிக்க சமூக அமைப்பானது திட்டமிட்டு இந்த ஆதிக்க சித்தாந்தத்தை தொடர்ந்து நிறுவத் தேவையில்லை. ஏலவே நிறுவனமயப்பட்ட அது, இருக்கின்ற வாய்ப்புகளை வைத்துக் கொண்டு தன்னை தகவமைத்துக் கொண்டு தொடர்ச்சியாக நிறுவுகின்றது. அதற்கு தோதான வாய்ப்புகள் அனைத்தும் இந்த சமூக அமைப்பில் இருக்­கின்றன. அப்படித்தான் இந்த சஞ்சிகைளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இவ்வகையான சிங்கள சஞ்சிகைகளைப் பற்றி ஆராய்ந்த சிலர், இது போய் சேரும் தரப்பினர் யார் என்பதை இனங்கண்டபோது

பாடசாலை மாணவிகள், பாடசாலை கல்வி முடித்துவிட்டு தொழிலின்றி இருக்கும் இளைஞர் ’யுவதிகள், படையினர், சுதந்திர வர்த்தக வலையப் பெண் தொழிலாளர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் பணிப்பெண்கள் என்போரையே இவை அதிகமாக சென்றடைகிறது எனக் கண்டறிந்துள்­ளனர்.

இப்பத்திரிகைகளில் பொதுவாக பேனா நன்பர்கள் பக்கம், வாசகர் கடிதங்கள் பக்கம், துணுக்குகள் என்பவற்றோடு ”வைத்தியரின் பதில்கள்” எனும் பக்கமும் இருப்பது வழக்கம். இவை தமிழ், சிங்கள பத்திரிகைகளுக்கு பொதுவான பண்பாக உள்ளது. அவற்றில் கேட்கப்படும் கேள்விகட்கு மித்திரன் யோகா பாலச்சந்திரனைவிட மோசமான பதில்கள் கிடைக்கும். ஆதிக்க சமூக அமைப்பின் எதிர்பார்­ப்புகளை நிறைவேற்றுகின்ற ஆலோசனைகள், கருத்துக்கள் அவற்றில் வழங்கப்படுவது வழக்கம்.

முக்கியமாக இவற்றில் பாலியல் விடயங்கள் அடங்குவது பொதுவான பண்பாகக் காணப்­படுகிறது. பாலியல் கேள்விகள் தான் அதிகம் கேட்கப்படுகிறதா அல்லது அவ்வாறான கேள்விகள் தான் வைத்தியரால்’பத்திரிகை ஆசிரியர்களால் தெரிவு செய்யப்படுகிறதா என்பது தெரியவில்லை. ஆனால் வழங்கப்படும் பதிலைப் பார்கையில் இவை கிளுகிளுப்பூட்டி ஆவலைத் தூண்டுகின்ற வகையிலேயே கேள்வியும் பதில்களும் அமைக்கப்படுகின்றன என்பது மட்டும் தெரிகிறது. பாலியல் பற்றிய கேள்விகள் இருப்பது ஆரோக்கியமான ஒன்று தான் ஆனால் இவ்வகைப் பத்திரிகை­களைப் பொறுத்தவரை வெறும் வியாபார உத்திக்காக மோசமான கருத்துக்களைப் பரப்புவதும், பிற்போக்கான ஆலோசனைகளை வழங்குவதும் முக்கிய கவனத்துக்குரியது. இவ்வாறான பாலியல் கேள்விகள் பற்றி உதாரணத்திற்கு தலா ஒவ்வொரு பத்திரிகையை எடுத்து அட்டவணை இட்ட போது இப்படி இருந்தது. பார்க்க அட்டவணை.

பெண்ணின் உடலை அங்கம் அங்கமாக காட்டி கவரப்­பண்ணுவது வியாபார உலகின் முக்கிய உத்தியாக கைக்கொள்ளப்படுகிறது. இவ்வாறான ரசனைகளுக்கு பழக்கப்­படுத்துவதன் மூலம் அதில் வாசகர்களைப் பெற்றுக் கொள்வதும், அதன் மீது அடிமை கொள்ளச் செய்வதும், அவ்வாறு திட்டமிட்டு உருவாக்கிய வாய்ப்பை பயன்படுத்தி தமது சந்தையை நிறுவுவதும் மூலதனத்தின் சாமர்த்தியமான உத்தி அல்லவா?

உதாரணத்திற்கு ஜனனியில் வெளிவந்த ஒரு கேள்வி பதில்

அன்பின் அண்ணா, நான் 17 வயது மங்கை. 15வது வயதில் நான் பருவம­டைந்தேன். நான் எனது பக்கத்து வீட்டு உறவினர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டேன். ஒருமுறை மட்டுமல்ல பலமுறையும் என்னை அவன் கற்பழித்தான். அவன் (ஆணுறை) பாவித்தே உறவு கொண்டான். அவன் எங்கள் வீட்டிற்கு மிக நம்பிக்­கையானவன். நான் சற்று அழகாகவும் கட்டுடல் கொண்டவளாகவும் இருப்ப­தனால் எனது கிராமத்து ஆண்கள் சிலர் என்னை விரும்பிக் கடிதம் தந்தனர். அக்கடிதத்தில் ஒன்று அவனிடம் எப்ப­டியோ கிடைத்ததால் என்னை மிரட்டி வீட்டில் கடிதத்தைக் கொடுக்கப் போவ­தாகக் கூறியே கூறுவதாக சொல்லியே என்னை உறவு கொள்ள வைத்தான். தற்போ து இளைஞர் ஒருவர் என்னை விரும்பு­வதாகக் கூறி இரண்டு மாதமாக எனக்கு அவரு­டன் பழக்கம் உண்டு. இந்நிலையில் என்னைக் கற்பழித்த இளைஞன் தொந்தரவு தந்து கொண்டேயிருக்கிறான். வீட்டில் இதனைச் சொன்னால் காதலனைக் கொல்வேன் என்கிறான் இவன். எனக்குப் பயமாக இருக்கிறது. மேலும் எனது முதலிரவு நாளன்று உண்மை தெரிந்து விட்டால் நான் உயிரோடு வாழவே மாட்டேன்... தற்கொலைக்குக் கூட முயற்சித்தேன். இதற்கு நல்ல முடிவொன்றைத் தருமாறும், தனியார் வைத்தியரிடம் சென்று ஆலோசனை பெற்று எனது கன்னித்தன்மையின் நிலையை அறியலாமா எனவும் பதில் தாருங்கள்.

அன்பின் வாசகிக்கு, உடனடியாக அந்தக் கயவனிடமிருந்து விலகுங்கள். அவன் ஒரு காமவெறியன். இது போன்ற காமப் பேய்கள் விரைவிலேயே இதற்கு தண்டனை அனுப­விப்பார்கள். அவன் பயமுறுத்தியிருக்கிறான் மற்றும்படி ஒன்றும் செய்ய­மாட்டான். மிரட்­டலுக்கு அஞ்சவேண்டாம். பெற்றோரிடம் ஏதேனும் கூறினால் அதனை சமாளிக்கலாம். கெட்ட கனவாக எண்ணி இனி வாழுங்கள். இனி கற்பைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யத் தயங்க வேண்டாம். பணம் புகழையும் விட கற்பு பெறுமதி மிக்கது மறந்து விடவேண்டாம்.

இந்த வகையான பதில்கள் ஏற்படுத்தப் போகும் விளைவுகளும், கருத்தியல் நிலைநிறுத்­தல்களும் கவனிக்கத்தக்கவை. கற்பு குறித்தும், புனிதம், தூய்மை என்பன குறித்த ஆணாதிக்க எதிர்பார்ப்புகளும், நிறுவல்களும் மீள உறுதி செய்யப்படுவது இப்படித்தான். அதுவும் குறிப்பாக பெண்களை இலக்காகக் கொண்டு விற்பனைக்­காகத் தயாரிக்கப்படும் இந்தப் பத்திரிகைகள் ஏற்படுத்திவரும் விளைவுகள் நீண்டகாலத்தில் ஆபத்தானவை. இவ்வகையான பத்திரிகைகள் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களையே அதிகம் போய் சேர்வதாக இப்பத்திரிகைகளுக்கு கிடைக்கின்ற கடிதங்கள் மற்றும் பிரதிபலிப்­புகளைக் கொண்டு அறிய முடிகிறது.

மேற்படி மூன்று தமிழ் பத்தரிகைகளிலும் ஜனனியில் தான் இந்த வகையான கேள்விகள் அதிகம் இருக்கின்றன. ஜனனியில் அளிக்கப்படும் பதில்களும் ஆண் ஒருவரால் அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வாசகர்களின் கேள்விகளாக தாங்களே தயாரித்து பிரசுரிக்கும் வேலையும் நடக்குதாம்.

பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களுக்கு பலியாக்கப்பட்டிருக்கும் ஒரு சமூக அமைப்பு அதனை தொடர்ச்சியாக தக்கவைக்க இவ்வகை தொடர்பூடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நிலைமையை ”பாலியல் கசாப்புக் கடைக்காரர்கள்” நன்றாகவே பயன்படுத்தி தங்களின் சந்தையை நிறுவி லாபங்களைக் குவிக்கின்றனர். இது ஒரு மோசமான சமூக அமைப்பு தொடர்ந்தும் நிலவ வழிவகுக்கிறது. திரும்பத் திரும்ப புனைவுகளுக்கும், பிற்போக்கு ஐதீகங்களுக்கும் பயன்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதும் இவை தான்.

நிமலராஜன் இனிவருவனவற்றிற்கு ஒரு குறியீடு!


பத்திரிகையாளர் நிமலராஜனின் படுகொலைச் சம்பவம் இலங்கையில் இதற்கு முன்னர் கொல்லப்பட்ட எந்தவொரு பத்திரிகையாளருக்கும் கிடைக்காத எதிர்ப்பலைகளையும், அனுதாபங்களையும் வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் இதில் முக்கியமாக நோகத்தக்க இன்னொன்றும் உள்ளது. தமிழ் பத்திரிகையாளருக்கு எதிரான முதல் வன்முறை இதுவல்ல என்பதை முழு நாட்டு மனித உரிமையாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அறிவிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு முன்னர் சிங்கள தொடர்பூடககங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக எந்தவொரு வழக்கோ, வந்முனை நடவடிக்கைளோ இடம்பெற்றதும் அது எந்தளவு முக்கியத்துக்குரிய செய்தியாக ஆக்கப்படுகிறது என்பதும், அதற்கு எதிராக தேசிய அளவிலும், சர்வதேச அளவலும் எந்தளவு எதிர்நடவடிக்கைகளும், கண்டனங்களும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன என்பதற்கு சம்பவங்கள் ஏறாளம் உள்ளன. தமிழர்களின் தலைவிதி இப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட அவர்கள் கொல்லப்படவே வேண்டும் என்பது தான். இதனால் தான் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தேவைப்பட்டதும், ஆரம்பிக்கப்பட்டதும். மேலும் நிமலராஜனின் படுகொலையை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைக்கு இன்னுமொரு காரணம் அவர் சிங்கள மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு அறிமுகமானவர் என்பதும். வெறும் தமிழ் தெரிந்த தமிழ் பத்திரிகையோடு மட்டுமே தொழிபுரிகின்ற பத்திரிகையாளர்ளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை எதிர்க்க நாதியில்லாத நிலையே இது வரை இருந்து வருகிறது. தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆரம்பித்ததன் பின்னர் தான் தமிழ் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் வெளிக்கொணரப்படுகின்றன.

சரிநிகரில் பணியாற்றிய குகமூர்த்தி 1991இல் பிரேமதாச அரசாங்கத்தால் காணாமல் ஆக்கப்பட்டபோது அதற்காக குரல்கொடுக்க சரிநிகர் மட்டுமே இருந்தது என்பதையும் வாசகர்களுக்கு நினைவுருத்த விரும்புகிறோம்.

எந்தவொரு அடக்குமுறை ஆதிக்க அரச இயந்திரமும் தமது அடக்குமுறைகளை செவ்வனே நிறைவேற்ற தொடர்பூடகங்களை தமது கட்டுப்பட்டுக்குள் வைத்திருக்க சகல வித உபாயங்களையும் கையாள்வது வழக்கமே. அவ்வாறான நடவடிக்கையின் அங்கமாகவே படுகொலைகளையும் பார்க்கவேண்டியிருக்கிறது. பிரேமதாசா காலத்தில் சிங்கள இளைஞர்களின் மீதான சரவேட்டையை நடத்துவதில் ஒட்டுமொத்த தொடர்பூடகங்களுமே தடையாக இருப்­பதைக் கண்டு அவ்வாறானவர்களை தேடித்தேடி வேட்டையாடினான். தொடாபூடகங்களை நசுக்குவதில் இலங்கையின் வரலாற்றில் அதற்கு முன்னர் அனைவரையும் மிஞ்சினான். இன்று சந்திரிகா பிரேமதாசவையும் மிஞ்சிவிட்டார். இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே தமிழ் தொடர்பூடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது. போpனவாதமயப்பட்டு வருகின்ற சிவில் சமூக அமைப்பில் தமிழ் தொடர்பூடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்து சக சிங்கள பத்திரிகை உலகம் கூட அலட்டிக்கொள்ளாதது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை தான்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை தடை செய்கின்ற வர்த்தமானி அறிவித்தலை அரசு அறிவித்த போது சிங்கள பேரினவாத இயக்கங்கள் மாத்திரமல்ல சிங்கள தொடர்பூடகங்கள் பல கூட மகிழ்நதன. அந்த மகிழ்ச்சியில் சொக்கிப் போயிருந்த நிலையில் கூடவே அந்த தடை அறிவிப்பு சரத்துகளில் சில கருத்துச்சுதந்திரங்களை பறிக்கின்ற ஏற்பாடுகள் இருந்ததைக் கூட கவனிக்கவில்லை. சரிநிகர் உள்ளிட்ட சில தமிழ் பத்திhpகைகள் தான் அதனை சுட்டிக்காட்டியிருந்தன. அதன் பின்னர் சில நாடக்ள் கடந்து தான் சுதந்திர பத்திரிகை ஊடக இயக்கம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் இயக்கங்களும் கண்டனங்களை வெளியிட்டன. ஆனால் ஒன்றும் பண்ணமுடியவில்லை. ஏனென்றால் அறிக்கை விட்டால் தங்கள் கடமை முடிந்துவிடும் என்கிற ஒரு மரபு செயற்பாட்டாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பல இயக்கங்கள் மத்தியில் வந்துவிட்டது தான். அதன் பின்னர் தான் அவசரகால சட்டம், பயங்கரவாதத் தடைச்ச சட்டம் மட்டுமல்ல இந்த புலித்தடைச் சட்டத்தைக் கூட அரசு பிரயோகித்து அதன் பின்னர் அனைத்து கருத்துச் சுதந்திரங்களையும் பறித்தது. அரசு நேரடியாக செய்ய இருந்ததை ஏனைய சக்திகள் செய்தால் அத்தகைய சக்திகளை பாதுகாப்பது அரசின் கடமையாகி விடுகின்றது. அந்த வகையில் ஈ.பி.டி.பி.க்கு அரசு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

செய்தித் தணிக்யையைக் கொண்டுவந்தது. செய்தித் தணிக்கை அதிகாரியாக இராணுவ அதிகாரியை நியமித்தது. மீறியதாக குற்றம் சாட்டி, உதயன், இரிதா பெரமுன, சண்டேலீடர் போன்ற பத்திரிகைகளை மூடியது. சர்வதேச செய்தி ஊடகங்கள் மீதும் தணக்கையை பிரயோகித்தது. அரசை விமர்சித்து எழுதிய பலருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது, கைது செய்து சிறையிலடைத்தது. அரச படைகளைக்கொண்டு தாக்கியது. சிலர் கொல்லப்பட்டார்கள். (பார்க்க பட்டியல்) இவற்றுக்கு எதிராக அமைதியாக ஊர்வலங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் என்பனவற்றை நசுக்கியது. இது வரை வரலாறு இலங்கை வரலாற்றில் எந்த ஒரு ஆட்சியிலும் நடக்காத அளவுக்கு தொடர்பூடகங்கள் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. எந்த பிரேமதாசவை விமர்சிக்கவும் கவிழ்க்கவும் தொடர்பூடக சுதந்திரப் பறிப்பை இந்த பொ.ஐ.மு. பிரச்சாரமாக பாவித்து ஆட்சியில் அமர்ந்ததோ அதே பொ.ஐ.மு.வினால் தொடர்பூடக சுதந்திரப் பறிப்பில் வரலாற்று சாதனையை படைத்தது. இறுதியாக நடந்து முடிந்த 11வது பொதுத்தேர்தலின் போது பொ.ஐ.மு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தொடர்பூடக சுதந்திரம் பற்றி எதுவுமே கூறாத அளவுக்கு அது கருத்துச் சுதந்திரம் குறித்து பேச சகல வித தார்மீகத்தையும் இழந்து விட்டிருந்தது. (பொ.ஐ.மு அரசாங்க காலத்தில் நடந்த சகல கருத்துச் சுதந்திர பறிப்புகளையும் கீழ் குறிப்பிட்ட இணையத்தளங்களில் விலாவாரியாக பட்டியல்களை இட்டிருக்கின்றன.)

இவ்வருடத் தொடக்கத்திலிருந்து ஒக்டோபர் வரை 36 தொடர்பூடகவியலாளர்கள் உலகம் முழுவதும் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் நிறுவனம் (IPI-International Press Institute) எனும் சுவிஸில் இயங்கும் அமைப்பு தெரிவிக்கிறது. 1999இல் மொத்தம் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1998இல் 31பேர் கொல்லப்பட்டிருந்தனர். 1997 இல் 27 பேர் கொல்லப்பட்டிருந்தனர். உலகப் பத்திரிகை நிறுவனம் எனும் (World Association of Press) எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் சென்ற வருடம் உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பத்திபிகையாளர்களின் எண்ணிக்கை 54 என்கிறது. பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு (Committee to Protect Journalists-CPJ) எனும் சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை இலங்கையில் இடம்பெற்றுள்ள பத்திரிகையாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பட்டியலையே இட்டிருக்கிறது.

பொ.ஐ.மு வின் காட்டாட்சி போய் பேயாட்சி நிறுவப்பட்டுள்ள நிலையில் அடக்குமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இனி நிலைமை மேலும் மோசமடைவதற்கான வாய்ப்புகளே தெரிகின்றன. எனவே இன்னும் பல நிமலராஜன்களும், ரோகண குமாரக்களும் அதிகரிக்கத் தான் போகிறார்கள். நிமலராஜன் அரசின் இனி அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைக்கான குறீயீட்டு எச்சரிக்கை மட்டுமே. இந்த நிலையில் தான் சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களின் ஒன்றிணைந்த செய்பாடுகளின் அவசியம் கண்டிப்பாகின்றது. ஆக முரண்பட்டு அழிவோமா சேர்ந்து போராடி வெல்வோமா என்கிற நிலைப்பாட்டை அனைவருமாக எடுப்போமாக.

2005 ஊடகவியலாளர்களுக்கு பேயாண்டு? 2006?



என்.சரவணன்
அதிகாரக் கைப்பற்றலுக்கும், ஆதிக்க சித்தாந்தங்களை பரப்புவதற்கும், புனைவுகளை நம்பச்செய்வதற்கும் ஆதிக்க சக்திகள் ஊடகங்களை ஒரு விலைமதிக்கமுடியாத ஆயுதமா­கவே கையாண்டுவருகிறார்கள் என்பதை இன்று உலகே அறியும்.

இதற்காகத் தான் நெப்போலியன் அப்போதே சொன்னான் -மக்களின் மனவுறுதியும், மக்கள் தொடர்பும் போரின் அரைவாசி பகுதி-.

ஆதிக்க சக்திகளுடன் மோதும் எந்த அடக்கப்படும் சக்தியும் முதலில் ஊடகப் போரை எதிர்கொண்டு தற்காப்பு நிலையெடுப்பதும், ஊடகத்தை ஒரு முக்கிய போர்க்கருவியாகவே பாவிப்பதும் தவிர்க்க இயலாததாகிறது.

ஊடகப்போரின் போது செய்திகளை திரித்து பிரச்சாரப்படுத்துவது, மற்றும் திரிபுபடுத்தப்பட்ட செய்தியினைக்கொண்டு பிழையான கருத்தாக்கங்களை நிறுவுவதும் போரின் தந்திரோபாயமாக எதிரி பாவிப்பது உண்மைதான். ஆனால் இன்னொரு விடுதலைக்காக போரிடும் அடக்கப்படும் சக்திகளும் அதையே ஒரு போர்த்தந்திரோபாயமாக கொள்ளும் போது அடிப்படை அரசியலே பிழையாகிவிடுகின்ற வரலாறு காலாகாலமாக நடந்து வந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இதற்குப் பஞ்சமில்லை என்பது தான் துரதிருஸ்டவசமான உண்மை.

இலங்கை நிலை

இந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 3ஆம் திகதி வரையான நாட்களில் நடக்கவிருக்கும் சர்வதேச பத்திரிகையாளர் தினம் இலங்கையில் ஐ.நாவினால் கொண்டாடப்படவிருக்கிறது. சர்வதேச ஊடகவியலாளர்கள் பலரும் கருத்தரங்குகள், மாநாடுகள், சந்திப்புகள் பலவற்றில் கலந்துகொள்ளவுள்ளனர். ஊடகங்களுக்கான அச்சுறுத்தல் விடயத்தில் இலங்கை கவனத்துக்கு உரிய நாடாக ஆகிகியருக்கிறது.

சென்ற 2005ஆம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 63 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1300 ஊடகவியலாளர்கள் உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று எல்லை கடந்த பத்திரிகையாளர் அமைப்பின் இவ்வருட ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. கடந்த ஒரு தசாப்தத்துக்குள் அதிக எண்ணிக்கையான சம்பவங்கள் 2005இலேயே நிகழ்ந்துள்ளதாகவும் அந்த அளிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் ஊடகங்கள்

ஈழப்போராட்டத்தின் விளைவாக சிங்கள-தமிழ் சமூகங்களுக்கிடையே வழுப்பெற்றுவரும் துரவமயமாதலுக்கும் இந்த ஊடக துருவமய செய்தியிடலும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துவருகிறது. தமிழ்ச் சூழலில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது.

குறிப்பாக 1992 பெப்ரவரியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் ஊடகங்கள், மற்றும், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் மத்தியில் மிகப்பெரும் மாறுதல் ஏற்படுத்தப்பட்டது. புலிகளே தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள் எனும் கருத்தாக்கத்தை வலுப்படுத்துவதற்காக செய்யப்பட்ட முயற்சிகளின் விளைவாக விடுதலைப்புலிகளை நிபந்தனையின்றி ஆதரவு வழங்கும் போக்கு வலுப்பெற்றது. போகப்போக அவ்வாறு நேசரிதியான விமாசனங்களைக் கூட எதிரியின் விமர்சனங்களாகவும், புலிகளுக்கு எதிரானதாகவும் புனையப்பட்டது. புலிகளுக்கு எதிரான விமர்சனம் தமிழர்களுக்கு எதிரான விமர்சனமாக பிரச்சாரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக மெதுமெதுவாக அனைத்து சக்திகளும் விமர்சனங்கள் செய்வதிலிருந்து பின்வாங்கியதுடன், பலர் ஒட்டுமொத்தமாகவே கண்மூடித்தனமான புலிஆதரவு நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கினர். அவ்வாறு செய்யாவிட்டால் தாம் தமிழ் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்படுவோம்... தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்கிற பீதிக்கு உள்ளாக்கப்பட்டனர் இவ்வாறான அரசியல், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள்.

இதன் உச்சம் என்னவென்றால் போட்டிபோட்டுக்கொண்டு தம்மை புலி ஆதரவாளர்களாக காட்டி தாம் புலி - எதிர்ப்பாளர்கள்- இல்லை என்பதை நிறுவ முயற்சித்தது தான்.

உண்மையைச் சொல்லப்போனால் தென்னிலங்கையில் சிங்களப் பத்திரிகைகளுக்கு கூட இந்த நிலை ஏற்படவில்லை.

தேசியத்தை உயர்த்திப் பிடித்தலே இன்றைய வியாபார வெற்றிக்கு தந்திரோபாயமாக அமையும் நிலை தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சிங்கள மொழி ஊடகங்களில் செய்தியிடல் மற்றும் கருத்தாக்கங்களுக்கான பத்தி எழுத்துக்கள் என்பன பல, அரசையும் பேரினவாதத்தையும் அம்பலப்படுத்தத்தான் செய்கின்றன. அந்த நிலை தமிழில் இல்லை என்பது தான் இன்றைய கசப்பான உண்மை.

ஏதோ இன்று இலங்கைக்கு வெளியில் இணையங்களின் வாயிலாகவும், வேறும் சில இலத்திரனியல், ஊடகங்கள் மூலமும் மறைக்கப்பட்ட செய்திகள் வெளிவந்த போதும், மாற்றுக்கருத்தாக்கங்கள் வெளியிடப்படுகின்ற போதும் அது பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டபடி சிறு அளவில் உயிர்வாழத்தான் செய்கின்றன.

அவசரகாலசட்டம்
2005ஆம் ஆண்டு ஊடகவியலாளர்கள் பலருக்கும் அச்சுறுத்தல் நிறைந்த ஆண்டு. கொலை, பயமுறுத்தல், சித்திரவதை கைது, தடுத்துவைப்பு, வீடுகள் சோதனையிடல், பத்திரிகையாளர்களின் உடமைகள் சேதப்படுத்தல், அவை பறிக்கப்படல் மற்றும் பத்திரிகைக் காரியாலயங்கள் மீதான தாக்குதல்கள் சோதனையிடல் தொலைபேசி மிரட்டல் என பல்வேறு சிரமங்களுக்கு ஊடகங்களும் ஊடகவியலாளாலர்களும் ஆளானார்கள்.

உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் தொடர்ந்த போதும் அரசும் ஆயுதக்குழுக்களும் அவற்றை சற்றும் லட்சியம் செய்யதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் மீதான அடக்குமுறையை மேலும் சட்டபூர்வமாக ஆக்குவதற்கு அரசும் எத்தனித்துக்கொண்டிருந்த வேலை செப்டம்பர் மாதம் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலைசெய்யப்பட்டார். இது அரசுக்கு சாதகமாக இருந்தது. தமிழர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்க்கவும், ஊடகங்களின் குரலினை நசுக்கவும் இதற்கு முதலும் அரசுக்கு கிடைத்த சட்டபூர்வமான ஆயுதமாக அவரசரகால சட்டமே இருந்து வந்தது. செப்டம்பர் 21ஆம் திகதி அவரகாலசட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாராளுமன்ற வாக்களிப்பு இனங்களுக்கிடையேயான பிளவினை அப்பட்டமாக கோடிட்டு காட்டியது. 94 வாக்குகள் வித்தியாசத்தில் இது நிறைவேற்­றப்பட்டது. 118 வாக்குகள் அவரகால சட்டத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்டன. ஆதரவளித்தோர் அனைவரும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள். 24 வாக்குகள் மட்டுமே எதிராக அளிக்கப்பட்டன. அவை அனைத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பி­னர்களது. இதில் 20 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். இருவர் மலையக மக்கள் முன்னணியினர். ஒருவர் மனோ கணேசன் மேல்மாகாண மக்கள் முன்னணி. அடுத்தவர் மகேஸ்வரன் (ஐக்கிய தேசியக் கட்சி).

கடந்த காலங்களில் தணிக்கை அமுல்படுத்தப்பட்டதும் ஊடகங்கள் தண்டிக்கப்பட்டு அவற்றை இழுத்து மூடியது எல்லாமே இந்த அவரகால சட்டத்தை பாவித்துத்தான் நிறைவேற்றப்பட்டது. 1948இல் சுதந்திரம் கிடைத்தது தொடக்கம் இந்த 58 வருட காலத்திற்குள் ஏறத்தாழ 37 வருடங்கள் இலங்கை அவரகால சட்டத்தின் கீழ் தான் ஆட்சி செலுத்தப்பட்டிருக்கிறது. அதிகமான தட­வைகள் அவசரகாலசட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது இலங்கையிலாகத் தான் இருக்கும். இது கின்னஸ் சாதனை என்றும் கூறப்படுகிறது.

சுனாமி தாக்குதலுக்குப் பின் அதனைக் காரணமாக் கொண்டு ஜனவரி 4ஆம் திகதி ஜனாதிபதி சந்திரிகா தனது நிறைவேற்று அதிகாரத்தினைப் பாவித்து அவசரகாலசட்டத்தை பாராளுமன்றத்தின் அனுமதியில்லாமலேயே பிரகடனப்படுத்தினார். 14 நாட்களுக்ளுக்குள் அவர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவேண்டும். மீண்டும் 3ஆம் திகதியன்று அவசரகாலசட்டத்தை நீடிப்பதாக அறிவித்ததார். பெப்ரவரி 14ஆம் திகதி தான் மீண்டும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டது. இதனை பல்வேறு மனித உரிமை இயக்கங்கள் கண்டித்திருந்தன.

ஊடக இயக்கங்கள்
ஊடகச் சுதந்திரம் என்பதானது ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரதான கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் சேர்த்துக்கொள்­ளும் ஒரு விடய­மாக ஆக்கப்பட்டதற்கான காரணமே அது அவ்வளவு தூரம் சர்ச்சைக்குரிய, முக்கியத்துவத்துக்குரிய விடயமாக ஆகியிருப்பதால் தான். ஊடகச் சுதந்திரத்தை பாதுகாப்பதாக பல்வேறுபட்ட உறுதிமொழிகள் இவற்றில் அளிக்கப்பட்­டாலும் தேர்தலின் பின் ஆளுங்கட்சியும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி அனைத்துமே ஊடகங்களுக்கு எதிராக மீது பாய்வது சாதாரணமான ஒன்று. 1992இல் பிரேமதாச அரசாங்க காலத்தில் நிகழ்ந்த ஊடகங்களுக்கெ­திரான அடக்குமுறைக்கு எதிராக அனைத்து ஊடக­வியலாளர்களும் ஏனைய அரசியல் சக்திகளுடன் இணைந்து சுதந்திர ஊடக இயக்கம் (FMM - Free Media Movement) ஆரம்பிக்கும் போது அதில் தலைமை தாங்கியவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுமே. ஆனால் ஊடகவியலாளர்க­ளுக்கு அதிக அச்சுறுத்தல்கள், படுகொலைகள் நிகழ்ந்ததும் இவர்கள் காலத்தில் தான்.

இதே வேளை 1995இல் 3வது ஈழ யுத்தம் தொடங்கிய போது தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் தலைதூக்கியபோது, குறிப்பாக தமிழ் பத்திரிகையா­ளர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துச் சென்ற போது சுதந்திர ஊடக இயக்கம் கண்டுகொள்­ளாத சந்தர்ப்பங்களை தமிழ் ஊடகவியலாளர்கள் அவதானித்தனர். சுதந்திர ஊடக இயக்கதின் நிர்வாகத்திலும் தமிழ் ஊடகவியலாளர்கள் அப்போது தெரிவு செய்யப்படவில்லை. இந்நிலைமையானது ஊடகவியலாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிற இனத்துவ துருவமயம் அப்பட்டமாக தெரியவே 1999இல் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் (SLTM- Sri LankaTamil Media Alliance) என்கிற பெயரில் ஊடக அமைப்பொன்றை நிறுவிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்க­ளுக்­குமான அச்சுறுத்தல், அடக்குமுறைகள் இந்த வருடம் மேலும் அதிகரிக்கக்கூடும் என பரவலாக அஞ்சப்படுகிறது.

இலங்கையின் உள்நாட்டு அரசியல் பதட்ட நிலைமையானது எந்த நேரத்திலும் எவருக்கும் எதுவும் நடக்கலாம் என்கிற நிலையே தொடர்கிறது. ஊடகவியலா­ளர்களைப் பொருத்தவரை எமன் எந்த ரூபத்தில் வருவான் என்பது நிச்சயமாக சொல்ல­முடியாத நிலையே தொடர்கிறது. ஏனெனில் சுதந்திர ஊடகவியலாளர்க­ளுக்கான அச்சுறுத்தல் சகல மட்டங்களிலிருந்தும் தான் இருக்கின்றன. இது வரை நடந்து முடிந்த சம்பவங்களில் பல யாரால் மேற்கொள்­ளப்­பட்டது என்பதை அடித்து கூற முடியாத நிலையே இன்னமும் நீடிக்கிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

No comments: