Monday 18 November 2013

"ஆலையடிவேம்பில் ஜனாதிபதியின் பிறந்தநாள் விசேட பூஜை நிகழ்வு"



இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 68 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு நல்லாசிகள் வேண்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வு, பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் ஜனாதிபதியின் பிறந்தநாளான 18.11.2013, திங்கட்கிழமையன்று அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளரின் அழைப்பினை ஏற்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன இவ்வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் ஆலயத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகக்குழு அங்கத்தவர்களும் பங்குபற்றிய இப்பூஜை நிகழ்வுகளை ஆலயக்குரு சிவஸ்ரீ.ப.கேதீஸ்வரன் அவர்கள் நடாத்திவைத்தார்.

இங்கு வனவிலங்குகளால் இருப்பிடங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெள்ளம், சுழல்காற்று போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புற்றவர்களுக்கு பிரதேச செயலகத்தின் மூலமான சமுகசேவைகள் அமைச்சின் நிதியுதவிக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன. இவற்றைப் பிரதேச செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் வழங்கிவைத்தனர்.


 REPORTER 
Like ·  ·  

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கிவைப்பு.


Wednesday, October 30, 2013


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கிவைப்பு.


(உ.உதயகாந்த்)

 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் 2013.10.28 ஆம் திகதி இடம்பெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட செயலாளர்  நீல் டி அல்விஸ்  மற்றும்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன ஆகியோர் கலந்துகொண்டதுடன் , 39 பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனங்களையும் வழங்கிவைத்தார்கள்.

இந் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரண்டு விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.




















இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு.


இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு.

(உ.உதயகாந்த்)

இவ்வருடம் இடம்பெற்ற தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவித்து சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 21.10.2013, திங்கட்கிழமை காலை அக்கரைப்பற்று, இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலயத்தில் விழாக்குழுத் தலைவர் டபிளியூ.ஜி.ஏ.சுமித் தீப்திகுமார தலைமையில் இடம்பெற்றது.

இவ்விழாவிற்கு அதிதிகளாக திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், அக்கரைப்பற்று மக்கள் வங்கி முகாமையாளர் நசீர், நீத்தை பிரதேச இராணுவ கமாண்டர் கேணல்.நெவில் பெரேரா, ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் வீ.குணாளன், சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் ஆர்.கேந்திரமூர்த்தி, கிராமசேவை உத்தியோகத்தர் பீ.ஹிரிசாந்த், அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரி அதிபர் எம்.கிருபைராஜா, இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் பீ.கோபாலபிள்ளை மற்றும் தற்போதைய அதிபர் திருமதி.எல்.கோபாலபிள்ளை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சித்திபெற்ற மாணவர்களும் அதிதிகளும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் அம்பாறை வீதியிலிருந்து பாண்ட் வாத்திய இசையுடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, தேசிய கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடக்க நிகழ்வுகளாக மங்கல விளக்கேற்றலும் வித்தியாலய கீதமும் இசைக்கப்பட்டன.

தலைமையுரை, வரவேற்புரைகளைத் தொடர்ந்து அதிதிகள் உரைகள் இடம்பெற்றதோடு பாடசாலை மாணவர்களால் மேடையேற்றப்பட்ட கலைநிகழ்ச்சிகள் இவ்விழாவில் சிறப்பிடம் பெற்றிருந்தன. இவற்றின் முடிவில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவித்து சான்றிதழ் வழங்கும் மற்றும் பரிசில்கள் வழங்கும் வைபவம் என்பன இடம்பெற்றன.

இம்முறை இப்பாடசாலையில் 26 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்திருந்ததுடன், இவர்களில் ஏ.கிஷோமிக்கா என்ற மாணவி 180 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.

கடந்த வருடம் இப்பாடசாலையில் 30 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தபோதிலும் இவ்வருடம் 26 மாணவர்கள் சித்தியடைந்தமைக்கு அம்பாறை மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி இம்முறை 154 ஆக உயர்த்தப்பட்டமையே காரணமென்றும், கடந்தமுறை வெட்டுப்புள்ளியானது 147 ஆக இருந்ததாகவும் இவ்விழாவில் உரையாற்றிய திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.


நிகழ்வின் இறுதியில் மாணவர்களின் வெற்றிக்காய் அரும்பாடுபட்ட ஆசிரியர் எஸ்.கிருசாந்தன் அவர்கள் பொன்னாடை போர்த்தப்பட்டும் பரிசுகள் வழங்கப்பட்டும் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார்.















விவேகானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.


விவேகானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

(உ.உதயகாந்த்)

இவ்வருடம் இடம்பெற்ற தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவித்து சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 22.10.2013, செவ்வாய்க்கிழமை காலை அக்கரைப்பற்று, விவேகானந்த வித்தியாலயத்தில் அதிபர் திருமதி.பீ.நித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விழாவிற்கு அதிதிகளாக திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் வீ.குணாளன், இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.எல்.கோபாலபிள்ளை, கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய அதிபர் எம்.கிருஸ்ணபிள்ளை மற்றும் இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்  திருமதி.எல்.பேரின்பராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சித்திபெற்ற மாணவர்களும் அதிதிகளும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் சாகாமம் வீதியிலிருந்து பாண்ட் வாத்திய இசையுடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தலைமையுரை, வரவேற்புரைகளைத் தொடர்ந்து அதிதிகள் உரைகள் இடம்பெற்றதோடு பாடசாலை மாணவர்களால் கலைநிகழ்ச்சிகளும் இவ்விழாவில் மேடையேற்றப்பட்டன. இவற்றின் முடிவில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவித்து சான்றிதழ் வழங்கும் மற்றும் பரிசில்கள் வழங்கும் வைபவம் என்பன இடம்பெற்றன.

இம்முறை இப்பாடசாலையில் 6 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்திருந்ததுடன், இவர்களில் சு.டனூஜ் என்ற மாணவன் 171 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றிருந்தார். அத்தோடு, துரதிஸ்டவசமாக 153 புள்ளிகளைப் பெற்று ஒரு புள்ளியால் மாணவரொருவர் சித்திபெறும் வாய்ப்பை இழந்திருந்தமை கவலைதரும் விடயமாக இருந்தது. எனினும் அந்த மாணவரும் சித்தியடைந்த ஏனைய மாணவர்களுக்குச் சமமாகக் கௌரவிக்கப்பட்டமை இவ்விழாவில் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.

கடந்த வருடம் இப்பாடசாலையில் 2 மாணவர்களே புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தபோதிலும் இவ்வருடம் 6 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.


இந்நிகழ்வில் இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்  திருமதி.எல்.பேரின்பராஜா அவர்களின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு நிகழ்வின் இறுதியில் மாணவர்களின் வெற்றிக்காய் அரும்பாடுபட்ட ஆசிரியர் எஸ்.பிரபாகரன் அவர்கள் பொன்னாடை போர்த்தப்பட்டும் பரிசுகள் வழங்கப்பட்டும் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அவரது பெற்றோரும் கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.