Monday 27 July 2015

அப்துல் கலாம் காலமானார்

 photos
 இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சற்று முன்னர் மரணமடைந்துள்ளார்.
 
உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சற்றுமுன்னர் காலமாகியுள்ளார்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.இல் திங்கட்கிழமை(27) நடைபெற்ற கருத்தரங்கில் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 
மயங்கி விழுந்த அப்துல் கலாம், பெத்தானி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்..
அவரது மரணத்தையடுத்து முழு இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
- See more at: http://www.tamilmirror.lk/150979#sthash.9T4sTtsr.dpuf

குப்பை கொட்டியவருக்கு அபராதம்

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் வீதியில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட  நபருக்கு 2,000 ரூபாய் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், திங்கட்கிழமை (27) அபராதம் விதித்துள்ளார்.
குறித்த நபரை கடந்த 15ஆம் திகதி கைது செய்த அக்கரைப்பற்று பொலிஸார், இவர் மீது வழக்குத் தொடுத்திருந்தனர். 
இவ்வழக்கு விசாரணை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மினி சூறாவளி

எஸ்.கார்த்திகேசு 
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை திடீரென்று வீசிய மினி  சூறாவளி காரணமாக சுமார் 15 வீடுகள் சேதமடைந்ததாக அப்பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார். 

  சாகாமம் கிராமத்தில் ஒன்பது வீடுகளும் இரண்டு கால்நடைகளின் கொட்டில்களும் ஸ்ரீவள்ளிபுரத்தில்; மூன்று வீடுகளும் காஞ்சிரம்குடாவில் மூன்று வீடுகளும்  மற்றும் விநாயகபுரத்தில் ஒரு வீடும் சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.   இந்த சூறாவளியின்போது மரங்கள் முறிந்து விழுந்ததுடன், வீட்டுக்கூரைகளும் காற்றினால் அள்ளுண்டுள்ளன. 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்களின்  வீடுகளில் தங்கியுள்ளனர். இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Wednesday 22 July 2015

சந்தை கட்டடத்தொகுதியில் தீ


அம்பாறை பஸ் நிலையத்தை அண்டியுள்ள சந்தை கட்டடத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை (21) நள்ளிரவு தீ பரவியதால், கடையொன்று எரிந்து நாசமாகியுள்ளது. இதனால், அக்கடையிலிருந்த சுமார் 100,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள்  எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இத்தீயினால் அருகிலிருந்த உபதபால் நிலையம் உட்பட சில வியாபார நிலையங்களும் சிறிய பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தீயணைப்புப் பிரிவினரும்; பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். தீ பரவியமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆளில்லா கமெரா இருவர கைது

அம்பாறை, பொத்துவில் முஹூது மஹா விகாரை மற்றும் அறுகம்பை கடற்கரையின்  காட்சிகளை நூறு அடி உயரத்தில் பறக்கக்கூடிய ஆளில்லா கமெராவைப் பயன்படுத்தி படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பை சேர்ந்த 31 மற்றும் 33 வயதுகளையுடைய இருவரை செவ்வாய்க்கிழமை (21) கைதுசெய்ததாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்துக்கு சென்று சந்தேக நபர்களை கைதுசெய்ததுடன்,  அவர்களிடமிருந்து மேற்படி கமெராவையும் கைப்பற்றியதாக பொலிஸார் கூறினர். 

இந்தக் கமெரா மூன்றரை கிலோகிராம் நிறையுடையதும் ஓர் அடி நீளம், அகலம், உயரமும் கொண்டதுடன்,  100 அடி உயரத்தில் ஆகாயத்தில் பறந்து படம் எடுக்கக்கூடியதாகும் என பொலிஸார் கூறினர். 

இலங்கைக்கு அதிக உல்லாசப் பயணிகளை வரவழைக்கும் நோக்கில் இயற்கை எழிலை ஆகாயத்திலிருந்து படம் எடுப்பதற்காக  ஆகாயக் கமெராவைக் கொண்டு தாம் படம் எடுத்ததாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எவ்விதத்திலும் தாம்  நடந்துகொள்ளவில்லை எனவும் சந்தேக நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

எனினும், இத்தகைய ஆளில்லா ஆகாயக் கமெராவைப் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி தேவை என்று பொலிஸார் கூறினர். 

Sunday 19 July 2015

ஆற்றில் மீட்கப்பட்ட சடலம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் களியோடை ஆற்றில், நேற்று (18) மீட்க்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று 7/4 பிரிவைச் சேர்ந்த 34 வயதுடைய மகேஸ்வரன் சதீஸ்குமார் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வியாழக்கிழமை மாலை சந்தைக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பவில்லை என நேற்றைய தினம்(18) பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு குறித்தநபரின் தாயார் சென்றுள்ளார். இதன்போதே, மீட்க்கப்பட்ட சடலம் தொடர்பிலான தகவலை பொலிஸார் தெரிவித்ததையடுத்து, உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸார், மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

Friday 17 July 2015

தேர்தல் முறைப்பாடுகளை தெரிவியுங்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கு 3 தொலைபேசி இலக்கங்களை, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று அறிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணையாளர் இந்த இலக்கங்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இதற்கமைய, 011 2887756, 011 2887759 மற்றும் 011 2877631 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டோ அல்லது 011 2887717 மற்றும் 011 2877636 ஆகிய பெக்ஸ் இலக்கங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்பியோ, தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என அவர் மேலும் கூறினார். 

Thursday 16 July 2015

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம்

இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கல்வி அமைச்சுடன் இணைந்து ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் பாடசாலை மட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான பாதுகாப்புக் குழுக்களை அமைப்பதனூடாக அவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்று இன்று (16) காலை கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.






குறித்த பாடசாலையின் அதிபர் கே.தட்சணாமூர்த்தியினால் ஒழுங்குசெய்யப்பட்டு, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. நிசாந்தினி வசந்தரூபன், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. யசோதா கபிலன் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சிபாயா றமீஸ் ஆகியோரும் மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலை மட்டத்திலும், மாணவர்கள் தாம் வாழும் சமூகத்திலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களைத் தமது உரிமைகள் தொடர்பில் அறிவூட்டல், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் வழிமுறைகள் தொடர்பில் தெளிவூட்டல், அவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பில் நெறிப்படுத்தல் போன்ற விடயங்களில் பிரதேச செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் மாணவர்களிடையே தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

மேலும் பாடசாலை மட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான பாதுகாப்புக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிபர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்று, அவை தொடர்பான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

Wednesday 15 July 2015

பனங்காடு பகுதியில் விபத்து ஒருவர் பலி

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ்பிரிற்குட்பட்ட   சாகாமம் பிரதான வீதி பனங்காடு பகுதியில் சற்று முன்   உழவு இயந்திரத்திரத்தினால் மோதுண்ட துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த பனங்காட்டினைச் சேர்ந்த 56வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தந்தையான  இ.பத்மன் என்பவர் கவலைக்கிடமான  நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந் நிலையில் விபத்துக்குள்ளான நபர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்திலிருந்து தெரிய வருகின்றது

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்  


திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சி 5ஆசனங்களை கைப்பற்றும்

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலுள்ள 7ஆசனங்களில் ஜக்கிய தேசிய கட்சி 5ஆசனங்களை கைப்பற்றும் என ஜக்கியதேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் அம்பாரை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளருமான தயாகமகே தெரிவித்தார்.
நேற்று (13) அம்பாரை மாவட்ட செயலக தேர்தல் ஆணையாளரிடம் வேட்புமனுவை கையளித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் ஜக்கியதேசிய கட்சியுடன் .இணைந்து போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடன் 5 ஆசனங்களை பெறும் என நம்பிக்கை வெளியிட்டார்.
ஆகஸ்ட 17ஆம் திகதி ஜக்கியதேசிய கட்சியானது அனைத்துக்கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஆட்சி அமைக்கும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார். வேட்பு மனுத்தாக்கலின் பின்னர் ஊர்வலம் நடைபெற்றது

விஸ்வநாதனே, மெல்லிசையின் விஸ்வரூபமே

விஸ்வநாதனே, மெல்லிசையின் விஸ்வரூபமே, நீ கண்ணைவிட்டுப் போனாலும் எங்கள் கருத்தைவிட்டுப் போவதில்லை; நீ மண்ணைவிட்டுப் போனாலும் எங்கள் நினைவைவிட்டுப் போவதில்லை!
 phots

"மெல்லிசை மன்னர்' எம்.எஸ். விஸ்வநாதன் மறைந்துவிட்டார் என்கிற செய்தி கேட்டு மகுடிக்கு மயங்கிய பாம்பாகக் கிடக்கும் அவரது ரசிகர் கூட்டம் மட்டுமல்ல, ஹார்மோனியப் பெட்டிகளும், வயலின்களும், தபேலாக்களும் கூடக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கக் கூடும்.
இனிமேல் அந்த இசைக் கருவிகளில் வேறு யாருக்குமே புலப்படாது மறைந்திருக்கும் இனிமைகளை எல்லாம் வெளிக்கொணரும் தேர்ச்சி பெற்ற இசை மேதை பிறந்துதான் வர வேண்டும் என்பது அவற்றுக்குத் தெரியாதா என்ன?
பிரபல இசையமைப்பாளராக இருந்த எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் ஹார்மோனியப் பெட்டியைத் துடைத்து சுத்தம் செய்து வைக்கும் பணியைச் செய்து கொண்டிருந்த விஸ்வநாதன் என்கிற சிறுவன், வருங்காலத்தில் ஹார்மோனியத்திலிருந்து ஆயிரக்கணக்கான மெட்டுகளை வெளிக்கொணர்ந்து இசை சாகசம் நடத்தப் போகிறான் என்பது இசைத் தெய்வம் அவருக்கு அளித்திருந்த வரம்.
பிரபல இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமனின் குழுவில் இருந்த விஸ்வநாதனையும், இராமமூர்த்தியையும் இணைத்து வைத்த பெருமை "கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணனைச் சேரும்.
சி.ஆர். சுப்பராமனின் மரணத்தைத் தொடர்ந்து, பாதியில் நின்றிருந்த "தேவதாஸ்' படத்தின் பின்னணி இசையை முடித்துக் கொடுக்க இணைந்தனர் என்றாலும், என்.எஸ். கிருஷ்ணனின் இயக்கத்தில் உருவான "பணம்' திரைப்படம் தான் மெல்லிசை இரட்டையர்களை முறையாகத் தொழில்ரீதியாக இணைத்த திரைப்படம்.
அடுத்த 13 ஆண்டுகள் மெல்லிசை இரட்டையர்கள் உருவாக்கி அளித்த இசைக் காவியங்கள், தமிழ்த் திரையுலக வரலாற்றில் அழிக்க முடியாத பதிவுகள்.
மும்மூர்த்திகளும், ஏனைய சாகித்ய கர்த்தாக்களும் மெட்டமைத்துப் பல்வேறு ராகங்களில் உருவாக்கிய பாடல்களை மேடையில் இசைக்கும் பாடகர்களை நாம் மேதைகள் என்கிறோம். ஆனால், "மெல்லிசை மன்னர்' எம்.எஸ். விஸ்வநாதனால், ஒரு கல்யாணியையோ, காம்போதியையோ, ஆரபியையோ, ஆபோகியையோ அதன் அடிப்படை ஸ்வரங்களைப் பயன்படுத்தி, மெட்டமைத்து மூன்று நிமிடங்கள் இசைக்கின்ற பாடலாக்கிவிட முடியும்.
இது மாபெரும் இசை மேதைகள் என்று போற்றப்படும் கர்நாடக இசையுலக ஜாம்பவான்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வித்வத்தின் உச்சகட்டம் அல்லவா!
"பிருந்தாவன சாரங்கா' ராகத்தைப் பயன்படுத்தி, "பொன்னொன்று கண்டேன், பெண்ணங்கு இல்லை' என்றும், "கீரவாணி'யைக் கையாண்டு "நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை' என்றும், "நடபைரவி'யை அடிப்படையாகக் கொண்டு, "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா' என்றும், "பெஹாக்' ராகத்தில் "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்' என்றும், "ஆபேரி'யில் "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல', "ஆபோகி'யில் "தங்கரதம் வந்தது வீதியிலே', "மத்யமாவதி'யில் "முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்' என்று எண்ணிலடங்காத தனித்துவமான கற்பனைகளை அள்ளி வழங்கி இருக்கிறார் எம்.எஸ்.வி.
இந்த மாமேதைக்கு அல்லவா சென்னை சங்கீத வித்வத் சபை நியாயமாகப் பார்த்தால் "சங்கீத கலாநிதி' விருது வழங்கி கௌரவித்திருக்க வேண்டும்?
ராகங்களின் நாடியைப் பிடித்து, அடிப்படை ஸ்வரங்களின் உதவியுடன் ஒன்றரை நிமிடத்தில் சாகித்யமாக்கி, அதை ஜனரஞ்சகப்படுத்தவும் தெரிந்த இசை வித்தகனை அடையாளம் காணக்கூடத் தெரியாதவர்கள், கர்நாடக சங்கீதத்தை "சம் ரக்ஷிப்பதாக' சொல்லிக் கொள்வது எத்துணை போலித்தனம்?
அது போகட்டும். முதல்வர்களாக இருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருவருமே எம்.எஸ். விஸ்வநாதனின் திறமையை அறிந்தவர்கள் மட்டுமல்ல, பயன்படுத்திக் கொண்டவர்களும்கூட. பல காலகட்டங்களில் மத்திய அரசில் இருந்தவர்களுக்கு நெருக்கமாகவும், மத்திய அரசை வழிநடத்துபவர்களாகவும் இருந்தவர்கள். அப்படி இருந்தும், இவ்வளவு திறமைசாலியான ஒரு மேதைக்கு "பத்ம விபூஷண்' விருது பெற்றுத் தந்தார்களா? அந்த விருதுக்குப் பரிந்துரைத்தார்களா என்றால் இல்லை.
அவர்களது செய்கை வியப்பைத் தரவில்லை. எம்.எஸ். விஸ்வநாதன் அதை ஒரு பொருட்டாக நினைத்திருந்தால், அவர்களைச் சந்தித்துத் தனக்கு "பத்ம' விருது பெற்றுத்தரப் பரிந்துரைக்கச் சொல்லியிருப்பார். சொல்லவில்லை. அதுதான் மெல்லிசை மன்னரை மாமேருபோல உயரச் செய்து நம்மை மரியாதையுடன் நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. அவருக்கு தரப்படாததால் "பத்ம' விருதுகள் மரியாதை இழக்கின்றன என்பதுதான் உண்மை.
எம்.எஸ். விஸ்வநாதன் என்கிற இசைக் கலைஞனின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று ஏறத்தாழ 1,200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும், மூன்று தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து இசையமைப்பாளராக கோலோச்சியிருக்கும் எம்.எஸ். விஸ்வநாதன் என்கிற இறவாப் புகழ்பெற்ற இசைக் கலைஞன் தனது 88வது வயதில் நேற்று நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார் என்பதைவிட இசையாய் காற்றில் கலந்திருக்கிறார் என்பதுதான் நிஜம்.
‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' என்கிற அவர் இசையமைத்த தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்படும் காலம் வரை, எம்.எஸ். விஸ்வநாதன் என்கிற இசை மேதையின் நினைவும், புகழும் நிலைபெற்றிருக்கும்.
விஸ்வநாதனே, மெல்லிசையின் விஸ்வரூபமே, நீ கண்ணைவிட்டுப் போனாலும் எங்கள் கருத்தைவிட்டுப் போவதில்லை; நீ மண்ணைவிட்டுப் போனாலும் எங்கள் நினைவைவிட்டுப் போவதில்லை

Tuesday 14 July 2015

விபத்தில் சாரதி எவ்வித காயமுமின்றி தப்பினார்

 வி.சுகிர்தகுமார்


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோளாவில் பிரதேசத்தில் நேற்று (12.07.2015) இடம்பெற்ற விபத்தில் கார் ஒன்றின் முன்பகுதி முற்றாக சேதமடைந்த போதும் சாரதி எவ்வித காயமுமின்றி தப்பினார். சாகாமம் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்ற கார் கோளாவில் பிரதேசத்தின் வீதி அருகில் ஆலய பதாதையை கட்டுவதற்காக நடப்பட்டிருந்த மரமொன்றுடன் மோதியதனாலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்போது வீடொன்றிற்கு இணைப்பு செய்யப்பட்ட மின்சார வயர் ஒன்றும் அறுந்து வீழ்ந்துள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இத்தேர்தலில் வெற்றி பெறும்

ஏனைய கட்சிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இத்தேர்தலில் வெற்றி பெறும். அதனூடாக தேசிய ரீதியான உரிமையோடு கூடிய அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கு (றொபின்) தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட மக்களால் நேற்று(13) அளிக்கப்பட்ட மகத்தான வரவேற்பின்போது இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் அம்பாரை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்;னர் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.
அதிகளவான ஆதரவாளர்கள் அவரது வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

Monday 13 July 2015

இளைஞர் கத்திக் குத்துக்கு உள்ளாகி மரணம்

அம்பாறை, மல்வத்தை தம்பிநாயகபுர பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை தயாளன் (வயது 24) என்ற இளைஞர் கத்திக் குத்துக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். கத்திக் குத்தில் மரணமடைந்த நபரும் அவரது நண்பரும்; சம்மாந்துறை 12ஆம் கொலனி பிரதேசத்தில் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் திங்கட்கிழமை (13) இரவு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன்போது இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளின் ஒளியை செலுத்திப் பார்த்தபோது,  வீதியோரத்தில் இளைஞர்கள் சிலர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், மேற்படி இருவருக்கும் இளைஞர் குழுவுக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பில் செல்லத்துரை தயாளன் கத்திக் குத்துக்கு உள்ளாகி அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதேவேளை, இந்தக் கைகலப்பின்போது கத்திக் குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபரும் படுகாயமடைந்துள்ளார்.  இவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/150220#sthash.p2nYyjGt.dpuf

6,151, பேர் போட்டி

 6,151, பேர் போட்டி ஒரு வாரத்துக்குள் விருப்பு இலக்கம் கொழும்புக்கு நீண்ட வாக்குச்சீட்டு 36 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு நிராகரிப்பு பட்டியலில் யாழ். முன்னணியில் அழகன் கனகராஜ் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை 13ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலின் ஊடாக 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இம்முறை 300, அரசியல் கட்சிகளும் 201,  சுயேட்சை குழுக்களும் களத்தில் குதித்துள்ளன. அரசியல் கட்சிகளின் சார்பில் 312 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அதில் 12 மணிக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 225 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அதில் 36 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 


225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு தேசிய பட்டியல் ஊடாக 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகளின் சார்பில்  3,653  பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில்  2,498 பேரும் என மொத்தமான 6,151 பேர் இம்முறை தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் தரப்பில் தனித்து களமிறங்கியுள்ள  இதர கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கிடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மலையக பொருத்தவரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது கோட்டையான நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தும் சிறுபான்மையின மக்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்ற பதுளை, கண்டி ஆகிய இரு மாவட்டங்களிலும் தனித்தும் போட்டியிடுகின்றன. பிரஜைகள் முன்னணியின் செயலாளர்  ஸ்ரீ ரங்கா, இம்முறை போட்டியிடாத நிலையில் முன்னணியின் சார்பில்  பெண்களை மாத்திரம் அவர் களமிறக்கியுள்ளார். தேர்தலில் போட்டியிடுபர்களுக்கான விருப்பு இலக்கம் ஒருவாரத்துக்குள் சகல மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் ஆகக்கூடுதலாக 8 வேட்பு மனுக்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டுள்ளன. அதில், அரசியல் கட்சிகளின் சார்பில் 2, வேட்பு மனுக்களும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 6 வேட்பு மனுக்களும் அடங்குகின்றன. இந்த 22 தேர்தல் மாவட்டங்களில் ஆகக்கூடுதலாக 792 பேர், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். அந்த மாவட்டத்தின் வாக்குச்சீட்டு ஏனைய மாவட்டங்களை விடவும் நீளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  ஆகக் குறைந்ததாக 88 பேர் அனுராதபுரம்  மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். இதேவேளை, முன்னாள் பிரதமர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் தி.மு ஜயரட்ன ஆகிய இருவருக்கும் இம்முறை வேட்பு மனுவில் இடமளிக்கவில்லை என்பதுடன் தேசியப்பட்டியலிலும் அவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Saturday 11 July 2015

மாணவர் இருவர் நீரில் மூழ்கி பலி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் இருவர், விசுவமடு குளத்தில் மூழ்கி இன்று சனிக்கிழமை(11) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா சென்று விசுவமடு குளத்தில் குளித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சிறுமி துஷ்பிரயோகம்

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குண்டுமடு பிரதேசத்தில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 33 வயதுடைய சந்தேக நபரை பொத்துவில் பொலிஸார் இன்று (11) கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர். 

 சிறுமியின் அயல் வீட்டில் வசித்துவரும் மேற்படி சந்தேக நபரின் வீட்டிற்கு சிறுமி கடந்த 08 ஆம் திகதி சென்றுள்ளார்.

 இதன் போதே மேற்படி சந்தேக நபர் சிறுமியை துஷ்பிரயோகத்தக்கு உட்படுத்தியுள்ளார்.

 இவ்விடயம் குறித்து சிறுமி இன்று குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தியதையடுத்தே, குடும்பத்தார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பிரதேச இளைஞர் கழக விளையாட்டு விழா

பிரேம்..
இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று (10) காலை அக்கரைப்பற்று தருமசங்கரி மைதானத்தில் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.





இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்துசிறப்பித்ததுடன், விசேட அதிதிகளாக மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களான யூ.எல்.உமர் லெவ்வை மற்றும் யூ.எல்.எம்.மஜீத் ஆகியோருடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ மற்றும் அளிக்கம்பைக் கிராமப் பங்குத்தந்தையர்களான றொஹான் மற்றும் தேவராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


இதன்போது இன்று காலை குறித்த மைதானத்தில் இடம்பெற்ற சுவட்டு நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற வீரர்கள் அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். இவ்விளையாட்டு விழாவில் குறிப்பிடத்தக்கவகையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான அளிக்கம்பை கிராமத்திலிருந்து இம்முறை கலந்துகொண்ட இளைஞர் கழக வீர, வீராங்கனைகள் அதிகமான வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்திருந்தனர். அத்துடன் இளைஞர் விவகார அமைச்சினால் விரைவில் நடாத்தப்படவுள்ள மாவட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான தகுதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.


இச்சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய பிரதேச செயலாளர், அளிக்கம்பை கிராமத்திலிருந்து இம்முறை போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய இளைஞர், யுவதிகளையும் அவர்களை ஊக்குவித்த அருட்தந்தையர்கள் இருவரையும், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரையும் பாராட்டிப் பேசியதுடன், அவர்கள் இடம்பெறவுள்ள மாவட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளிலும் இதேபோன்று வெற்றிபெற்று சாதனைகள் பல படைக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது பேசிய அருட்தந்தை தேவராஜ், பல்வேறு திறமைகள்மிக்க, இலைமறைகாயாகவிருந்த தமது பிரதேச இளைஞர்களுக்கு இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை வழங்கி, அவர்களது திறமைகளை வெளிக்கொணர உதவிய பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தருக்கு தனது பங்கு மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்திருந்தார்

இராஜினாமா

வெகுசன ஊடக மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சின் செயலாளரான கருணாரத்ன பரணவிதானவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்படி நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் 

வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு

அரசசார்பற்ற சர்வதேச தொண்டு நிறுவனமான ஹன்டிகப் இன்டர்நேஷனல் நிறுவனத்தினால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாத பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிகவும் பாதிக்கப்பட்ட சுமார் 800 குடும்பங்களை குறித்த வெள்ள அனர்த்தத்துக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவரும் உடனடி செயற்திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான செயலகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 21 குடும்பங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாங்கட்டப் பணக்கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு  (08) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.




ஹண்டிகப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உதவிப் பணிகளுக்கான முகாமையாளர் ஏ.ஜி.கலீலுர் ரஹ்மான் மற்றும் திட்ட உத்தியோகத்தர் எஸ்.நவராஜ் ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்ற இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.தனராஜன், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினரால் தெரிவுசெய்யப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கு உணவுக் கொள்வனவுக்கான முதலாம் மற்றும் இரண்டாங்கட்ட நிதியுதவிகள் பிரதேச செயலாளராலும் ஏனைய உத்தியோகத்தர்களாலும் வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்த மாதம் இதன் இறுதிக்கட்டக் கொடுப்பனவு குறித்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், இச்செயற்திட்டத்திற்கான பின்தொடர் நடவடிக்கைகளில் ஹண்டிகப் நிறுவனத்துடன் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Regards,

சமயல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சமயல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பானது 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று சனிக்கிழமை(11) அறிவித்துள்ளார்

Friday 10 July 2015

கதிர்காம பாத யாத்திரிகர்கள் சமய ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்க வேண்டும்

வி.சுகிர்தகுமார் 




கதிர்காம பாத யாத்திரிகர்கள் சமய ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் இவ்வேண்டுகோளை பக்தர்களிடம் வினயமாக விடுப்பதாக தெரிவித்தார்.


 யாத்திரையில் கலந்துகொள்கின்றவர்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்துசெல்வதுடன், இறைநாமத்தை மனதில் நிறுத்தவேண்டும்.   பக்தியுடன் யாத்திரையில் பங்கேற்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். கதிர்காம காட்டுவழிப்பாதை பாதயாத்திரை நேற்று உகந்தை மலை கோவிலிலிருந்து ஆரம்பமாகியது.  இதில் 1,800 இற்கும் மேற்பட்டவர்கள் முதல் நாள் யாத்திரையில் இணைந்துகொண்டனர். 

உல்லாசப் பயணி கைது



புத்தர் சின்னம் பொறிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்திருந்து கடற்கரையில் உல்லாசமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில்இரண்டு இஸ்ரேலியர்களைக் கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். 

பொத்துவில் அறுகம்மைக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு உல்லாசப் பயணிகளாக வந்திருந்த இஸ்ரேல் டிமோனா பிரதேசத்தைச் சேர்ந்த எலியர் பென் சுஷான் யோசப் மற்றும் அவரது துணைவியாரான பென் ஆப்ராமோவிச் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தருக்கும் பௌத்த மதத்துக்கும் அவமானத்தை ஏற்படுத்திய குற்றச் சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட சீலை விரிப்பில் அமர்ந்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று தங்களுக்குத் தெரியாதென்றும் தாங்கள் இந்தியாவுக்கு உல்லாசப் பயணிகளாக சென்றிருந்த பொழுது இந்த விரிப்பை வாங்கியிருந்ததாகவும் இந்தியாவில் இது ஒரு குற்றச் செயல் அல்ல என்றும் தாங்கள் அறிவதாகவும் அவர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் பகிஷ்கரிப்பு

அம்பாறை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை தூர இடங்களுக்கான பஸ் போக்குவரத்தை இடைநிறுத்தி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறையிலிருந்து கொழும்பு ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான வழித்தடத்தில் மேலதிகமாக ஒரு பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபையால் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டதாலேயே, இந்த பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர். வழமையாக இரவு ஏழு மணிக்கு ஒரு பஸ் சேவையும் எட்டு மணிக்கு ஒரு பஸ் சேவையும் அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி இடம்பெறுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமையிலிருந்து இரவு 7.45 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கான ஒரு புதிய பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வழமையான தமது பயணிகளின் எண்ணிக்கை இல்லாமல் போவதாகவும் அவர்கள் கூறினர். இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிகள் நேரடியாக அம்பாறை நோக்கி வருவதன் நன்மை கருதியே பொருத்தமான இந்த வேளையில் தாங்கள் இந்தத பஸ் சேவையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகள் தெரிவித்தனர் 

கஞ்சாவுடன் ஒருவர் கைது

வி.சுகிர்தகுமார் 
அம்பாறை,  அட்டாளைச்சேனையின்  06ஆம் பிரிவில்  30 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் 23 வயதுடைய இளைஞர்  ஒருவர் நேற்று வியாழக்கிழமை (09) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறையிலிருந்து வருகைதந்த விசேட பொலிஸ் பிரிவினரால்   கைதுசெய்யப்பட்ட இவர், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

Thursday 9 July 2015

“சிப்தொற” புலமைப்பரிசில்களை வழங்கிவைப்பு

பிரேம்...


ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் 2013/2015 கல்வியாண்டில் உயர்தரம் கற்கும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களப் பயனாளிக் குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 20 மாணவ, மாணவியர்களுக்கு “சிப்தொற” புலமைப்பரிசில்களை வழங்கிவைக்கும் உத்தியோகபூர்வ வைபவம் நேற்று (08)  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.  

ஆலையடிவேம்பு பிரதேச வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்கள தலைமையக முகாமையாளர் கே.நேசராஜாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு முதல் இரண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சான்றிதழ்களையும், வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் பணம் பெறுவதற்கான ரசீதுகளையும் வழங்கிவைத்தார்.


இந்நிகழ்வில் விடயத்திற்குப் பொறுப்பான திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.விஜயபால மற்றும் அளிக்கம்பை கிராமத்திற்கான திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பாக்கியராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Wednesday 8 July 2015

தம்பட்டை விபத்தில் இராணுவ வீரர் பலி

திருக்கோவில் தம்பட்டைபிரதானவீதியில் புதன்கிழமை (08) மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இவ்விபத்தில் அநுராதபுரம் நாச்சியாதீவைச் சேர்ந்த சமன் சிறி பிரேமவன்ச (48 வயது) என்ற
இராணுவவீரரே உயிரிழந்துள்ளார். பொத்துவில் பிரதேசத்திலுள்ள மரணவீடொன்றுக்கு சென்று அநுராதபுரம் திரும்பும் வழியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. லொறி வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் லொறியில் முன்னால் இருந்து பயணித்த இராணுவ வீரர் உயிர் இழந்துள்ளார். குறித்த இராணுவீரரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்றபோது, லொறி சாரதி நித்திரைக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கிப்பதாக தெரிவித்த பொலிஸார், லொறியின் சாரதியை கைதுசெய்ததுடன் லொறியையும் கைப்பற்றியுள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

அம்பாறை, தாண்டியடி பிரதேசத்தில் யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.பயாஸ் றஸாக், எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று செவ்வாயக்கிழமை (07) உத்தரவிட்டார்.

குறித்த யுவதியின் பெற்றோர், நேற்று (07) வைத்தியசாலைக்கு சென்ற வேளையில் வீட்டில் தனிமையில் இருந்த 26 வயதுடைய யுவதியிடம் அலைபேசி இலக்கத்தை தனக்கு அனுப்புமாறு குறித்த நபர் கேட்டுள்ளார்.
அலைபேசியின் இலக்கத்தை வழங்க மறுத்த யுவதியின் வீட்டுக்குள் நுழைந்த அயல் வீட்டு இளைஞன், யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குறித்த யுவதி திருக்கோவில் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரை பொலிஸார் பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.பயாஸ் றஸாக் முன்ணிலையில் நேற்று ஆஜர்படுத்திய போது நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

Tuesday 7 July 2015

திகாமடுல்ல 465,757 பேர் வாக்களிக்க தகுதி

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 465,757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்மாவட்டத்தின் உதவி தெரிவத்தாட்சி அலுவலரும் உதவி தேர்தல்கள் ஆணையாளருமான திலிண விக்கிரமரத்ன தெரிவித்தார்.
இதனடிப்படையில் அம்பாறை தேர்தல் தொகுதியில் 161,999 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 80,357 பேரும் கல்முனை தேர்தல் தொகுதியில் 71,254 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 152,147 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையங்களாக அம்பாறைத் தொகுதியில் 160 நிலையங்களும் பொத்துவில் தொகுதியில் 151 நிலையங்களும் சம்மாந்துறை தொகுதியில் 87 நிலையஙகளும், கல்முனைத் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 464 நிலையங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக அலுவலர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அம்மாவட்டத்தின் உதவி தெரிவத்தாட்சி அலுவலரும் உதவி தேர்தல்கள் ஆணையாளருமான திலிண விக்கிரமரத்ன தெரிவித்தார்.

Monday 6 July 2015

ஏழு கிலோ கிராம் கஞ்சா தூளுடன் கைது

அம்பாறை, பொத்துவில் பகுதியில் ஏழு கிலோ கிராம் கஞ்சா தூளுடன் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை பொலிஸில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் உத்தரவு பிரப்பித்துள்ளார்.
 
மேற்படி இரு சந்தேக நபர்களும் லொறி ஒன்றில் 07 கிலோகிராமும் 370 கிராம் கஞ்சா தூளை மறைத்து வைத்திருந்தனர் என 04ஆம் திகதி பொத்துவில் பொலிஸானால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் போதைப் பொருளுள் விநியோகத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரினால் நீதிமன்றித்திடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) அனுமதி கோரப்பட்டிருந்தமைக்கு அமைய நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
திஸ்ஸமகாராம பகுதியிலிருந்து பொத்துவில் வழியாக அக்கரைப்பற்றுக்கு மரக்கறி மற்றும் பழவகைகளையும் ஏற்றிச் சென்ற லொறியை சந்தேகத்தின் பெயரில் சோதனைக்குற்படுத்திய போதே கஞ்சா தூள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். 
கதிர்காமம் மற்றும் திஸ்ஸமஹராம பகுதிகளை சேர்ந்த லெஸ்லி அபே குணவர்த்தன மற்றும் சரத் ஆனந்த ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த கஞ்சா போதைப்பொருள் திஸ்ஸமகாராமயிலிருந்து அக்கரைப்பற்று வியாபாரி ஒருவருக்கு எடுத்துச் சென்றமை பொலிஸார் மேற்கொண்ட விசாரனையின்போது தெரியவந்துள்ளது.

Friday 3 July 2015

முன்பிள்ளைப் பருவம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வு

பிரேம்...
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் கீழியங்கும் சிறுவர் செயலகத்தின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “செனஹே தடாக” எனும் கருப்பொருளிலமைந்த, வீட்டை அடிப்படையாகக் கொண்ட முன்பிள்ளைப் பருவம் தொடர்பில் அரச அலுவலர்கள், இளைஞர் குழுக்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (03) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.




ஆலையடிவேம்பு பிரதேச முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த நிகழ்வினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமைதாங்கி நடாத்தியதுடன், திருக்கோவில் வலயக்கல்விப் பணிமனையின் அழகியற்கலைப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் வளவாளராகவும், பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராசா விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

ஆலையடிவேம்பு பிரதேச மற்றும் பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களும், பிரதேச இளைஞர் குழுக்களின் உறுப்பினர்களும், பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்ட குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தரது வரவேற்புரையைத் தொடர்ந்து பிரதேச செயலாளரது தலைமையுரை இடம்பெற்றது.

அடுத்து வளவாளர் ஸ்ரீதரனால் கலை, நடனம், பாடல்கள் போன்ற தனிப்பட்ட ஆற்றல்களை அடிப்படையாகக்கொண்டு தற்போது முன்பள்ளி செல்கின்ற மற்றும் எதிர்காலத்தில் செல்லத் தயாராகவுள்ள சிறார்களின் செயற்திறன்களை அபிவிருத்தி செய்தல் தொடர்பாகவும், அவ்வாறான செயற்பாடுகளில் பெற்றோர்கள் மற்றும் குறித்த சிறுவர்கள் வாழ்கின்ற சக சமுகத்தவர்கள் என்றவகையில் எவ்வாறு அவர்களை ஊக்குவிக்கலாம் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், சிறார்களின் உளவிருத்தியைச் சமநிலைப்படுத்தும்வகையில் அவர்களை அழகியற்கலைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பில் பங்குபற்றுனர்களிடையேயிருந்து ஆக்கங்கள் பெறப்பட்டு அவை மூலமான தெளிவுபடுத்தல்களும் இடம்பெற்றிருந்தன.

நியமனம் வழங்ககோரிய அமைதியான கவனயீர்ப்பு

ராமனதாஸ்...

1999ஆம் ஆண்டிலிருந்து சுகாதாரத் தொண்டர்களாக வைத்தியசாலைகளில் சேவை புரிந்துவந்த அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு  முன்பாக  நேற்று வியாழக்கிழமை அமைதியான முறையில்  கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன்போது தங்களை நிரந்தரமாக்குமாறு கோரிக்கை விடுத்த சுகாதாரத் தொண்டர்கள், 'நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடு', 'சுகாதாரத் தொண்டர்களாக வேலை செய்வதை உறுதி செய்', 'நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்து' ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.
இறுதியில் சுகாதாரத் தொண்டர்களாக கடமை புரிந்தவர்களின் பெயர்ப்பட்டியலுடன் மகஜரொன்றையும்  கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீனிடம்; கையளித்தனர்.
மகஜரை  பெற்றுக்கொண்ட வைத்திய அத்தியட்சகர், இவர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் கிழக்கு மாகாணசபையின் சுகாதார பணிப்பாளரின்; கவனத்துக்கு கொண்டுசெல்வதாக தெரிவித்ததாக  சுகாதார தொண்டர் அமைப்பின் தலைவர் ஐ.எம்.இப்ராலெப்பை முகமட் நபிர் தெரிவித்தார்.

Wednesday 1 July 2015

சேவையாற்றும் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த வேண்டும்

அம்பாறை மாவட்ட மீனவர் பேரவையானது நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை மையப்படுத்தி அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டடத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை செவ்வாய்க்கிழமை (30) நடத்தியது.
 
மாவட்ட மீனவர் பேரவையின் இணைப்பாளர் இஸத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
 
இணைப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த நல்லாட்சி அரசாங்கம் உதயமானதைத் தொடர்ந்து நாட்டு மக்களிடையே இலஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டதுடன் பக்கசார்பற்ற முறையில் நீதி நியாயம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டு வருவது நிரூபிக்கப்பட்டு வருக்கின்றது.
 
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மீனவ சமூகம் உட்பட நாளாந்த உழைப்பாளிகளின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடிய தலைவர்களே வேட்பாளராக கட்சி தலைமைப்பீடம் தெரிவு செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டுமென மாவட்ட மீனவர் சார்பாக பேரவை எதிர்பார்க்கின்றது.
 
எமது அமைப்பின் கீழ் அஷ்ரப் நகர், ஒலுவில் - 6, அட்டாளைச்சேனை, திராய்க்கேணி, விநாயகபுரம் மற்றும் கண்ணகிபுரம் ஆகிய ஆறு கிராம கிளைச் சங்கங்கள் உள்ளன.
 
இக்கிராமங்களின் பிரச்சினைகள் வெவ்வேறாக இருப்பினும் ஒட்டு மொத்தமாக மக்களது வாழ்வாதார பிரச்சினைக்கு உரிய தீர்வுக்கான உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர்கள், அது எந்தக் கட்சியாக இருந்தாலும் களம் இறங்குதல் கண்டிப்பாக இருக்கும் போது எமது அமைப்பு, அவர்களை ஆதரவளிக்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.