Tuesday 23 June 2015

யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவும் சேவை மையம்

பிரேம்....

 இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிய உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று, இறக்காமம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உயிர் மற்றும் உடமை இழப்புகளுக்காக இதுகாலவரையில் வழங்கப்படாதுள்ள நட்டஈட்டுக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள ஆட்கள், சொத்துக்கள், கைத்தொழில்களைப் புனர்வாழ்வு அளிப்பதற்கான அதிகாரசபையினால் (Reppia) எதிர்வரும் வியாழக்கிழமை (25) திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடாத்தப்படவுள்ள நடமாடும் சேவை தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களைத் தெளிவுபடுத்தும் மற்றும் நட்டஈடுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆவணங்களையும் உதவிகளையும் வழங்கும் இரண்டுநாள் சேவை மையமானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுவருகின்றது.
 
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நேற்றும் (22) இன்றும் (23) இடம்பெறும் குறித்த சேவை மையத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளிலும் வசிக்கின்ற சுமார் 180 பொதுமக்கள் தமக்கான சேவைகளைப் பெற்றுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோருக்கு பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு இதுவரையிலும் மரணச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளாதோருக்கு அக்கரைப்பற்று பொலிசாரின் உதவியுடன் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு, காலங்கடந்த மரணப்பதிவுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் தெரிவித்தார்.

No comments: