Thursday 7 January 2016

திறப்புவிழா எப்போது...?

ச.அகலிகா..

திறப்புவிழா எப்போது...?

திறப்பு விழாக் காணக் காத்திருக்கும் வவுனியா புதிய பஸ் நிலையம்.  
வவுனியாவில் புதிய பஸ்நிலையத்திற்கான வேலைகள் பூரணப்படுத்தப்பட்டும் இன்னும் மக்கள் பாவனைக்குத்  திறக்கப்படவில்லை.  வவுனியா மாவட்டத்தின் புதிய பஸ் நிலையத்துக்கு  2014.01.07 திகதியன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட முகாமையாளர் ஆர்.ஆர் கபரகமவால்   அடிக்கல் நாட்டப்பட்டது.  
இத்திட்டத்திற்காக 110 மில்லியன் ருபா  ஒதுக்கப்பட்டது ஒருவருடத்தில் பணிகள் முடிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. 
இத் திட்டத்தின்படி 2015.01.06 திகதி மக்கள் பாவனைக்காக பஸ் நிலையம் திறக்கப்படும்  திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்த போதும் குறித்த திகதியில் திறக்கப்படவில்லை. அடுத்த கட்டமாக 2015.04.08 ம் திகதியன்று திறக்கப்படுவதாக மீண்டும்  குறிப்பிட்டிருந்த போதிலும் மின்சாரம்  நீர் மற்றும் ஏனைய சில வசதிகள்  பூரணப்படுத்தப்படாமையினால் மேற்குறித்த இரண்டாவது திகதியிலும் பஸ்நிலையம் திறக்கப்படவில்லை.

 இதேவேளை  சேவை மையங்களிலிருந்து விலகி புதிய  பஸ்நிலையம் அமைந்திருப்பதனால் பஸ்நிலைய மாற்றம் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 
புதிதாக அமைக்கப்படும் பஸ்நிலையம் தனியார் பேருந்து நிலையமாகவும் தற்போதைய அரச பேருந்து நிலையம் தொடர்ச்சியாக இயங்கும் எனவும். கூறப்பட்டது.  அதேவேளை புதிய பஸ்நிலையமானது அரசமற்றும் தனியார் பேருந்துகளை இணைத்து உள்ளுர் சேவையை வழங்கும் எனவும் குறிப்பிடப்பட்டது. 

இவ்வாறான மாறுபட்ட கருத்துக்களை வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா பயணிகள் போக்குவரத்துச்  சங்கம் என்பன  இவ்வாறான நடைமுறைகள் மக்களை பெரிதும் பாதிக்கும் என் குறிப்பிட்டன  குறிப்பாக உள்ளுர் மற்றும் வெளியூர் சேவைகள் தனித்தனியே காணப்படும் போது கொழும்பிலிருந்து வரும் ஒருவர் செட்டிகுளம் செல்ல வேண்டுமானால் உள்ளுர் சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கு 1.4 கிலோமீற்றர் வரையும் நடந்து செல்ல வேண்டும் அல்லது மாற்று வாகனம் ஒன்றினை பயன்படுத்த நேரிடும்.
இவ்வாறான நிலையை எதிர்த்து வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா பயணிகள் போக்குவரத்து சங்கம் என்பன. கடந்த 11.05.2015 ஆண்டு  பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடப் போவதாக எச்சரித்தன. 
அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கான இணைக்கப்பட்ட நேர அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் . புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு தனியார் மற்றும் அரச பேருந்துகள் அழைக்கப்பட வேண்டும் என்றும்.  வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் வவுனியா பேருந்து நிலையத்தில் தரித்துச்செல்லக் கூடாது என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 
இதனையடுத்து கடந்த 08.05.2015 அன்று வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வவுனியா பயணிகள் போக்குவரத்து சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை முகாமையாளருடன் பேச்சு நடத்தினர். பேச்சு வார்த்தைக்கு அமைய பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது. 

பேச்சின் முடிவில்  அரச மற்றும் தனியார் பேருந்துகள் இணைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்குமான  நேர அட்டவணை தயாரிப்பதாகவும். அரச மற்றும் தனியார் பேருந்துகள்  புதிய பஸ்நிலையத்திற்கு ஒருங்கிணைந்து அழைக்கப்படுவதற்கு அரச மற்றும் தனியார் பேருந்து சங்கங்கள் இணக்கப்பாட்டுக்கு வந்தன. புதிய பஸ்நிலையத்திற்கு முன்னால் பாதையின் இரு புறமும் பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்படும் எனவும் வெளிமாவட்டப் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படாது எனவும் புதிய பஸ்நிலையத்திற்கு முன்னால் உள்ள தரிப்பிடத்தில் மாத்திரம் தரித்துச் செல்லும் எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய பஸ்நிலையமானது  நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.

 இங்கு சுமார் 54 பேருந்துகள் ஒரே நேரத்தில் தரித்து நிற்கக்கூடியதாக இரண்டு பெரிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.  
;இங்கு பயணிகளுக்கான இருக்கைகள் சிற்றுண்டிச்சாலை வசதிகள், மலசலகூடங்கள், மின்சாரம் மற்றும் நீர் வசதி நேரக்கணிப்பாளருக்கான கூடு சாரதி ஒய்வு அறை என்பவற்றுடன்  பாதுகாப்புகருதி  பொலிஸ் போஸ்ட் என்பனவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 
இவற்றுடன் பயனிகளின் நலன்கருதி  வங்கிகளின் தானியங்கி  பணப்பரிமாற்ற  இயந்திரங்களை பொருத்துவதற்கான இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது 
அத்துடன் புதிய பஸ்நிலையத்திற்கு இலவச இணைய வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் பயணிகளின் பொழுதுபோக்குக்காக 6 தொலைக்காட்சிப்பெட்டிகளும் பஸ்நிலையத்தினுள் பொருத்தப்பட உள்ளது. இவற்றுடன் பாலூட்டும் தாய்மார்களின் நலன்கருதி அவர்களுக்கான அறை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இவற்றுடன் பயனிகளுக்கான அறிவித்தல்களை வழங்குவதற்கான ஒலிபெருக்கி வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதுடன். ஓவ்வொரு பேருந்துகளும் தரிக்கப்படும் இடத்திற்கான அறிவித்தல் பலகையானது மூன்று மொழிகளிலும் மின் ஒளியுடன் கூடியதாக பொருத்தப்பட உள்ளது.
பஸ்நிலையத்திற்கு முன்பு மதில் கட்டப்பட்டு முன்னால் பாலம் அமைக்கப்பட்டு உள்ளே வெளியே  கதவுகள் போடப்படுவதன் மூலம் தனியார் வாகனங்கள் உள்வருவது தடுக்கப்படுகின்றது. இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட வவுனியா பஸ்நிலையமானது எப்போது திறக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

No comments: