Sunday 24 January 2016

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வார நிகழ்வுகள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யோசனைக்கமைய நாடு தழுவிய ரீதியில் ஜனவரி 25 - 30 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரம் மற்றும் விசேட தினம் என்பவற்றைச் சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆரம்பநாள் விசேட நிகழ்வுகளான நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி என்பன இன்று (25) காலை இடம்பெற்றன.


ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிசந்தனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுகளைப் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமைதாங்கி நடாத்திவைத்தார்.

முதலில் பிரதேச செயலாளரால் தேசியக்கொடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு அங்கு குழுமியிருந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதேச செயலாளர், இந்நிகழ்வின் மூலம் அரசாங்கம் அடைந்துகொள்ள எதிர்பார்க்கும் பிரதிபலன் குறித்துப் பேசியதுடன், அரச உத்தியோகத்தர்களின் சுகாதார நலனோம்பலில் அவர்கள் அன்றாடம் மேற்கொள்ளவேண்டிய தேக அப்பியாசங்களின் முக்கியத்துவம் தொடர்பாகவும் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

தொடர்ந்து இடம்பெற்ற விசேட நடைப்பயிற்சியில் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரம் தொடர்பான விபரங்களையும், அன்றாட உடற்பயிற்சியின் முக்கியத்துவம் தொடர்பான தகவல்களையும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களோடு பகிர்ந்தவாறு பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோருடன் இணைந்தவகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தனர். இந்நடைப்பயிற்சியானது பிரதேச செயலக முன்றலிலிருந்து ஆரம்பித்து சாகாம வீதி வழியாக அக்கரைப்பற்று நகர மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று, மீண்டும் திரும்பி அதே வழியாகப் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.

அதனையடுத்து பிரதேச செயலக வளாகத்தில் அனைத்து உத்தியோகத்தர்களும் பங்குபற்றிய 15 நிமிட விசேட உடற்பயிற்சியும் இடம்பெற்றிருந்தது.










No comments: