Monday 25 January 2016

ஆலையடிவேம்பில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்காக நடாத்தப்பட்ட அறிவூட்டல் கருத்தரங்கு

இளைஞர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் அம்பாறை மாவட்ட சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் நடாத்தப்பட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்திச் சேவைக்கான ஒருநாள் ஆரம்ப அறிவூட்டல் கருத்தரங்கு இன்று (25) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரனும் கலந்துகொண்டதுடன், வளவாளராக அம்பாறை மாவட்ட சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் பயிற்றுவிப்பாளர் ஐ.எம்.நாசரும், ஏற்பாட்டளர்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.புவிதர்சன், அம்பாறை மாவட்ட சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஐ.பஸ்மியா மற்றும் திருமதி. கே.எல்.மனாஹிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதேச செயலாளரின் தலைமையுரையைத் தொடர்ந்து குறித்த கருத்தரங்கை நடாத்திய வளவாளர் ஐ.எம்.நாசர், அம்பாறை மாவட்ட சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் தற்போது எவ்வித கட்டணமுமின்றி பிரதேச செயலகப் பிரிவுகள் ரீதியாக இலவசமாக நடாத்தப்பட்டுவரும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பாடநெறிகள் தொடர்பாகவும், சிறுகைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைக் கண்காட்சிகளை நடாத்துதல், ஊழியர் முகாமைத்துவம், நிதி முகாமைத்துவம் மற்றும் கணக்கேடுகளைப் பேணுதல் தொடர்பாக நடாத்தப்படும் கற்கைநெறிகள் தொடர்பாகவும் பங்குபற்றுனர்களாக வருகைதந்திருந்தோருக்குத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன் தையல், அழகுக்கலை, உணவுப் பண்டங்கள், வீட்டுத்தோட்டம், வீட்டு அலங்காரப் பொருட்கள், தையல் இயந்திரத் திருத்தம், பாதணி, யோகட் மற்றும் மெழுகு சம்மந்தமான உற்பத்திகள் போன்ற தொழில்களில் ஈடுபட்டுவருபவர்களுக்கும், எதிர்காலத்தில் ஈடுபட ஆர்வமுடையோருக்கும் அவசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதுடன், அத்தொழிகளுக்குத் தேவையான நிதி முதலீட்டைக் கருத்தில்கொண்டு அரசாங்க வங்கிகளூடாகக் கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதில் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அங்கு தெளிவுபடுத்தினார்.








No comments: