Tuesday 12 January 2016

இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு...

தற்போது எமது அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்கானதொரு கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்து இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றது'
இவ்வாறு ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகே தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறச் செய்வதற்கு பாடுபட்ட பொத்துவில் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்களை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் திங்கட்கிழமை (11) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும்  தெரிவித்த அவர், 'கைத்தொழில் அமைச்சர் என்ற வகையில் எனக்கும் பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 10 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது' என்றார். 'தொழில் முயற்சியின் பொருட்டு பொத்துவில் மற்றும் ஒலுவில் பிரதேசங்களை இணைத்து மீன்பிடி மற்றும் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கு நாங்கள் உத்தேசித்துள்ளோம். மேலும், இங்கு விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் வகுத்து வருகின்றோம். அனைவரும் நெற்செய்கை விவசாயத்தில் மாத்திரம் நம்பியிருக்காது, அதிக இலாபம் ஈட்டக்கூடிய ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையையும் அதற்கான சந்தை வாய்ப்பையும் மேற்கொள்வதற்கு திட்டமிட்டு வருகின்றோம். கடந்த 30  வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம்  காரணமாக அதிகமான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பெண்களுக்கான குடிசைக் கைத்தொழில் மற்றும் வீட்டுத்தோட்டம் செய்வதற்கான உதவிகளையும் எமது அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைந்த ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். தற்போது இந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதினால், மக்களின் கைகளில் பணப்புழக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் கிட்டும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாட்டின் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் அபிவிருத்தியின் பங்குதாரர்களாக மாறவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/163608#sthash.i4Se6tOZ.dpuf

No comments: