Friday 1 January 2016

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற புதுவருட ஆரம்ப நிகழ்வுகள்

மலர்ந்துள்ள 2016 ஆம் ஆண்டைச் சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதுவருட விசேட நிகழ்வுகள் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இன்று (01) காலை சிறப்பாக இடம்பெற்றிருந்தன.


பிரதேச செயலக வளாகத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான வைபவங்களில் பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


அதனைத்தொடர்ந்து அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் 24/2015 ஆம் இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைக்கு அமைவாகப் பிரதேச செயலாளர் தேசியக்கொடியை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாட்டுக்காக உயிர்நீத்த தேசிய வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து புதுவருட உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து பிரதேச செயலாளரின் புதுவருட விசேட உரை அங்கு இடம்பெற்றது.

அதனையடுத்து இடம்பெற்ற புதுவருடச் சம்பிரதாயக் கைவிசேடம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தம்மிடையேயும் பிரதேச செயலாளரோடும் புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு அவரிடமிருந்து ஆசீர்வாதத்தையும் கைவிசேடத்தையும் பெற்றுக்கொண்டனர்.






No comments: