Saturday 30 January 2016

பனங்காட்டில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வார இறுதிநாள் நிகழ்வுகள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகளுக்கமைய ஜனாதிபதியின் செயலகமும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நாடு தழுவிய ரீதியில் கடந்த திங்கள் (25) முதல் இன்று (30) வரை ஏற்பாடு செய்திருந்த தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (30) காலை இடம்பெற்றன.


ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிசந்தனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுகளைப் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமைதாங்கி நடாத்தியிருந்தார். அக்கரைப்பற்று, பனங்காடு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளுக்குப் பிரதம அதிதியாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கலந்து சிறப்பித்ததுடன், விசேட அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. விஜயராணி கமலநாதன் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, கணக்காளர் கே.கேசகன், திவிநெகும தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் மற்றும் கிராம நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


மங்கல விளக்கேற்றல் மற்றும் தேசியக் கொடியேற்றலோடு ஆரம்பமான நிகழ்வுகளில் முதலாவது போட்டி நிகழ்ச்சியான படகோட்டப் போட்டி பனங்காடு தில்லையாற்றில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இப்போட்டியில் 5 வள்ளங்களோடு 10 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் உதயகுமார், துசாந்தன் ஆகியோர் முதலிடத்தையும், பரமேஸ்வரன், யோகராசா ஆகியோர் இரண்டாவது இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.

அடுத்து இடம்பெற்ற அணிக்கு 7 பேர் கொண்ட 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று இளம் பூக்கள் மற்றும் பனங்காடு அக்கினி அணிகள் ஒன்றையொன்று எதிர்த்தாடின. இதில் இளம் பூக்கள் அணி இறுதி ஓவரில் 2 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது.

தொடர்ந்து ஆலையடிவேம்பு உதயம் A மற்றும் உதயம் B அணிகளுக்கிடையே இடம்பெற்ற சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் 3 - 0 என்ற கோல்கள் அடிப்படையில் உதயம் A அணி வெற்றிபெற்று கிண்ணத்தை வென்றது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கயிறிழுக்கும் போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். இப்போட்டியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அணி வெற்றிபெற்றது.

அடுத்து இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய வேகநடைப் போட்டியில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.சுகிர்தகுமார் வெற்றிபெற்றார்.

பின்பு இடம்பெற்ற அதிதிகள் உரையில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் ஆகியோர் தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரம் தொடர்பாகச் சிறப்புரையாற்றியிருந்தனர்.

இறுதியாக இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் குறித்த தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தையொட்டி கடந்த ஒரு வாரமாக நடாத்தப்பட்ட பல்வேறு விளையாடுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகள் அதிதிகளிடமிருந்து தமக்கான பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.




















No comments: