Monday 4 August 2014

கண்ணகி கலை இலக்கிய விழா..2014



தமிழ் மண்ணோடும் தமிழ் மரபோடும் இணைந்த கதை கண்ணகி கதை. மகாபாரத மற்றும் இராமாயணக் கதை மரபுகள் தமிழ் மக்கள் மத்தியில் வந்து சேர்ந்தவை ஆனால் கண்ணகி கதை மரபு உள்ளிருந்து எழுந்தது. மகாபாரத மற்றும் இராமாயணக் கதை மரபுகள் பல்வேறு கதை மரபுகளைக் கொண்டிருப்பதைப் போல கண்ணகி கதை மரபும் பல்வேறு கிளை மரபுகளைக் கொண்டுள்ளன.




கண்ணகியின் திண்மையும் தீரமும் நிறைந்த வாழ்வும் மக்கள் நலன் நாட்டமும் அவளை மக்களின் தெய்வமாக்கின என்றால் அது மிகையாகாது. வீர மங்கை என்ற தொன்மையுடன் பார்க்கப்படும் கண்ணகி சோழ நாட்டிலே பிறந்து பாண்டிய நாட்டிலே வழக்குரைத்து சேர நாட்டிலே தெய்வீகமாகின்றாள். பின்னாட்களில் ஈழ நாட்டிலே தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் வழிபாட்டுக்குரிய தெய்வமாகின்றாள்.

தமிழர் பண்பாட்டினையும் கண்ணகி அம்மன் வழிபாட்டினையும் எடுத்தியம்பும் வகையில் கண்ணகி இலக்கியக் கூடலினால் ஆண்டு தோறும் கண்ணகி கலை இலக்கிய விழாக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இம்முறை கண்ணகி கால் தடம் பதித்த கிழக்கு மாகாணத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள தம்பிலுவில் பிரதேசத்தில் கடந்த முதலாந்திகதி  வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி மூன்றாந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவு பெற்றது.

கண்ணகி கலை இலக்கியக் கூடலினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்ணகி கலை இலக்கிய விழா வெள்ளிக்கிழமை(01) தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய கலை அரங்கில் ஆரம்பமானது. முதலாம் நாள் தொடக்க விழா, விழாக்குழுக் குழுத் தலைவர் வீ.ஜயந்தன் தலைமையில்  ஆரம்பமானது. காலை வேளை பண்பாட்டுப் பவனி திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து பண்பாட்டு கலை கலாசார நிகழ்வுகளுடன் பிரதான வீதி வழியாக தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து கண்ணகி அம்மன் ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் கலை அரங்கில் காலை அமர்வுக்கான நிகழ்வுகள் 'கூலவாணிகன் சாத்தனார்' அரங்கில் இடம்பெற்றது. இதன்போது தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரிய கலை வடிவங்கள் பற்றியும் தம்பிலுவிலில் கண்ணகி வழிபாடு பற்றி வரலாற்று நோக்குக்கும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டுக் கலை வடிவங்களுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டின் ஓர் அங்கமான போர்த் தேங்காய் அடிக்கும் நிகழ்வு மற்றும் கொம்பு முறி விளையாட்டு ஆகியன தம்பிலுவில் கண்ணகியம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. இதனை வயது வித்தியாசமின்றி ஆயிரக் கணக்கானோர் கண்டு களித்தனர்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் நிகழ்வுகள் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றன. இரண்டாம் நாள் காலை சேரன் செங்கட்டுவன் அரங்கில் வந்தாள் கண்ணகி வந்தாள் எனும் தலைப்பில் சிறப்பு கவியரங்கம் இடம்பெற்றன.  மூத்த கவிஞர் முல்லை வீரக்குட்டி தலைமையில் இடம்பெற்ற இக்கவியரங்கில் தம்பிலுவில் தயா, குறிஞ்சி வாணன், தம்பிலுவில் ஜெகா, கோபல்நாதன், நவயுகா ராஜ்குமார் ஆகியோர் பங்கு பற்றினர். இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வின்போது விழா சிறப்பு மலரான கூடல் (பரல்-3) வெளியிட்டு வைக்கப்பட்டது. இது தவிர அன்றைய நிகழ்வின்போது கண்ணகி கலை இலக்கிய விழா-2013 சம்பந்தமான விரண ஒளிப்படக் காட்சி காண்பிக்கப்பட்டதுடன் நூலங்காடியும் இடம்பெற்றது.
இரண்டாம் நாள் மாலை கோவலன் அரங்கில் நாட்டிய நாடகம், கண்ணகி காவடிப் பாடல்கள் ஆகியன இடம்பெற்றதுடன், திருக்கோவில் கல்வி வலய பாடசாலை மாணவர்களிடையே நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் திறமை காட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது.

மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை இளங்கோவடிகள் அரங்கில் நடைபெற்ற நிகழ்வின்போது கண்ணகி வழக்குரைக் காவியத்தின் காவி அமைப்பு, கண்ணகி வழக்குரைக் காவியத்தின் பாத்திர வார்ப்பு, கண்ணகி வழக்குரைக் காவியத்pல் கப்பல் கட்டும் கலையும் போர்க்கலையும், கண்ணகி வழக்குரைக் காவியத்தில் இசைக்கலையும் நடனக் கலையும் மற்றும் கண்ணகி வழக்குரைக் காவியத்தின் இலக்கிய நயம் உள்ளிட்ட ஆய்வுரைகள் இடம்பெற்றன.
மூன்றாம் நாள் மாலை இறுதி நிகழ்வுகள் மாதவி அரங்கில் இடம்பெற்றன. இதன்போது கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு பற்றிய விஷேட உரை இடம்பெற்றதுடன், கண்ணகியம்மன் காவியப் பாடல்கள், கொம்புமுறி நடனம், வழக்குரைக்கும் கண்ணகி- நாட்டிய நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை கலாசரா மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.



















No comments: