Sunday 13 April 2014

ஆலையடிவேம்பில் நடைபெறும் வாழ்வின் எழுச்சி புதுவருடச் சந்தை

ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களின் திவிநெகும அபிவிருத்தித்திட்டப் பயனாளிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பாவனைப் பொருட்களை மலிவான விலையில் ஒரேயிடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் நடாத்துகின்ற வாழ்வின் எழுச்சி புதுவருடச் சந்தை இன்று 10-04-2014, வியாழக்கிழமை காலை அக்கரைப்பற்று, சாகாம வீதியில் வெலிங்டன் திரையரங்கிற்கு அருகாமையில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்த இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் சிறப்பு அதிதியாகவும், திவிநெகும திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம், கொழும்பிலுள்ள தலைமையகம் மற்றும் ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச அலுவலகங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் அதிதிகளை வரவேற்று நடாத்தப்பட்ட கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய சிறார்கள் பரிசுகளைப் பெற்றுக்கொண்டதுடன், வறிய மாணவர்களுக்கான சிசுதிரிய புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் மற்றும் பயனாளிகளுக்கான சமுர்த்தி முத்திரைக் கொடுப்பனவுகள் என்பனவும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன. இதன்போது தத்தமது சேவைப் பிரதேசங்களில் பயனாளிகளின் சேமிப்புக்களை அதிகரித்துக்கொடுத்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இவ் வாழ்வின் எழுச்சி புதுவருடச் சந்தையில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மூவினங்களையும் சேர்ந்த திவிநெகும (சமுர்த்தி) பயனாளிக் குடும்பங்களால் உற்பத்தி செய்யப்பட்ட துணிமணிகள், புதுவருடத் தின்பண்டங்கள், மரக்கறிகள், மாப்பொருள் உற்பத்திகள், மலர்ச்செடிகள், மட்பாண்டங்கள் உட்படப் பலவிதமான பொருட்கள் இங்கு மலிவான விலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்துடன் இச்சந்தையானது இன்று மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: