Wednesday 18 July 2018

விசர் நாய் கடித்துக் குதறியதில் 12 பேர் வைத்தியசாலையில்


மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா வீதியில் அலைந்து திரிந்த விசர் நாயொன்று தெருவில் போவோர் வருவோரைக் கடித்துக் குதறியதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்து உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

பாதிப்புக்குள்ளானவர்கள் உடனடியாக ஏறாவூர் அதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக எறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

விசர் நாய்க்கடிக்குள்ளானவர்களில் ஒரு சிறு குழந்தையும் அடங்குவதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

மனிதர்களைக் கடித்துக் குதறிக் கொண்டு அலைந்து திரிந்த விசர் நாய் உதவிக்கு விரைந்தவர்களால் உடனடியாக அடித்துக் கொல்லப்பட்டது.

குறித்த சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

எறாவூர் புன்னைக்குடா வீதியில் பொதுச் சந்தை அமைந்துள்ளதாலும் அந்தப் பகுதியில் காலகாலமாக கட்டாக்காலி நாய்கள் அலைந்து திரிந்து அவ்வப்போது மனிதர்களைக் கடிப்பதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

எறாவூர் ஆதார வைத்தியசாலை சுற்றுவட்டாரத்தில் அலையும் நாய்கள் சமீப சில நாட்களுக்கு முன்னர் அங்கு வைத்தியசாலை விளையாட்டுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் கடித்திருந்தது.

அதேபோல் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் கீழ் படுத்துறங்கும் நாய்கள் வீதியால் செல்வோரைக் கடிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது புன்னைக்குடா வீதியில் இடம்பெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பில் விசர் நாய் ஒன்று கடித்துக் குதறியதில் 12 பேர் வைத்தியசாலையில் !! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: