Friday 21 March 2014

நாவற்காடு கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை....

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘கிராமம் கிராமமாக – வீடு வீடாக’ எனும் கிராம மக்களுக்கான உபகார வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாவற்காடு கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவையானது இன்று 21-03-2014, வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வழமைபோன்றே இந்நடமாடும் சேவையினையும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து பிரதேச செயலாளரது உத்தியோகபூர்வ ஆரம்ப உரை இடம்பெற்றதுடன் கிராமசேவை உத்தியோகத்தர் பி.பிரதீபா வரவேற்புரையாற்றியதுடன், நாவற்காடு கிராமசேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சமனந்தகுமார தனது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து மேடையேற்றப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கு பிரதேச செயலாளர், கிராமசேவை உத்தியோகத்தர் உட்பட்ட அதிதிகளால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. இதில் சிறப்பம்சமாக அதிதிகள் தலைமையில் நாவற்காடு கிராமசேவகர் பிரிவிலிருந்து கடந்த வருடத்தில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் தோற்றி சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த மற்றும் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிகளுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று நாவற்காடு கிராமசேவகர் பிரிவு பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர். அதேபோன்று பெருமளவிலான மக்களும் திரண்டுவந்து தமக்கான சேவைகளை இங்கு பெற்றுக்கொண்டனர்.

மேலும் கிராமத்திற்குக் கிராமம் நடமாடும் சேவையின் சின்னமுகத்துவாரம் கிராமசேவகர் பிரிவிற்கான அடுத்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 24-03-2014, திங்கட்கிழமை சின்னமுகத்துவாரம், சென் ஜோன் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: