Friday 14 March 2014

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வுகள்”



ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 12-03-2014, புதன்கிழமை காலை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த உத்தியோகத்தர்களும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இறைவணக்கத்தோடு ஆரம்பமான இந்நிகழ்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.எப்.சிபாயா வரவேற்புரையாற்றியதோடு பிரதேச செயலாளர் தலைமையுரையினையும், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.திலகராணி கிருபைராஜா மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர் திருமதி.லோஜினி கோகுலன் ஆகியோர் மகளிர் தினம் தொடர்பான சிறப்புரைகளையும் வழங்கினர். அடுத்து குறித்த நிகழ்வின்போது வெளியிடப்பட்ட மகளிர் தின சிறப்பு மலர் தொடர்பான அறிமுக உரையினை முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் வழங்கியதோடு அதன் முதற்பிரதியை பிரதேச செயலாளரிடம் வழங்கினார். தொடர்ந்து ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களும் தங்களுக்கான பிரதிகளை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி திருமதி.சிவபாக்கியம் தர்மராஜா குழுவினரால் பெண்களுக்கெதிராக இழைக்கப்படுகின்ற குடும்ப வன்முறைகள் மற்றும் அவர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல் கருத்துக்கள் என்பன தொடர்பான ஓர் சிறப்பு மகளிர் தின விழிப்புணர்வு நாடகம் மேடையேற்றப்பட்டு பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவரும், பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளர் ஏ.எச்.நூருல் ஹினாயா அவர்களும் மகளிர் தினம் தொடர்பான கவிதைகளை வழங்கினர்.

இறுதியாக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.யசோதாவின் நன்றியுரையுடன் குறித்த மகளிர் தின சிறப்பு நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
 (21 photos)

No comments: