Monday 11 June 2018

முதியோருக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம்

இராணுவத்தின் இலவச கண்புரை சத்திர சிகிச்சை வேலை 
  திட்டம் முதியோருக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம்

  இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனிதாபிமான வேலை திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு உள்ள கண் புரை நோயாளர்களுக்கான இலவச சத்திர சிகிச்சை திட்டம் முதியவர்களுக்கு உண்மையிலேயே மகத்தான வரப்பிரசாதம் ஆகும் என்று கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவையின் உப தலைவரும், ஊடகவியலாளருமான எஸ். ரகுபதி தெரிவித்தார்.      - கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவை








பலாலி இராணுவ வைத்தியசாலையில் தென்னிலங்கையை சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் கண் புரை நோயாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக இடம்பெற்றது. இதில் கலந்து கொள்ள 400 இற்கும் அதிகமான கண் புரை நோயாளர்கள் வட மாகாணத்தின் பல இடங்களில் இருந்தும் வந்திருந்தனர்.

 இவர்களில் 169 நோயாளர்கள் கண் புரை சத்திர சிகிச்சைக்கு அவசியம் உட்படுத்தப்பட வேண்டியவர்களாக வைத்திய நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்கள் கட்டம் கட்டமாக எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு இலவச சத்திர சிகிச்சை வழங்கப்பட்டு வைத்திய கண்காணிப்புக்கு பின் மீண்டும் அழைத்து வரப்பட உள்ளனர். அனைத்து ஏற்பாடுகளையும் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகமே மேற்கொண்டு உள்ளது. 

கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவை மூலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 55 நோயாளர்கள் கண் புரை சிகிச்சை பரிசோதனைக்காக விசேட பேரூந்தில் அழைத்து வரப்பட்டு இருந்தனர். இவர்களில் அரைவாசி பேர்  வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாக சத்திர சிகிச்சைக்கு கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

இது குறித்து ஊடகங்களுக்கு நேற்று திங்கட்கிழமை கருத்து தெரிவித்தபோது ரகுபதி இவ்வாறு கூறினார்.

 இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

உலக அளவிலேயே முதியவர்களை அதிகம் பீடித்து கண் புரை சிகிச்சை நோய் இம்சை செய்கின்றது. இது நிரந்தர குருட்டை கொண்டு வருவதற்கும் மிக அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. 
வட மாகாணத்தில் கண்புரை நோயாளர்கள் கணிசமான அளவில் காணப்படுகின்றனர். இவர்கள் கண் புரை சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு யாழ். போதனா வைத்தியசாலையையே பெரும்பாலும் நம்பி உள்ளனர். ஆனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ஒவ்வொரு நோயாளியும் யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையை பெறுவதற்கு சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்க நேர்கின்றது. 

கண் புரை நோயாளர்கள் இதனால் எதிர்கொள்ள நேர்ந்து இருக்கின்ற இடர்ப்பாடுகளை உணர்ந்து இவர்களுக்கான இலவச சத்திர சிகிச்சை திட்டத்தை மனிதாபிமான கண்டோட்டத்துடன் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆரம்பித்து உள்ளார். இதற்காக கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவை இவருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது.

வட மாகாணத்தை சேர்ந்த முதியோர்களுக்கு மாத்திரம் அன்றி இங்கு கண் புரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் இவ்வேலை திட்டம் உண்மையிலேயே மகத்தான வரப்பிரசாதம் ஆகும். இவ்வேலை திட்டத்தின் உச்ச பட்ச பலனை நாம் அனைவரும் பெற்று கொள்ள வேண்டும். 

பலாலி இராணுவ வைத்தியசாலையில் இராணுவத்தினர் மிகுந்த கண்ணியத்துடனும், கரிசனையுடனும் நடந்து கொண்டனர் என்பதையும் இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்

No comments: