Saturday 9 June 2018

உச்ச பயன்பாட்டை பெறுக

இந்திய வைத்திய நிபுணர்கள் பங்கேற்கிற மருத்துவ முகாமின் உச்ச பயன்பாட்டை கண் புரை நோயாளர் அனைவரும் பெறுக,இராணுவத்தின் மனித நேய இணைப்பாளர் செல்வா கோரிக்கை இந்தியா மற்றும் தென்னிலங்கையை சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் பலாலியில் நாளை
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ள இலவச மருத்துவ முகாம் மூலமான உச்ச பயன்பாட்டை வட மாகாணத்தை சேர்ந்த கண்புரை நோயாளர்கள் அனைவரும் பெற்று கொள்ள வேண்டும் என்று இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வா கோரி உள்ளார். இவரின் நெல்லியடி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- வட மாகாணத்தில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் கண்புரை நோயாளர்கள் கணிசமான அளவில் காணப்படுகின்றனர். இவர்கள் கண் புரை சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு யாழ். போதனா வைத்தியசாலையையே பெரும்பாலும் நம்பி உள்ளனர். ஆனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ஒவ்வொரு நோயாளியும் யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையை பெறுவதற்கு சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்க நேர்கின்றது. கண் புரை நோயாளர்கள் இதனால் எதிர்கொள்ள நேர்ந்து இருக்கின்ற இடர்ப்பாடுகள் குறித்து இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு நான் தெரியப்படுத்தினேன். நான் கூறியவற்றை மிக கவனமாகவும், உரிய கரிசனையுடனும் செவிமடுத்த மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனித நேய வேலை திட்டத்தின் கீழ் வட மாகாணத்தை குறிப்பாக யாழ். மாவட்டத்தை சேர்ந்த கண் புரை நோயாளர்களை கொழும்புக்கு அழைத்து சென்று இந்தியா மற்றும் தென்னிலங்கையை சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்கள் மூலம் குறைந்தது 300 நோயாளர்களுக்கு இலவச சத்திர சிகிச்சை பெற்று கொடுக்க உடனடி நடவடிக்கை எடுத்து உள்ளார். மட்டும் அல்லாமல் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் மனித நேய அழைப்பை ஏற்று இந்தியா மற்றும் தென்னிலங்கையை சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்கள் குழு ஒன்று யாழ்ப்பாணம் வந்து உள்ளது. இவர்களின் பங்கேற்புடன் பலாலி இராணுவ வைத்தியசாலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண் புரை நோயாளர்களுக்கு முன்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. பிற்பாடு வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக கண் புரை நோயாளர்கள் கட்டம் கட்டமாக பிந்திய நாட்களில் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள். போக்குவரத்து ஏற்பாடுகளையும் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகமே மேற்கொண்டு உள்ளது. இவ்வேலை திட்டத்தின் உச்ச பலனை வட மாகாணத்தை சேர்ந்த கண் புரை நோயாளர்கள் அனைவரும் பெற்று கொள்ள வேண்டும் என்பது எமது பெருவிருப்பம் ஆகும். இதனால்தான் இவ்வேலை திட்டம் குறித்த அறிவூட்டல் மற்றும் விழிப்பூட்டல் பிரசாரங்களை ஊடகங்கள் மூலமாக மேற்கொண்டு வருகின்றோம். எம்மிடம் பெயர்களை பதிவு செய்து பயனாளிகளாக இணைந்த கண் புரை நோயாளர்கள் மாத்திரம் அன்றி பயனாளிகளாக இணைய தவறியவர்களும் எமது நெல்லியடி அலுவலகத்துக்கு அதிகாலை 7.30 மணிக்கு வருகை தருமாறு அன்புடன் கோரப்படுகின்றனர். அதே நேரம் கிளிநொச்சி மாவட்டத்தையும், அதற்கு அண்டிய இடங்களையும் சேர்ந்த கண் புரை நோயாளர்களின் வசதி கருதியும் விசேட போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டு உள்ளோம். அதன் படி கிளிநொச்சி பழைய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து காலை 7.30 மணிக்கு கண் புரை நோயாளர்கள் எமது பஸ் வண்டியில் ஏற்றப்பட்டு பலாலிக்கு அழைத்து வரப்படுவார்கள். ஆர்வலர்கள் மேலதிக விபரங்களுக்கு 0702095920 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்

No comments: