Thursday 26 May 2016

அம்பாறை மாவட்ட மட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் ஆலையடிவேம்பு பிரதேச அணி சம்பியனாகத் தெரிவு


விளையாட்டு அமைச்சின் அனுசரணையோடு அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன் தலைமையில் சம்மாந்துறை, உள்ளக விளையாட்டுத் தொகுதியில் கடந்த 15-05-2016 ஞாயிறன்று நடாத்தப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட வீர, வீராங்கனைகளுக்கான கராத்தே சுற்றுப்போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய போட்டியாளர்கள் ஆறு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களோடு மொத்தமாக 9 பதக்கங்களைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தட்டிச்சென்று ஆலையடிவேம்பு பிரதேசத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பிரதம முகாமைத்துவ உதவியாளரும், கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற கராத்தே பயிற்சிப் போதனாசிரியரும், ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.கேந்திரமூர்த்தியினால் பயிற்றுவிக்கப்பட்ட வீர, வீராங்கனைகளில் ஆறு பேர் இப்போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.

மொத்தமாக 50 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இச்சுற்றுப்போட்டியில் ஆண், பெண் பிரிவு காட்டா, குமிட்டே வகைப் போட்டிகளில் ஒரு அணியாகவும், எடைப் பிரிவுகளுக்கேற்ப தனித்தனியாகவும் குறித்த போட்டிகளில் கலந்துகொண்ட ஆலையடிவேம்பு பிரதேச வீர, வீராங்கனைகள் 6 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம், 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 9 பதக்கங்களை வென்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றனர்.

இந்த வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், இந்த வெற்றி மூலம் எமது ஆலையடிவேம்பு பிரதேசம் மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. வெறும் 6 வீர, வீராங்கனைகளால் மட்டும் இவ்வாறானதொரு கௌரவத்தை எமது பிரதேசம் பெற்றுக்கொள்ள முடிந்திருப்பதென்பது உண்மையில் நமது வீரர்களது ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திறமையினாலும், அவர்களைப் பயிற்றுவித்த எமது பிரதேச செயலக உத்தியோகத்தரும், கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற கராத்தே பயிற்சிப் போதனாசிரியருமான சிகான் கே.கேந்திரமூர்த்தி அவர்களாலும் எமக்கு வாய்த்திருக்கின்றது. அவரது மாணவர்கள் பதக்கங்களைப் பெற்றுக்கொள்வதென்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதேபோன்று மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டிகளில் சாதித்து எமது இந்த ஆலையடிவேம்பு பிரதேசத்தையும், இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற எமது மக்களையும் பெருமைப்படுத்தியிருக்கின்றார்கள். இது அவர்கள் தாண்டியுள்ள இன்னொரு மைல்கல். அவருக்கும் அவரது மாணவர்களுக்கும் கடவுளின் ஆசிர்வாதங்கள் இப்போது போன்றே எப்போதும் கிடைக்கவேண்டும் என வாழ்த்தினார்.

அத்துடன் குறித்த வீர, வீராங்கனைகள் அறுவரும் கடந்த 24-05-2016 அன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தேசிய இளைஞர் தினக் கொண்டாட்ட வைபவத்தில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகளால் வெற்றிச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், கண்காட்சிப் பயிற்சிகளை நிகழ்த்தி பார்வையாளர்களின் பலத்த கரகோசங்களையும் பெற்றிருந்தனர்.

அடுத்து கிழக்கு மாகாண மட்டத்தில் விரைவில் இடம்பெறவுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டப் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ள கராத்தே சுற்றுப்போட்டிகளில் குறித்த வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலையடிவேம்பு பிரதேச அணி கைப்பற்றிய பதக்கங்களின் விபரம்:
1. ஆண்களுக்கான காட்டா போட்டிகள்
கே.சாரங்கன் (தங்கப் பதக்கம்)
பி. ஷரோன் சச்சின் (வெள்ளிப் பதக்கம்)

2.  பெண்களுக்கான காட்டா போட்டிகள்
கே.அட்சயா (தங்கப் பதக்கம்)
வை.லக்சாயினி (வெண்கலப் பதக்கம்)

3. ஆண்களுக்கான குமிட்டே போட்டிகள் (55 Kg எடைப் பிரிவு)
கே.ரஞ்சி (வெண்கலப் பதக்கம்)

4. ஆண்களுக்கான குமிட்டே போட்டிகள் (84+ Kg எடைப் பிரிவு)
ரி.சின்னத்தம்பி (தங்கப் பதக்கம்)

5. ஆண்கள் அணிகளுக்கான காட்டா போட்டிகள்
ஆலையடிவேம்பு பிரதேச அணி (தங்கப் பதக்கம்)
  
வெற்றி பெற்ற வீரர்கள்:
கே.சாரங்கன் (தங்கப் பதக்கம்)
கே.ரஞ்சி (தங்கப் பதக்கம்)
பி. ஷரோன் சச்சின் (தங்கப் பதக்கம்)









No comments: