Tuesday 31 May 2016

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்துக்கான கொடி விற்பனை நிகழ்வு


இன்றைய தினம் சர்வதேச ரீதியாக அனுஸ்டிக்கப்பட்டுவரும் புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று (31) முதல் எதிர்வரும் ஜூன் 12 வரை வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் நாடாளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்துக்கான கொடி விற்பனை நிகழ்வின் பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலக திவிநெகும சமுக அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வைபவம் இன்று (31) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவின் சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.தெய்வேந்திரனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த வைபவத்தின் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், சிறப்பு அதிதிகளாக பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் கே.கேந்திரமூர்த்தி, வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவின் கருத்திட்ட முகாமையாளர் திருமதி. அருந்ததி மகேஸ்வரன் மற்றும் ஆலையடிவேம்பு தெற்கு வலய வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார் ஆகியோரும், வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களும் ஆலையடிவேம்பு பிரதேச கிராமமட்ட சமுர்த்திச் சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மங்கல விளக்கேற்றலோடு ஆரம்பமான நிகழ்வுகளின் வரவேற்புரையை சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் கே.அசோக்குமார் வழங்கியதோடு, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் அங்கு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் புகைத்தல் மற்றும் மதுப் பாவனையால் ஆலையடிவேம்பு பிரதேசம் தொடர்ந்து முகங்கொடுத்துவரும் சமூகச் சீர்கேடுகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்ததுடன், கிராமமட்ட சமுர்த்திச் சங்கங்களின் உறுப்பினர்களாக மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடும்பத் தலைவிகள் என்ற ரீதியில் நீங்கள் ஒவொருவரும் உங்களது குடும்பத்தின் தலைவனான கணவனை நல்வழிப்படுத்தவும், சேமிப்புக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி குடும்பப் பொருளாதாரங்களை ஸ்திரப்படுத்துவதோடு மட்டுமல்லாது உங்களது பிள்ளைகளும் இவ்வாறான தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாதவண்ணம் பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பினை முன்னிறுத்திச் செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அத்துடன் கடந்த வருடம் இடம்பெற்ற சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின கொடி விற்பனை நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசம் மூன்றாமிடத்தைப் பெற்றமைக்குக் காரணமாக அமைந்த குறித்த கிராமமட்ட சமுர்த்திச் சங்கங்களின் உறுப்பினர்களையும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களையும் பாராட்டினார்.

தொடர்ந்து இடம்பெற்ற கொடி விற்பனை ஆரம்ப வைபவத்தில் முதலாவது கொடியினைச் சமுர்த்திச் சங்க உறுப்பினர் ஒருவர் பிரதேச செயலாளருக்கு அணிவித்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய அதிதிகளுக்கும் கொடிகள் அணிவிக்கப்பட்டு நன்கொடைப் பணமும் சேகரிக்கப்பட்டது.















No comments: