Friday 18 March 2016

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட தொற்றாநோய்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு


இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொற்றாநோய்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (18) காலை இடம்பெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறைக் கிளையின் நிர்வாகி சந்திரிக்கா அபேரத்னவின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் கிராமமட்ட களப்பணிகளைக் கடமையாகக் கொண்ட கிராம உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்குபற்றியதுடன், அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் இக்கருத்தரங்கின் வளதாரியாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி மொஹமட் இஸ்மாயில் வருகைதந்திருந்தார். நிகழ்வின் தொடக்கத்தில் பேசிய செஞ்சிலுவைச் சங்க அம்பாறைக் கிளையின் நிர்வாகி குறித்த கருத்தரங்கை அரச உத்தியோகத்தர்களுக்குத் தாம் நடாத்திவருவதற்கான காரணத்தைத் தெரியப்படுத்தியதுடன் தொற்றாநோய்கள் தொடர்பான பிரதேச செயலாளரது சிறப்புரையும் அங்கு இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து கருத்தரங்கை முன்னெடுத்த ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி மொஹமட் இஸ்மாயில், தொற்றாநோய்கள் தொடர்பான அறிமுகத்தையும் அவ்வாறான நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகள், மற்றும் அவற்றால் நோயாளியின் குடும்ப அமைப்பில் ஏற்படும் அசாதாரண நிலைமைகள் போன்றன தொடர்பாக விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், அவ்வாறான நோய்கள் ஏற்படுவதைக் குறைத்துக்கொள்வதற்குக் கைக்கொள்ளவேண்டிய உணவுப் பழக்கங்கள் மற்றும் தேக அப்பியாசங்கள் தொடர்பாகவும் அங்கு தெளிவுபடுத்தியிருந்தார்.












No comments: