Friday 4 December 2015

ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டக் கல்வி வலயத்திலுள்ள பிரசித்தி பெற்ற கல்லூரியும் ஒரேயொரு தேசிய பாடசாலையுமான ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரியில் இவ்வருடம் ஆகஸ்டில் இடம்பெற்ற தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (04) காலை கல்லூரி முதல்வர் எம்.கிருபைராஜா தலைமையில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதம அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜனும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி முதல்வர் எஸ்.லோகநாதன், ஆரம்பக்கல்விப் பிரிவின் தலைவரும் ஆசிரியருமான வி.மகாபதி, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் கல்லூரியின் பாண்ட் வாத்திய இசை முழங்க வரவேற்கப்பட்ட அதிதிகள் மங்கல விளக்கேற்றி வைபவத்தை ஆரம்பித்துவைத்தனர். தலைமையுரையாற்றிய கல்லூரி முதல்வர் கிருபைராஜா, சித்திபெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாயிருந்த பெற்றோரையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டிப் பேசினார்.

அதிதிகள் உரையின்போது பேசிய பிரதேச செயலாளர் ஜெகதீசன், ஆலையடிவேம்பு பிரதேசத்தின் அடையாளமாகவும், பெருமையின் சின்னமாகவும் விளங்கும் இராம கிருஷ்ணா கல்லூரியின் சாதனைகளில் பங்கெடுத்துள்ள மாணவர்களைப் பார்க்கையில் பெருமையடைவதாகக் குறிப்பிட்டார். ஒரு பிரதேசத்தில் எத்தனை வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள் இருக்கின்றார்கள் என்பதனை விடவும் எத்தனை ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என்பதே அப்பிரதேசத்தின் ஆரோக்கியத்தை எடுத்துக்காட்டும் ஒரு குறிகாட்டியாகும் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் சுகிர்தராஜன், புலமைப்பரிசில் பரீட்சைகளில் தொடர்ந்து அதிக மாணவர்கள் சித்தியடைந்துவரும் ஒரே பாடசாலையாக விளங்கும் இராம கிருஷ்ணா கல்லூரியில் பயிலும் மாணவர்களது அடைவு மட்டம் திருக்கோவில் வலயத்திலுள்ள ஏனைய பாடசாலைகளோடு ஒப்பிடுகையில் மிக அதிகம் எனக் குறிப்பிட்டதுடன், இவ்வாறான மாணவர்களின் பெறுபேறுகளுக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான கற்பித்தல் மனப்பாங்கே காரணம் எனவும் குறிப்பிட்டார்.

அடுத்து இடம்பெற்ற தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் 16 மாணவ, மாணவிகள் அதிதிகளால் வெற்றிச்சின்னம் அணிவிக்கப்பட்டும், சான்றிதழ்கள் மற்றும் நினைவுக்கேடயங்கள் வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டனர். இதில் சிறப்பம்சமாக வெட்டுப்புள்ளிகளுக்கு அண்மித்த புள்ளிகளைப் பெற்ற இரண்டு மாணவிகளும் மற்ற மாணவர்களுக்குச் சமமான மரியாதை வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சித்திபெற்ற மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் 4 ஆசிரியர்களும் பிரிவுத் தலைவரும் அதிதிகளால் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், தனது சிறப்பான சேவைகளுக்காக கல்லூரி முதல்வர் கிருபைராஜாவும் பாடசாலைச் சமுகத்தினரால் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வைச் சிறப்பிக்கும்வகையில் கல்லூரி மாணவர்களால் அங்கு மேடையேற்றப்பட்ட கண் கவரும் கலை நிகழ்வுகள் அதிதிகளதும் பார்வையாளர்களதும் பெருவரவேற்பைப் பெற்றிருந்தன.





















No comments: