Sunday 1 November 2015

ஐந்தாண்டுகளுக்கான திட்டங்கள்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத் திட்டமிடல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான கிராம அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகக் கிராமமட்டங்களில் வேலை செய்யும் அரச உத்தியோகத்தர்களைத் தயார் செய்வதற்கான கருத்தரங்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில்  (26) இடம்பெற்றது.



ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளிலும் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டதுடன், வளதாரிகளாக அம்பாறை மாவட்ட செயலகத் திட்டமிடல் செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.விவேகானந்தராஜா, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.



மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, மல்டிமீடியா தொழில்நுட்ப உதவியுடன் நடாத்தப்பட்ட குறித்த கருத்தரங்கில் முதலாவதாக கிராமமட்டங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான பெறுபேறுகளை மையப்படுத்திய திட்டமிடல் பொறிமுறை தொடர்பாக அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம் தனது கருத்துக்களைப் பங்குபற்றுனர்களுக்குத் தெரிவுபடுத்தினார். இதில் கிராமமொன்றின் அபிவிருத்தி தொடர்பாக நீண்டகாலத் திட்டமிடலை மேற்கொள்ளும்போது செய்யவேண்டிய திட்டமிடல் படிமுறைகளை விளக்கப்படங்களோடு விளக்கினார்.



அடுத்த கட்டமாக இடம்பெற்ற கிராம அபிவிருத்தித் திட்டமொன்ற தயாரித்தல் தொடர்பான கருத்தரங்கை அம்பாறை மாவட்ட செயலகத் திட்டமிடல் செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.விவேகானந்தராஜா நடாத்தினார். இதில் மக்களின் பங்கேற்புடன் தரவுகளையும் தகவல்களையும் பெற்று கிராமங்களுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான அடிப்படை அறிவினைக் கிராமமட்டங்களில் வேலை செய்யும் அரச உத்தியோகத்தர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் வகையில் அவரது தெளிவுபடுத்தல்கள் அமைந்திருந்தன.



மதியபோசன இடைவேளையின் பின்னர் இறுதியாக இடம்பெற்ற மூன்றாம்கட்ட நிகழ்வை ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா நடாத்தியிருந்தார். இதில் கிராமமட்ட அரச உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படவுள்ள கிராம அபிவிருத்தித் திட்டமிடலுக்கான தரவு சேகரித்தலின்போது கைக்கொள்ளவேண்டிய முறைமைகள் மற்றும் அதிலுள்ள நுட்பங்கள் தொடர்பாக அவரது தெளிவுபடுத்தல்கள் அமைந்திருந்தன.

No comments: