Thursday 1 October 2015

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2012ஆம் 2013ஆம் வருட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்..

  

மாணவர்களுக்கு விடுதி வசதியை பல்கலைக்கழக வளாகத்தினுள் ஏற்படுத்தித் தருமாறு கோரி ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2012ஆம் 2013ஆம் வருட மாணவர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பல்கலைக்கழக உபவேந்தரின் காரியாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த இந்த மாணவர்கள், பல்கலைக்கழக நுழைவாயில்வரை சென்று டயர்களை எரித்தனர். இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவரை தொடர்ந்து செல்லவிடாது பொலிஸார் தடுத்தபோது, கண்ணாடி மீது அம்மாணவர் விழுந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவிக்கையில், 'தென்கிழக்குப் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த மாணவர்கள்  சிலருக்கு வெளியிடங்களில் வழங்கப்பட்டுள்ள விடுதிகளில் போதியளவான வசதி இல்லையென்பதுடன், பாதுகாப்பும் குறைவாக உள்ளது. இது தொடர்பில் மாணவர்கள் சுட்டிக்காட்டியபோதிலும், பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


  மேலும், நிந்தவூரிலுள்ள பெண்கள் விடுதியொன்றில் புதன்கிழமை (30) இரவு மர்ம நபர்கள் உலவியுள்ளனர்.

 இதனால், அங்கிருந்த மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். 


எனவே, மாணவர்களாகிய எங்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் பாதுகாப்பான விடுதி வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிடின், தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

 இதேவேளை, பல்கலைக்கழக பதிவாளர்; எச்.அப்துல் சத்தார் தெரிவிக்கையில், 'இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  மாத்திரமே அனைத்து வருட கற்கைநெறி மாணவர்களுக்கும் விடுதி வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

 மேலும், பல்கலைக்கழக விடுதி வசதி முதலாம் மற்றும் இறுதி வருட கற்கைநெறி மாணவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது. பல்கலைக்கழகத்தில் விடுதி வசதியை ஏற்படுத்தித் தருமாறு இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் கோர முடியாதென்பதுடன், வெளியிடங்களில் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ள விடுதி வசதியை இம்மாணவர்கள் சலுகையாக கருதவேண்டும். பல்கலைக்கழக மாணவர் பேரவைக்கான தேர்தல் காலமாக இருப்பதால் அதன் பின்னணியிலேயே ஆர்ப்பாட்டமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.   விடுதிப் பிரச்சினை தொடர்;பில் அவர்களினால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு முறைப்பாடு செய்யப்படவோ அல்லது மகஜர் கையளிக்கப்படவோ இல்லை.

 நியாயமற்ற இந்தக் கோரிக்கையை முன்வைத்து இம்மாணவர்கள் தொடர்;ந்து ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்களாயின், நாங்களும் ஒரு முடிவுக்கு வந்து அவர்களுக்கு தடைவிதித்து கற்கைநெறியை தடை செய்யவேண்டி வரும்' என்றார்.

No comments: