Tuesday 24 March 2020

90 பேர் வைத்தியசாலைக்குட்பட்ட பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

(வி.சுகிர்தகுமார்)  
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இதுவரையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் எனும் சந்கேகத்திற்கிடமான இருவர் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனையின் பின்னர் அவ்விருவர் உட்பட வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 90 பேர் வைத்தியசாலைக்குட்பட்ட பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியசாலையின் பொதுச்சுகாதார பிரிவு மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாட்டுபிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ஏ.எம்.முபாரிஸ் தெரிவித்தார்.



இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எக்காரணத்தை கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதை தவி;ர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கொரோனா தொற்று நோய் தடுப்பு தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் இன்று கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் நம்மை நாமே தனிமைப்படுத்தல் என்பதே கொரோனா நோயில் இருந்து நம்மை பாதூப்பதற்கான முக்கிய செய்தி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் செயற்பட்டால் மாத்திரமே நம் நாட்டில் இருந்து கொரோனாவை வெளியேற்றலாம். ஆகவே பொதுமக்கள் இதனை புரிந்து கொண்டு சுகாதார துறைக்கு ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை கொரோன நோயாளிகளை பரிசோதிக்கும் கேந்திர நிலையமாக செயற்படுகின்றது. ஆகவே தேவையற்றவர்கள் வைத்தியசாலைக்குள் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள். சந்தேகத்திற்கிடமான நோயாளிகள் எவ்வாறு வைத்தியசாலைக்குள் நுழைய வேண்டும் என்பதை வைத்தியசாலையின் முன்வாயிலில் நாம் காட்சிப்படுத்தியுள்ளோம். அதற்கான உத்தியோகத்தர்களையும் நியமித்துள்ளோம். ஆகவே அந்த உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலை செவிமடுத்து செயற்பட்டால் வைத்தியசாலையின் உள்ளும் வெளியும் நோயை கட்டுப்படுத்தவது இலகு எனவும் கூறினார்.

உலகளாவிய ரீதியில் கொரோவிற்கான முறையான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இலங்கையிலும் மருந்துவ வசதி குறைந்த அளவிலேயே உள்ளது. ஆகவே நோய் வருமுன் காப்போம் எனும் முதுமொழிக்கேற்ப செயற்படுமாறும் அனைத்து மக்களையும் கேட்டுக் கொண்டார்.

இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி; வைத்தியர் எஸ்.அகிலன் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் உட்பட பிரதேச செயலகம், மத்தியசந்தைப்பகுதி, வங்கிகள் என மக்கள் அதிகமாக கூடும் பிரதேசங்களில் தொற்று நீக்கி மருந்து விசிறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க நான்காவது நாளாகவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு.சி.பி.எம்.விஜயதுங்க தலைமையிலான பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையினையும் ரோந்து நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளதுடன்; வெளியே வீணே நடமாடும் நபர்களையும் வாகனங்களையும் பரிசோதனை செய்யும் நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






 

90 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குட்பட்ட பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: