Sunday 29 March 2020

சமுர்த்தி வங்கியினூடாக நேற்றுவரை 12 கோடியே எழுபத்தி ஜந்து இலட்சம் ரூபா

haran
(வி.சுகிர்தகுமார்) 
அம்பாரை மாவட்டத்தில் சமுர்த்தி வங்கியினூடாக நேற்றுவரை 12 கோடியே எழுபத்தி ஜந்து இலட்சம் ரூபா (127,500,000) இருபத்தி மூவாயிரத்து இருநூற்றி எண்பது(23280) பயனாளிகளுக்கு வட்டியற்ற கடனாக வழங்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் இக்கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



ஜனாதிபதி கோத்தபாயவின் ஆலோசனைக்கமைய கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு தொழிலை இழந்துள்ள சமுர்த்தி கட்டாய சேமிப்பு கணக்குள்ளவர்களுக்கான சஹனபியவர எனும் சலுகைக்கடன் திட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றுநிருபத்திற்கமைய சமுர்த்தி வங்கிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸின் உத்தரவிற்கமைய குறித்த கடன் சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் இதுவரையில் 41456 கடன் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பிரதேச செயலாளர் கே.லவநாதனின் ஆலோசனைக்கமைய ஆலையடிவேம்பு வடக்கு மற்றும் தெற்கு வங்கியிலும் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் இன்று கடமையில் ஈடுபட்டிருந்தததை அவதானிக்க முடிந்ததுடன் வீடுகளுக்கு சென்று கடனையும் வழங்கினர்.

இச்சலுகைக்கடனின் சலுகைக் காலம் 06 மாதங்கள் என்பதுடன் 12 மாதங்களுக்குள் தவணை அடிப்படையில் வட்டியின்றி அறிவிடப்பட வேண்டும் .

இதேநேரம் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் பொலிசார் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தியாவசிய தேவைகளை தவிர வெளியில் யாரும் நடமாட முடியாதவாறு பொலிசார் தமது பணிகளில் ஈடுபட்டனர்.

இது இவ்வாறிருக்க கிராமங்களில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் அனுமதி பெற்றுள்ளார்களா என்பது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுத்ததையும் அவதானிக்க முடிந்தது.
அம்பாரை மாவட்டத்தில் சமுர்த்தி வங்கியினூடாக 12 கோடியே எழுபத்தி ஜந்து இலட்சம் ரூபா (127,500,000) வட்டியற்ற கடன் வழங்கி வைப்பு ! Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: