Sunday 26 April 2015

கண்காட்சி நிகழ்வு

அக்கரைப்பற்றில் செயற்படும் அரசுசாரா அமைப்பான பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடாத்தப்பட்டுவரும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவச் சிறார்கள் இணைந்து நடாத்தும் கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி நிகழ்வு நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.





இக்கண்காட்சி நிகழ்வுக்கு அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், திருக்கோவில் கல்வி வலய ஆரம்பப் பாடசாலைகளுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தர்மபாலன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், அம்பாறை மாவட்ட அரசுசாரா அமைப்புக்களின் இணையத் தலைவர் வி.பரமசிங்கம், சேவ் த சில்ரன் அமைப்பின் பிரதிநிதி மற்றும் பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி திருமதி. காந்திமதி ஜோய் ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்கள்.

ஆலையடிவேம்பு, கோபால் கடை வீதியிலுள்ள பாலர் பாடசாலையில் இடம்பெறும் குறித்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த கைப்பணிப் பொருட்களை அதிதிகள் பார்வையிட்டதைத் தொடர்ந்து நிகழ்வுக்கு வருகை தந்திருந்த பாலர் பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் பொதுமக்களும் பார்வையிட்டனர்.

பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்பட்டுவரும் பாலர் பாடசாலைகளான விவேகானந்தா, கனகாம்பிகை, கனகதுர்க்கா, விநாயகர் மற்றும் அம்பாள் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களது கூட்டுமுயற்சியில் ஒழுங்குசெய்யப்பட்ட குறித்த கண்காட்சியில், தமது அன்றாட வாழ்க்கைச் சூழலில் பயன்படுத்தப்படும் பொருட்களை மூலப்பொருட்களாகக் கொண்டு அழகிய முறையிலும் கண்களைக் கவரும் வகையிலும் உருவாக்கப்பட்டிருந்த கைப்பணிப் பொருட்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன.
அத்துடன் குறித்த கண்காட்சியானது எதிர்வரும் 25-04-2015, சனிக்கிழமை வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: