Wednesday 1 March 2017

பிரதேச அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு சமுகமளிக்காத அரச அதிகாரிகள் மீது பாரபட்சம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும். - க.கோடீஸ்வரன் (பா.உ)


இலங்கையிலுள்ள தமிழர் வாழும் பிரதேசங்களில், அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஆலையடிவேம்பு, திருக்கோவில் போன்ற பிரதேசங்களில் இடம்பெறுகின்ற எவ்விதமான அபிவிருத்தி சம்மந்தமான கூட்டங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டாலும் அரச அதிகாரிகள் சமுகமளிப்பதில்லை. அவை இதுபோன்ற இணைப்புக் குழுக் கூட்டங்களாக இருந்தாலும் சரி. இல்லாவிட்டால் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்களாக இருந்தாலும் சரி. எதுவாக இருந்தாலும் அவர்கள் ஏதாவது காரணங்களைக் கூறிப் புறக்கணித்துவிடுகின்றார்கள். இதன்மூலம் அவர்கள் மறைமுகமாக எமக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிவிடுகின்றார்கள்.
இலங்கைத் திருநாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் மக்கள் சரிசமமாக வாழவும், ஒவ்வொரு பிரதேசமும் அதன் தேவைகளுக்கேற்றவாறு பக்கச்சார்பற்ற விதத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் உள்வாங்கப்படவும் உண்டான தார்மீக உரிமையை இதுபோன்ற எமது தமிழ்ப் பிரதேசங்களுக்கு வழங்குவதில் தமக்கு எவ்வித அக்கறையும் கிடையாது என்பதே அதுவாகும். இதனை எமது மக்களின் பிரதிநிதி என்றவகையில் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அத்தோடு இவ்வாறான அதிகாரிகளின் பாராமுகமான செயற்பாடுகளை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்வேன்.” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இவ்வருடத்திற்கான முதலாவது கூட்டம் அதன் தலைவரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அவரது தலைமையில் நேற்று (01) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத் திட்டமிடல் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான ஏ.எம்.அப்துல் மஜீத், பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன், உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் உட்பட ஆலையடிவேம்பு பிரதேச அரசியல் பிரமுகர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள், கமக்காரர் அமைப்பின் அங்கத்தவர்கள், பாடசாலை அதிபர்கள், மாதர் கிராம மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமக்காரர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டம் மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்தோடு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

முதலில் இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரது வரவேற்புரையைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்தும் அங்கு விரிவாகப் பேசியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் கடந்த ஆண்டு (2016) மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அவற்றுக்காகச் செலவிடப்பட்ட நிதியின் அளவு என்பன தொடர்பாகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா அங்கு கூடியிருந்தோருக்குத் தெளிவுபடுத்தினார். அதனையடுத்து கலந்துகொண்ட அரச திணைக்களப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஆரம்பமானது.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக அதன் செயலாளர் திருமதி. விஜயராணி கமலனாதன் அங்கு குறிப்பிட்டுப் பேசியிருந்தார். தற்போது தொடர்ச்சியான மழை பெய்துவருகின்ற சூழ்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பல வீதிகள் சரியான வடிகான்களின்மையால் வெள்ளக்காடாகக் காட்சியளிப்பது தொடர்பாக அங்கு வாதப்பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. தனியார் காணிகளுக்குள் நீர் தேங்கி நிற்பதால் ஏற்பட்டுள்ள டெங்கு நோய் அபாயம் தொடர்பாகவும், கடந்த வருடங்களை விடவும் ஒப்பீட்டளவில் இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதகாலப் பகுதிக்குள் அதுகளவானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மொஹமட் இஸ்மாயில், ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் என்பவற்றின் உதவியோடு அந்நோய்த் தாக்கங்களைக் குறைக்கும் வகையில் தம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், ஏனைய தொற்றாநோய்களின் தாக்கங்களைக் குறைக்கும்வகையில் தமது அலுவலகத்தால் நடாத்தப்பட்டுவரும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் குறித்தும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி அவ்வைத்தியசாலையில் தற்போது நிலவிவருகின்ற குடிநீர் வசதியின்மை மற்றும் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அவ்வைத்தியசாளைக்கான வீதிகள் குன்றும் குழியுமாகச் சீரற்றுக் காணப்படுகின்றமையையும், அதனால் நோயாளிகளை அவசரமாக ஏனைய வைத்தியசாலைகளுக்கு இடம்மாற்றுவதில் தாம் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், இவ்வருடத்துக்குள் பனங்காடு கிராமத்துக்கான குடிநீர் இணைப்புக்களை வழங்குவதற்கான முன்மொழிவு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததோடு, அவை விரைவில் பூர்த்திசெய்து தரப்படும் எனவும் உறுதியளித்திருந்தார்.

அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் நிலவிவருகின்ற பிரச்சனைகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதன் சார்பாக வருகை தந்திருந்த பிரதிநிதிகள் இருவர் அவற்றுக்குப் பதிலளித்திருந்தனர். வைத்தியசாலைக்கு அன்றாடம் வருகைதரும் நோயாளிகள் சிகிச்சையளிக்கப்படாது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படுதல், அதன் ஊழியர்கள் கடமைக்கு ஒழுங்காகச் சமுகமளிக்காமை, பெறுமதிமிக்க வைத்திய உபகரணங்கள் தவறாகக் கையாளப்படல், கடமையிலுள்ள வைத்தியர்களின் அசமந்தப் போக்கு மற்றும் பொதுமக்கள் மீதான பாராமுகச் செயற்பாடுகள் என்பன தொடர்பாகப் பொதுமக்களால் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டுவரும் முறைப்பாடுகள் தொடர்பாகவும், அண்மையில் அவ்வைத்தியசாலையின் ஊழியர்களுக்கெதிராகப் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தமது தரப்பு வாதங்களை முன்வைத்திருந்தனர். எனினும் பலவருடப் பாரம்பரியத்தைக் கொண்ட குறித்த வைத்தியசாலையின் தரத்தைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட எவருக்கும் அனுமதியளிக்காப்படமாட்டாது எனக் கண்டிப்பாகக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், அவ்வைத்தியசாலையின் பிரச்சனைகள் தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டுசெல்லவுள்ளதாகவும் அங்கு தெரிவித்தார்.

அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தற்போது பெய்துவருகின்ற அடைமழையைத் தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அடைப்பெடுத்துள்ள வடிகான்கள் பல இன்னும் சுத்தப்படுத்தப்படாமையால் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகள் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. விஜயராணி கமலநாதனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதேச சபையின் செயலாளர் ஆளணி மற்றும் கனரக இயந்திரங்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாகத் தம்மால் ஒரே நேரத்தில் எல்லா வடிகான்களையும் துப்பரவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், மாரி மழைக்காலத்துக்கு முன்னர் படிப்படியாக அவற்றை முற்றாகத் துப்பரவுசெய்து தரமுடியும் எனவும் அங்கு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பாடசாலைகளில் நிலவிவருகின்ற குறைபாடுகள் தொடர்பாகவும், பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கிவருகின்ற பிரச்சனைகள் உள்ளிட்ட விடயங்களும் அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தன.

















No comments: