Tuesday 28 March 2017

சிரமதானம்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகமானது ஆலையடிவேம்பு பிரதேச சபையோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் சிரமதான நிகழ்வொன்று இன்று (28) காலை 7.00 மணி தொடக்கம் பனங்காடு, சாகாம வீதியிலுள்ள சிப்பித்திடல் பொது மயானத்தில் இடம்பெற்றது.

பனங்காடு, சின்னப்பனங்காடு மற்றும் புளியம்பத்தை கிராமங்களில் வசித்துவருகின்ற பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் குறித்த மயானம் மிக நீண்டகாலமாக எவ்வித துப்பரவுப் பணிகளும் இடம்பெறாத நிலையில் மரம், செடி, முட்புதர்கள், பற்றைக் காடுகள் மண்டியும், குப்பைகள் நிறைந்தும் காணப்பட்ட நிலையில் அவற்றைத் துப்பரவு செய்து சுத்தப்படுத்திப் பாதுகாக்கும் நோக்கோடு இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்திருந்தார்.

அவரது வழிகாட்டலின் துணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸ் பனங்காடு கிராம அபிவிருத்திச் சங்கத்தோடு இணைந்து ஒழுங்கு செய்திருந்த குறித்த சிரமதானத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குச் சொந்தமான கனரக இயந்திரங்களைக் கொண்டு பற்றைக்காடுகள் அழிக்கப்பட்டதோடு, குப்பை கூழங்களும் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் அங்கிருந்து கழிவுகள் சேகரிக்கும் உழவு இயந்திரத்தினைக் கொண்டு வேறிடத்துக்கு மாற்றப்பட்டன.

காலை 11.00 மணிவரை இடம்பெற்ற இச்சிரமதானத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உத்தியோகத்தர்களுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பனங்காடு மற்றும் சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், கிராமமட்ட அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள், வர்த்தகர்கள், இதர பொதுமக்கள் என பெருமளவிலானோர் பங்குகொண்டு திட்டமிட்ட முறையில் சிரமதான வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடித்திருந்தனர்.

இந்நிகழ்வின் தாகசாந்திக்கான அனுசரணையினை பனங்காடு கிராம அபிவிருத்திச் சங்கத்தோடு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸ் இணைந்து வழங்கி உதவி புரிந்திருந்தார்.


















No comments: