Wednesday 8 March 2017

அனுதினமும் ஆண்களால் கொண்டாடப்பட்டுவரும் தினமாகவே இன்றைய மகளிர் தினம் மாறியுள்ளது. - பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன்


எமது குடும்பச் சூழலில் காலையில் கண் விழித்தெழுவது முதல் அன்றைய நாளைப் பூர்த்திசெய்யும்வரை ஒவ்வொரு ஆணும் அன்றாடம் மகளிர் தினங்களைக் கொண்டாடிக்கொண்டே இருக்கின்றார்கள். காலையில் தனது மனைவி அல்லது தாய், சகோதரியின் கையால் பெறும் தேனீரிலிருந்து தொடங்கி, எமது குடும்பத்தின் அன்றாடக் கடமைகளை நிறைவு செய்து கடைசியாக நித்திரைக்குச் சென்று கண் மூடி உறங்குவது வரை எத்தனையோ கடமைகளை மனங்கோணாமலும், குடும்ப நலனைக் கருத்தில்கொண்டும் பெண்கள் செய்துமுடிக்கின்றார்கள். அவள் வேலைக்குச் செல்பவளாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. தனது கடமைகளிலிருந்து ஒருபோதும் தவறுவதில்லை. அப்படித் தவறினால் எம்மைப்போன்ற ஆண்களின் இப்போதைய நிலைமை அப்படியே தலைகீழாகிவிடும் என்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தெரிவித்தார்.

இன்றைய தினம் உலகெங்கும் அனுஸ்டிக்கப்படுகின்ற சர்வதேச மகளிர் தினத்தைச் சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவினால் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (08) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின வைபவத்தில் தலைமையேற்று உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், இன்றைய நாட்களில் பெண்களுக்கெதிராக இடம்பெறும் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்குப் பெரும்பாலும் பெண்களே காரணமாக அமைந்துவிடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்று எமது பிரதேசங்களில் பொதுத்தொண்டு நிறுவனங்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் பல்வேறு சமுக அமைப்புக்கள் பெண்களுக்குச் சமவுரிமையைப் பெற்றுக்கொடுக்கிறோம் என்ற போர்வையில் அவர்களைத் தவறாக வழிநடத்துவதும் அதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது எனவும் அங்கு குறிப்பிட்டிருந்தார்.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் அக்கரைப்பற்று கிளையின் பூரண அனுசரணையுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிளை முகாமையாளர் எம்.ஏ.சகூர், பிரதேச அபிவிருத்தி வங்கியின் அம்பாறை மாவட்ட அலுவலக முகாமையாளர்களான கே.புஸ்பராஜ் மற்றும் ஷாந்த விபுலசேன ஆகியோருடன் உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், திட்டமிடல் பிரதி பணிப்பாளர் கே.பாக்கியராஜா உட்பட ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் ஆலையடிவேம்பு பிரதேச மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சிஃபாயா ரமீஸினால் ஒழுங்குசெய்யப்பட்ட குறித்த மகளிர் தின நிகழ்வில் பரதம், கவிதை, பாடல், நகைச்சுவை உள்ளிட்ட கலை நிகழ்வுகளும், அதிதிகளின் உரைகளும் மேடையேற்றப்பட்டிருந்தன.

இதன்போது பிரதேச அபிவிருத்தி வங்கியின் அக்கரைப்பற்று கிளையில் இன்றைய சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதிய மகளிர் சேமிப்புக் கணக்குகளை ஆரம்பித்த பெண்களுக்கான சேமிப்புப் புத்தகங்களை அதிதிகளால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு, கலை நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றிருந்தன.

அத்துடன் பிரதேச அபிவிருத்தி வங்கியின் மகளிர் சேமிப்புத் திட்டங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக அக்கரைப்பற்று கிளையின் முகாமையாளர் சகூர் அங்கு தெளிவுபடுத்தியிருந்தார்.



















No comments: