Monday 15 February 2016

புதிய துவிச்சக்கரவண்டி தரிப்பிடமும் கரப்பந்து மைதானமும் திறந்துவைப்பு


இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையோடு கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தேசிய இளைஞர் சிரம சக்தி வேலைத்திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சம்மேளனத்தினூடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடம் மற்றும் அளிக்கம்பை கிராமத்திலுள்ள புனித சவேரியார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அளிக்கம்பை புத்தொளி இளைஞர் கழகத்திற்கான கரப்பந்தாட்ட மைதானம் என்பவற்றைத் திறந்துவைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் நேற்று (15) மாலை இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் யு.எல்.எம்.மஜீத் விசேட அதிதியாகவும், கல்முனை தமிழ் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கல்லூரி முதல்வர் எம்.கிருபைராஜாவின் தலைமையில் அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற துவிச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடத் திறப்பு விழாவில் அதனைத் திறந்துவைத்துப் பேசிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், தேசிய இளைஞர் சிரம சக்தி வேலைத்திட்டத்தின்கீழ் கடந்த வருடத்தின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த துவிச்சக்கர வண்டித் தரிப்பிடத்தின் நிர்மாண வேலைகளுக்காக ஒரு வரையறுக்கப்பட்ட அளவு நிதியே இளைஞர் விவகார அமைச்சினால் தமக்கு வழங்கப்பட்டது. ஆயினும் இக்கல்லூரி முதல்வரின் ஒத்துழைப்போடும், ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சம்மேளன உறுப்பினர்களின் கடின உடல் உழைப்போடும் அமைக்கப்பட்ட இத்தரிப்பிடத்தை எமது வருங்காலச் சந்ததியினரான மாணவர்கள் பயன்படுத்துவதில் தான் மிகவும் சந்தோசமடைவதாகக் குறிப்பிட்டதோடு, இதனை அமைத்துக் கொடுப்பதில் தனது முழுநேரத்தையும் செலவிட்ட எமது பிரதேச செயலகத்தின் முன்னைநாள் உத்தியோகத்தரும் தற்போது கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுபவருமான இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரனுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அடுத்து வணக்கத்துக்குரிய அருட்தந்தை தேவராஜ் பீரிஸ் தலைமையில் இடம்பெற்ற அளிக்கம்பை கிராமத்திலுள்ள புனித சவேரியார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய கரப்பந்தாட்ட மைதானத்தை அளிக்கம்பை புத்தொளி இளைஞர் கழக அங்கத்தவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் குறித்த மைதானத்துக்கான பெயர்ப் பலகையைப் பிரதேச செயலாளர் திரைநீக்கம் செய்து திறந்து வைத்ததுடன், கரப்பந்தொன்றையும் இளைஞர்களுக்கு வழங்கி மைதானப் பயிற்சிகளை அங்கு ஆரம்பித்துவைத்தார்.

அங்கு பேசிய பிரதேச செயலாளர், கடந்த வருடம் இடம்பெற்ற பிரதேச விளையாட்டுப் போட்டிகளில் அளிக்கம்பை கிராம இளைஞர்கள் வெளிப்படுத்திய திறமைகளுக்குப் பரிசாகவே இந்த மைதானம் அவர்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அடுத்து நன்றி தெரிவித்து உரையாற்றிய அருட்தந்தை தேவராஜ் பீரிஸ், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரின் அதீத முயற்சியின் பலனாகவும் கர்த்தரின் கருணையோடும் கடந்த வருடம் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற எமது கிராமத்துக்கு ஒரு பொது விளையாட்டு மைதானம் கிடைக்கப்பெற்றதாகவும், தற்போது புதிய கரப்பந்தாட்ட மைதானமொன்றும் அமைக்கப்பட்டிருப்பதானது எமது கிராமத்து மக்களின் மகிழ்ச்சியை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, பிரதேச செயலாளர், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் உட்பட இவற்றை எமக்கு வழங்குவதில் அரும்பாடுபட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் புனித சவேரியாரின் நல்லாசிகள் அதிகமாகக் கிடைக்க எமது பங்கு மக்களோடு இணைந்து தானும் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.















No comments: