Thursday 18 February 2016

மாகாண மட்டத்தில் வெற்றிபெற்ற உற்பத்தியாளரை கௌரவிக்கும் வைபவம்


கிழக்கு மாகாண கிராமிய உற்பத்திகள் திணைக்களத்தினால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கைத்தறி நெசவு மற்றும் பன் உள்ளிட்ட கைவினைப்பொருள் உட்பத்திகளுக்கான மாபெரும் கண்காட்சியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்குபற்றியதுடன், கிழக்கு மாகாண மட்டத்தில் சிறந்த பன் உற்பத்திப் பொருளுக்கான போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்று ஆலையடிவேம்பு பிரதேசத்துக்குப் பெருமை சேர்த்தவரும், பன் பொருள் உற்பத்திகளைத் தனது வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொண்டுவருபவருமான கோளாவில் - 3 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த வீரக்குட்டி மோகனாவைக் கௌரவித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (18) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் அவரது திறமையைப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், கிழக்கு மாகாண கிராமிய உற்பத்திகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் கே.குணநாதன் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.அஸீஸ் ஆகியோர் கையொப்பமிட்ட சான்றிதழையும் அவருக்கு வழங்கிவைத்தார்.

இதன்போது குறித்த வெற்றியைப் பெற்றுத்தந்த அவரது பன் உற்பத்திப்பொருள் அலுவலக உத்தியோகத்தர்களின் பார்வைக்காக அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.




No comments: