Tuesday 9 February 2021

இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைக் கோள்கள்


 

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைக் கோள்கள் உலக சாதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

 

ராமேஸ்வரத்தில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ்ஜோன் இந்தியா மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து மாணவர்களுக்கு செயற்கைக் கோள்களை உருவாக்கும் பயிற்சியை கடந்த 6 மாதங்களாக அளித்து வந்தன.


இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள 100 பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் ஈடுபாடுடைய சுமார் 1,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

அவர்களுக்கு இணைய வழியிலும், நேரடியாகவும் மிகச் சிறிய பெம்டோ செயற்கைக் கோள்களின் (FEMTO SATELLITE) வடிவமைப்பு மற்றும் அதன் மேம்பாட்டுக்கான அறிவுத் திறன்களைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மாணவர்களால் உருவாக்கப்பட்ட 100 பெம்டோ செயற்கைக்கோள்கள், (ஞாயிற்றுக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமர் பாதம் அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு ஹீலியம் வாயு நிரப்பிய பலூன் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 30 கிராம் முதல் 50 கிராம் வரை எடை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளன.

 செயற்கைக்கோள்களுடன் கூடிய பலூன் ஏவுதல் நிகழ்ச்சியை காணொளி காட்சி மூலம் தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரமோஸ் ஏவுகணை திட்ட முன்னாள் தலைவர் சிவதாணுபிள்ளை மற்றும் மாணவர்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

ஹீலியம் பலூன், இலக்கை அடைந்த பின் அத்துடன் இணைக்கபட்ட செயற்கைக்கோள்கள் பாராசூட் மூலமாக பூமியை வந்தடையும். இந்த செயற்கைக் கோள்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்றில் ஏற்பட்டுள்ள நச்சுத்தன்மை, காற்றின் வேகம், வானிலை, கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விவரங்கள் கணிணிகளில் பதிவு செய்யப்பட்டு சேகரிக்கப்படும் என செயற்கைக் கோள்களை உருவாக்கிய மாணவர்கள் தெரிவித்தனர்.

 

பெம்டோ செயற்கைக் கோள்களை உருவாக்க மாணவர்களுக்கு பயிற்சி அளித்த இளம் விஞ்ஞானி ஆனந்த் மகாலிங்கம்

 

இந்த செயற்கைக் கோள்கள் 80 சதவீதம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களால் உருவாக்கபட்டது. காரணம் அரசு பள்ளி மாணவர்களாலும் அறிவியல் துறையில் செயற்கைக் கோள்களை செய்ய முடியும் என்கின்ற தன்னம்பிக்கை வளர வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டது.'

 

No comments: