Monday 27 August 2018

தண்ணீர் வழங்குமாறுகோரி, ஆர்ப்பாட்டத்தில்

தண்ணீர் வழங்குமாறுகோரி, ஆர்ப்பாட்டத்தில் .


அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில், பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி கிராம மக்கள், குடிப்பதற்காவது தமக்குத் தண்ணீர் வழங்குமாறுகோரி, வீதியில் அமர்ந்து இன்று (27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவ​ர்கள், தாண்டியடி பிரதான வீதியில் குடங்களையும் சுலோக அட்டைகளையும் தாங்கியவாறு, வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாண்டியடி, சங்கமன்கிராமம், உமிறி, நேருபுரம், தங்கவேலாயுதபுரம், காஞ்சிகுடியாறு காஞ்சிரம்குடா, மண்டானை சாகாமம், குடிநிலம், மணல்சேனை போன்ற கிராமங்களில் வாழும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள், குடிப்பதற்கு நீரின்றி தற்போது பாரிய அவல நிலைமைக்கு ஆளாகியுள்ளனர் எனவும், தற்போது காணப்படுகின்ற அதிக வெப்பம் காரணமாக, தங்களின் குழந்தைகளுக்குச் சுத்தமான குடிநீரைக் கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமையில் தாம் துன்பப்படுவதாகவும் தெரிவித்து, இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தங்களின் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, உடனடியாக தங்களுக்கான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளுமாறு, தமது கோரிக்கை அடங்கிய மகஜரை, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்

No comments: