Thursday 2 August 2018

கைவிடப்பட்ட 89 வயதான மூதாட்டி


அண்மையில் கல்முனை வைத்தியசாலை முன்பாக தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட 89 வயதான மூதாட்டி ஒருவரை கல்முனை இளைஞர் சேனை அமைப்பினரால் மீட்கப்பட்டு, கல்முனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


அந்த மூதாட்டியின் பிள்ளைகளுக்கு தகவல் வழங்கப்பட்டும் அவர்களால் குறித்த மூதாட்டி அழைத்து செல்லப்படவில்லை.

இதன் பின் மீட்கப்பட்ட வயதான மூதாட்டியை முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்கு கல்முனை இளைஞர் சேனையினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கும், அம்மூதாட்டியின் பிள்ளைகளிடம் இருந்து பராபரிப்பு உதவிகளை பெறவும் நீதிமன்ற அனுமதி கோரி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இளைஞர் சேனை அமைப்பினரால் வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கின் சார்பாக இளைஞர் சேனை அமைப்பின் சார்பாக சட்டத்தரணி சிவரஞ்சித் மற்றும் சட்டத்தரணி ஆர்த்திகா ஆகியோரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி, எதிர்வரும் 9ம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதே வேளை குறித்த வயதான மூதாட்டியை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெறுமாறும் பணித்ததுடன், அந்த மூதாட்டியின் பிள்ளைகள் அனைவரும் அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் அழைப்பானையும் பிறப்பித்தார்.

மீண்டும் குறித்த மூதாட்டி இளைஞர் சேனை அமைப்பினரால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கும் போது குறித்த மூதாட்டியின் நிலை கண்டு மனிதாபிமான முறையில் சட்டத்தரணியும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான றிபாஸ் அவர்களும் ஆஜராகி மூதாட்டிக்கு ஆதரவாக வாதாடியிருந்தார்.


No comments: