Thursday 24 May 2018

ஆலையடிவேம்பில் வாழும் 3,500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்




அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் 3,500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் கீழ் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

பனங்காடு, சின்னப் பனங்காடு, மகாசக்திபுரம், புளியம்பத்தை, கவாடப்பிட்டி ஆகிய கிராமங்களில் வாழும் சுமார் 11,000 மக்களின் நலன் கருதியே இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் முன்னரே குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கிராமங்களுக்கான குழாய் மூல குடிநீர் விநியோகம் இதுவரை காலமும் வழங்கப்படவில்லை. இதனால் இப்பிரதேச மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி நோய்களையும் பல்வேறு அசௌகரியங்களையும் தொடர்ச்சியாக எதிர்கொண்டதுடன், கோடை காலங்களில் குடிநீர்க் கிணறுகள் வற்றிவிடும் நிலையில் தமது அன்றாடத் தேவைகளுக்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு கஸ்டங்களையும் எதிர்நோக்கிவந்தனர்.

இந்நிலை தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனும் பிரதேச பொதுமக்களும் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு சென்ற நிலையில் இத்திட்டத்துக்கான பூர்வாங்க வேலைகள் தற்போது மேற்கொள்ளப்படவுள்ளன.

குறித்த பிரதேசங்களுடன் நகரை இணைக்கும் பனங்காடு தில்லையாற்றுப் பாலத்தின் கீழாக நீரிணைப்புக் குழாய்களைப் பொருத்துவதற்குத் தேவையான பெருந்தொகைப் பணம் உள்ளிட்ட சில முன்னேற்பாடுகள் இல்லாமை காரணமாகவே இவ்வேலைத்திட்டம் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்படாமலிருந்தது.

ஆயினும் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின்  கவனத்திற்குக் கொண்டு சென்ற நிலையில் புதிய இணைப்பை வழங்கும் பொருட்டு குறித்த பாலத்தின் அமைப்பையும், ஏனைய ஏதுநிலைகளையும் பார்வையிட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள் பலர் அண்மையில் அவ்விடத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

முன்னதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு சென்ற அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனுடன் குடிநீர் இணைப்பு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பின்னர் பிரதேச செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருடன் தில்லையாற்றுப் பாலத்தினை நேரடியாகச் சென்று பார்வையிட்ட குழுவினர் குடிநீர் இணைப்பிற்கான குழாயினை பொருத்துவது தொடர்பிலும் ஆராய்ந்ததுடன் திட்ட நடைமுறை பற்றியும் அவ்விடத்தில் கலந்துரையாடினர்.

இவ் விஜயத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பொது முகாமையாளர் எம்.எம்.நசீல், பிராந்திய முகாமையாளர் ஜே.என்.கரீம்,  திட்டமிடல் பொறியியலாளர் எம்.என்.பாவா, நடைமுறை மற்றும் பராமரிப்புப் பொறியியலாளர் பி.மயூரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.












No comments: