Thursday 2 November 2017

35 வருடங்களுக்கு பின்னர் காணி உத்தரவு பத்திரங்கள்



ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்னும் பல குடும்பங்கள் கடந்த மூன்று தலைமுறைகளாகத் தமது காணிகளுக்கு சட்ட வலுவுள்ள உத்தரவுப் பத்திரங்களோ அல்லது உறுதிகளோ எதுவும் இல்லாத நிலையிலேயே இன்றுவரையில் வாழ்ந்து வருகின்றனர் என பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் குறிப்பிட்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (02) காலை இடம்பெற்ற சாந்திபுரம், அளிக்கம்பை, நாவற்காடு மற்றும் அக்கரைப்பற்று – 7/4 பகுதிகளில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமது காணிகளுக்கான ஆவணங்களின்றி குடியிருந்துவரும் மக்களுக்கு 2008/04 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் II ஆம் பிரிவின் கீழ் உத்தரவுப் பத்திரங்கள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நான் கடந்த 2009 ஆம் ஆண்டில் இப்பிரதேசத்தின் பிரதேச செயலாளராகப் பொறுப்பேற்றவேளையில் எனக்கு முன்னாலிருந்த மிகப் பெரும் சவால் காணி உரிமைப் பத்திரங்களின் தேவையே. அன்றாடம் என்னைத் தேடி வருகின்ற பொதுமக்களில் பத்திற்கு எட்டுப் பேர் தமக்கான காணி உரிமையைப் பெற்றுத் தாருங்கள் என்ற கோரிக்கையோடே வந்தார்கள். அவற்றை எவ்வாறு முறையாகப் பெற்றுக்கொள்வது என்பதில் அக்காலகட்டத்தில் அவர்கள் அனுபவமற்றவர்களாக இருந்ததனால் முதலில் அவை தொடர்பான அறிவூட்டல் வேலைத்திட்டங்களையும் காணிக் கச்சேரிகளையும் கிராம மட்டங்களிலிருந்து முன்னெடுக்கவேண்டியிருந்தது. ஆகவே கிழக்கு மாகாண காணி அமைச்சின் அனுசரணையோடு கடந்த வருடங்களில் அவற்றைப் படிப்படியாக முன்னெடுத்து மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து சட்ட ஆலோசனைகளையும் ஏனைய உதவிகளையும் எமது பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவினூடாக வழங்கியிருந்ததுடன், காணிப் பாத்திரங்களுக்கான விண்ணப்பங்களையும் சேகரித்தோம். அவற்றின் பயனாகவே கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் இவ்வாறு சட்ட வலுவுள்ள காணி ஆவணங்களை உரிய குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடிந்ததாகவும் கூறினார்.

உதவி பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் காணிப் பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் குறிப்பிட்ட சாந்திபுரம், அளிக்கம்பை, நாவற்காடு மற்றும் அக்கரைப்பற்று – 7/4 பகுதிகளைச் சேர்ந்த 103 குடும்பங்களுக்குக் காணி உத்தரவுப் பத்திரங்களும், 20 குடும்பங்களுக்கு காணி அளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன.
















No comments: