Tuesday 25 October 2016

கண்ணகிகிராம மக்களுக்கு விரைவில் காணி உறுதிப்பத்திரங்கள


அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த 37 வருடங்களாக காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாது வாழும் கண்ணகிகிராம மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான உடன் நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உறுதி வழங்கியுள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேச செலயகத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற மேட்டு நிலம் மற்றும் விவசாய காணிகளுக்கான ரன்பிம காணி அளிப்புப் பத்திரங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு 115 பேருக்கான பத்திரங்களைக் கையளித்தன் பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், 1978 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் அமரர் கனகரெத்தினம் அவர்களின் அயராத முயற்சியால் குடியேற்றம் செய்யப்பட்ட கண்ணகிகிராம மக்களுக்கு 247 வீடுகள் வீடமைப்பு அதிகார சபையால்  அக்காலத்தில் கட்டிக்கொடுக்கப்பட்டன.

இவ்வாறு அமைக்கப்பட்ட வீடொன்றிற்கு பதினெட்டாயிரம் ரூபாவினை வீடமைப்பு அதிகார சபை செலவு செய்ததாகவும், பகுதி அடிப்படையில் இப்பணம் மீளச் செலுத்தப்படவேண்டும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வாறு குறித்த தொகையை மீளச் செலுத்தும் வரையில் காணிகளின் உறுதிகள் பிணையாக வீடமைப்பு அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டது.

எனினும் முற்றிலும் வறுமை மற்றும் யுத்தம் போன்றவற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட  கண்ணகிகிராம மக்களால் அத்தொகையை மீளச் செலுத்த முடியாமல் 36 வருடங்கள் கடந்தன. கடனைப் பெற்றவர்கள் சிலர் மரணமாகியும், சிலர் நம்பிக்கையின் அடிப்படையில் வீடு, வளவினை விற்றுவிட்டும் சென்றுள்ள நிலையில் ஒரு சில வீடுகளில்  மாத்திரம் கடனை செலுத்தாதுள்ள குடும்பங்களின் பிள்ளைகள் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

இதனால் தற்போது இங்கு வாழ்ந்துவரும் குடும்பங்களின் பிள்ளைகள் திருமணம் செய்கின்றபொழுது சீதனமாக காணிகளை பங்கீடு செய்து வழங்க முடியாமலும், வங்கிகளில் கடன் பெறுதல் போன்ற காரியங்களை நிறைவேற்ற இயலாமலும் உள்ளதாக இங்கு வாழும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் பல வீடுகள் முற்றாக சிதைவடைந்த நிலையிலும் சில வீடுகள் குடியிருக்க முடியாமல் வெடிப்புற்ற நிலையிலும் மக்கள் வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே வீடமைப்பு அதிகார சபை பெற்ற கடனை மொத்தமாக அனைவரும் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மீளச் செலுத்த முடியாத பட்சத்தில் காணிகளின் உறுதிகள் கையளிக்கப்படமாட்டாது எனவும் அறிவித்துள்ளதாக அறியமுடிவதாகவும் கூறினார்.

முற்றிலும் யுத்தத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்ட இக்கிராம மக்கள் மீது அரசாங்கம் கருணை காட்ட வேண்டும். அவர்கள் செலுத்த வேண்டிய பணத்தை மனிதாபிமானத்துடன் நீக்கி அவர்களுடைய காணிகளின் உறுதிகளை மீள வழங்க வேண்டும் எனும் பணிவான கோரிக்கையினை தான் அரசாங்கத்திடம் முன் வைப்பதுடன், இவ்விடயம் தொடர்பில் வீடமைப்பு அமைச்சர் மற்றும் பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களுக்கான தீர்வினை விரைவில் பெற்றுக் கொடுப்பேன் என உறுதி வழங்கினார்.

எது எவ்வாறாயினும் மக்களின் நலன்களில் அதிக அக்கறை காட்டும் அரசாங்கமும் ஜனாதிபதியும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி காணி உறுதி பத்திரங்களை மீட்டுக் கொடுத்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அங்கு குறிப்பிட்டார்.














No comments: