Tuesday 11 October 2016

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகள்


ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்திய இவ்வாண்டுக்கான கலைவாணி விழா மற்றும் வாணி விழா சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வுகள் இன்று (11) மாலை பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றன.

நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் குழுவினரின் சிறப்பு பஜனையுடன் ஆரம்பமான கலைவாணி விழா நிகழ்வுகளின் சிறப்புப் பூஜைகளை அக்கரைப்பற்று அருள்மிகு மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ முத்து தேவமனோகரக் குருக்களும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக அருள்மிகு மஹா கணபதி ஆலய குரு சிவஸ்ரீ பிருந்துஜன் சர்மாவும் இணைந்து நடாத்திவைத்தனர்.

இக்கலைவாணி விழாவைச் சிறப்பிக்கும்வகையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் வடிவமைக்கப்பட்ட இருபத்திமூன்றாவது வாணி விழா சிறப்பு மலரைப் பிரதேச செயலாளர் வெளியிட்டுவைத்தார். அதன் முதல் பிரதியை ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் பெற்றுக்கொண்டதுடன், ஏனைய பிரதிகளை ஆலையடிவேம்பு பிரதேச பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, திவிநெகும தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் உள்ளிட்ட ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பெற்றுக்கொண்டனர்.

குறித்த விழாவில் சிறப்பம்சமாக இடம்பெற்ற கலைநிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேசப் பாடசாலை மாணவர்களின் பரதம், கிராமிய நடனம் மற்றும் தனிப்பாடல் போன்ற தமிழர் பாரம்பரியங்களைப் பறைசாற்றும் மேடை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, அவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இவ்விழாவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் மூவினங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















No comments: