Wednesday 24 August 2016

தடுத்துநிறுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை

கார்த்தி 

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோம்பக்கரச்சி வில்காமம் பகுதியிலுள்ள சுமார் 90 ஏக்கர் மேட்டுநிலக் காணியை அத்துமீறி வனபரிபாலன இலாகா கைப்பற்றும் முயற்சியை தடுத்துநிறுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்காணிக்கு எல்லைக் கற்களை வனபரிபாலன இலாகா அதிகாரிகள் இட்டு வருவதாகவும் இதனைத் தடுத்துநிறுத்தி தங்களின் காணியை பெற்றுத்தருமாறும் கோரிய மகஜரை திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனிடம் இன்று புதன்கிழமை கையளித்துள்ளதாக வில்காமம் பாக்கியபுரம் விவசாய அமைப்பு தெரிவித்தது. இதன்போது, இக்காணிப் பிரச்சினை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வனபரிபாலன இலாகா அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதுடன், இப்பிரச்சினைக்கு தீர்வைக் காணும் வகையில் பொதுக் கலந்துரையாடலுக்கு ஓரிரு தினங்களில் ஏற்பாடு செய்வதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார். அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நீண்டகாலமாக மேற்படி மேட்டுநிலத்தில் பயிர்ச் செய்கையில் நாம் ஈடுபட்டுவந்தோம். கடந்த காலத்தில் இக்காணியில் நெற்செய்கையுடன் கச்சான், சோளம், மரவள்ளி போன்ற செய்கைகளும்; மேற்கொள்ளப்பட்டன.   தற்போது இக்காணியை அரசாங்கக் காணியென வனபரிபாலன இலாகா அதிகாரிகள் தெரிவித்து, இக்காணிக்கு எல்லைக் கற்களை நடுவதுடன்,  அக்காணியில் மரக்கன்றுகளை நடுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுவருகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் சில காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள்; வழங்கப்பட்டுள்ளதுடன், இக்காணிகளுக்கான  அனுமதிப்பத்திரங்கள் எங்களிடம் உள்ளன. சில காணிகளுக்காக காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டபோதிலும், அக்காணிகளுக்கு இதுவரையில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாமலும் உள்ளன. இக்காணிப் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினோம். இருப்பினும், இக்காணிக்கு வனபரிபாலன இலாகா அதிகாரிகள் எல்லைக் கற்கள் நடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது 

No comments: