Thursday 14 July 2016

அரை மரதன் ஓட்டப் போட்டி




இலங்கை கிறிக்கட் வீரர்கள் பலரும் வெளிநாட்டு உலாசப் பிரயாணிகளும், தேசிய மரதன் ஓட்ட வீர வீராங்கனைகளும் பாடசாலை உயர்தர வகுப்பு மாண மாணவிகளும்  பங்கேற்பு

சர்வதேச ரீதியில் உல்லாச பயணத்துறைக்கு பெயர்பெற்ற பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான அரை மரதன் ஓட்டப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாகின்றது.

அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியம் அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் , பொத்துவில் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பொலிஸார் ஆகியோரின்  ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்துள்ள ” கல்விக்காக ஓடுவோம் ” எனும் தொனிப்பொருளில் அமைந்த அரை மரதன் ஓட்டப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிக்கு பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இந்த அரைமரதன் ஓட்டப் போட்டி சின்ன உல்லை அல் அக்ஸா வித்தியாலயத்திற்கு முன்னால் ஆரம்பமாகி , பொத்துவில் பாணம பிரதான வீதியினூடாக , பசறைச் சேனையை அடைந்து பின்னர் ஹிஜ்ரா வீதியினூடாக சென்று அங்கிருந்து மீண்டும் பொத்துவில் பாணம பிரதான வீதியினூடாக , ஊரணி வளைவை அடைந்து இறுதியாக போட்டி ஆரம்பிக்கப்பட்ட சின்ன உல்லை அல் அக்ஸா வித்தியாலயத்திற்கு முன்னால் நிறைவுபெறும்.
நாடு தழுநிய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மேற்படி மரதன் ஓட்டப் போட்டியில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் , உள்நாட்டு மரதன் ஓட்ட வீர வீராங்கனைகள் , உயர்தர வகுப்பு மாணவ மாணவிகள் என பலரும் இப் போட்டியில் கலந்து கொள்ளவிருப்பது விசேட அம்சமாகும்.

உள்நாட்டு வீரர்கள்  மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் ( ஆண்கள் )  21.5 கிலோ மீற்றர் தூரமும் , உள்நாட்டு வீராங்கனைகள் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் ( பெண்கள் ) 15 கிலோ மீற்றர் தூரமும் , பாடசாலை உயர்தர மாண மாணவிகள் 5 கிலோ மீற்றர் தூரமும் இந்த மரதன் ஓட்டப் போட்டியின் போது ஓட வேண்டும்.
மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவரும் தங்கள் உடல்நிலையை உறுதி செய்து கொள்ளும் வகையில் அவ்வப் பிரதேசங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட அரசாங்க வைத்திய அதிகாரிகளிடமிருந்து வைத்திய அத்தாட்சிப் பத்திரத்தினை பெற்றுக் கொள் வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

பொத்துவில் பிரதேசத்தல் வாழும் தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்களின் எதிர்கால கல்வியினை அபிவிருத்தி செய்யும் வகையிலும் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிக்கரம் நீட்டும் வகையிலும் இந்த அரை மரதன் ஓட்டப் போட்டியின் மூலம் கிடைக்கும் நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியம் அதன் தலைவர் எம்.எச்.எம்.ஜமாஹிம் தலைமையில் அறுகம்பை நியு ஸ்டார் உல்லாச விடுதியில் கடந்த புதன்கிழமை ( 13 ) இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் ஒன்றியத்தின் செயலாளர் டாக்டர் இஸட்.எம்.ஹிஜாத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இப் போட்டிக்கு பல அனுசரணையாளர் நிதி வழங்க முன்வந்துள்ள நிலையில் இலங்கை கிறிக்கட் அணியைச் சேர்ந்த சாமர கப்புக்கெதர , தம்பிக்க பிரசாத் , ஜெப்ரி வெந்தசி ஆகியோருடன் பொத்துவில் பிரசேத்தின் பெயரை உலகறியச் செய்த ஓட்ட வீர் அஸ்றப் லத்தீப் ஆகியோர் கலந்து கொண்டு சிறிது தூரம் மரதன் ஓட்ட வீர வீராங்கனைகளுடன் மரதன் ஓட்டப் போட்டியிலும் கலந்தும் கொள்ளவுள்ளனர்.

இப் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடம் பெறுபவருக்கு 30,000 ரூபாவும் , இரண்டாம் இடம பெறுபவருக்கு 20,000 ரூபாவும் , மூன்றாம் இடம பெறுபவருக்கு 15,000 ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படுவதுடன் போட்டியில் கலந்து கொண்டு இறுதிவரை ஓடி முடிப்பவர்களுக்கு ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ள மேற்படி மரதன் ஓட்டப் போட்டியினை கண்டு களிப்பதற்காக ஏற்கனவே பலர் அறுகம்பை பிரதேசத்திலுள்ள உல்லாச விடுதிகளில் தங்கி உள்ளதாக பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

பத்திரிகையாளர் மகாநாட்டில் அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் எம்.எச்.எம்.ஜமாஹிம் , செயலாளர் டாக்டர் இஸட்.எம்.ஹாஜித் , பொருளாளர் .அப்துல்லாஹ் , ஆலோசகர் எம்.எஸ்.ஏ.நஸார் , அமைப்பாளர் ஏ.ஜீ.அமீர் அலி , உறுப்பினரான ஏ.ஜி.அமானுள்ளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments: