Thursday 29 May 2014

கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி

ஆலையடிவேம்பில் சேவையாற்றிவரும் களம் பொதுத்தொண்டு அமைப்பினால் நடாத்தப்பட்டுவருகின்ற பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் சிறார்களதும் அவர்களது ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்களதும் முயற்சியில் உருவாக்கப்பட்ட கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி இன்று, 05-05-2014, திங்கட்கிழமை காலை ஆலையடிவேம்பு, கோபால் கடை வீதியிலுள்ள கனகாம்பிகை பாலர் பாடசாலையில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இவ்வாரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளருடன் திருக்கோவில் கல்வி வலய முன்பள்ளிகளுக்கான உதவிப் பணிப்பாளர் எஸ்.தர்மபாலன், ஆலையடிவேம்பு அரசுசாரா அமைப்புக்களின் இணையத் தலைவர் வி.பரமசிங்கம், ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி திருமதி. காந்திமதி ஜோய் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இக்கண்காட்சியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் களம் அமைப்பினால் நிருவகிக்கப்பட்டுவரும் விவேகானந்தா, கனகாம்பிகை, கனகதுர்க்கா, விநாயகர், மறுமலர்ச்சி, அம்பாள் ஆகிய பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் சிறார்கள், அவர்களது பெற்றோர்கள், கற்பிக்கும் ஆசிரியைகள் ஆகியோரது ஒன்றிணைந்த முயற்சிகளில் உருவாக்கப்பட்ட கைப்பணிப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் அங்குரார்ப்பண நிகழ்வைத் தொடர்ந்து அதிதிகளும் பொதுமக்களும் அவற்றைப் பார்வையிட்டனர்.

இன்றுமுதல் எதிர்வரும் 07-05-2014, புதன்கிழமைவரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இக்கண்காட்சியினைக் கண்டுகளிப்பதற்காக அனைத்து சிறுவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அன்புடன் அழைப்பதாக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி திருமதி. காந்திமதி ஜோய் தெரிவித்தார்.

No comments: