Wednesday 15 December 2021

மார்கழியில் திருவெம்பாவை ஆரம்பம் (11)

ஆர் நடராஜன்  0777 514279

மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாகவும், அதன் தன்மையை உணர்வதற்குள், மிக வேகமானதாகவும், ஆழ்த்திவிடுவதாகவும் உள்ள படுசுழியான தன் தன்மையைக் காட்டிவிடுகிறது. அதுபோல மயக்கத்தில், செல்லும் திசை தெரியாது ஆழச் செல்லும் உயிர்களை உணர்வூட்டி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவன திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.


மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும். "பாவை நோன்பு" " கார்த் யாயனி விரதம் என்று அழைக்கப்படும் சிவ விரதமாகவும், வைணவ விரதமாகவும் இது போற்றப்படும். 


பனி நிறைந்த மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பொழுது புலர்வதன் முன் எழுந்து , ஒருவரையொருவர் துயிலெழுப்பி கூட்டமாகச் சென்று பொய்கையில் நீராடி இறைவன் புகழ்பாடி வழிபடுவதை திருவெம்பாவைப் பாடல்களில் குறிப்பிடுகின்றார். திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை.


திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது.


சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது



திருவெம்பாவை மூலம் மணிவாசகப் பெருமான் நமக்குக் கூறும் உறுதியான அறவுரை மற்றொன்றும் உண்டு. இப்பாடல்களில் வரும் பெண்கள் என்ன செய்கிறார்கள் ? ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் உய்யும் வகை உய்ந்த அடியார்கள். அவர் தம் மனத்து இல்லம் தோறும் இறைவன் எழுந்தருளி இருப்பதால் என்ன குறையும் இல்லாதவர்கள். எனினும் ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதியைச் சுமக்கின்ற பரந்த மனமுடைய அவர்கள், இந்தப் பேரின்பப் பெருவழிக்கு வராது விடுபட்டுப் போன அக்கம்பக்கத்திலுள்ள தம் எல்லாத் தோழிகளின் துயில் மயக்கத்தைத் தெளிவித்து, அவருடைய உறுதியின்மையால் தாம் தளர்வுறாது, இறைவன் பால் ஒருமைப்பட்ட தம் மனத்தால் அவரையும் கண்ணுக்கினிய கருணைக் கடலான சிவபெருமானைப் பாடத் தேற்றுகின்றனர். இதுவே நமது இன்றைய தேவை. நாம் உய்யும் நெறியை உறுதியாகப் பற்றவேண்டும். அதே நேரத்தில் அவ்வாறு பற்றுவதால் நாம் பெறும் இன்பத்தை அண்டை அயலவர் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம், "எம்பிரான் மூலபண்டாரம் வழங்குகின்றான்; வந்து முந்துமினே !" என அறைகூவி அழைத்தும், அறியாதவருடைய இல்லங்களுக்கே சென்று அவர் வாழ்வையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும்.

பெருமானின் திருவருளால் அழியாத இன்பம் பெற்ற நம் ஆன்றொர்கள் செய்தது அது; நாமும் செய்யத் தக்கதும் வேண்டுவதும் அதுவே. "எது எமைப் பணிகொளும் ஆறு ? அது கேட்போம்." எனத் தலை நிற்போம்.


மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது. திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வணங்குகின்றனர்.

மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர்.

கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர்.
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) திருப்பாவையும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.

திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது. திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழி மாதம முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது. இந்த பாடல்களை நமது வாசகர்களுக்காக 30 நாளும் அளிக்கிறோம்.


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை விரதத்தை, சைவ சமயத்தவர்கள் மார்கழிமாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் "நோன்பை" ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று  நிறைவு செய்வார்கள். வைணவ சமயத்தவர்கள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குகின்றார்கள்.

மார்கழி மாதம் தஷிண அயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (புலர்வதன் முன்) வைகறையில் சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. வைகறை காலத்தைப்பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.

மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானை குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இதுவாகும். சைவர்களுக்கு மார்கழி மாதம்; திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப் பெறுகின்றது.

மார்கழி மாதத்தில், பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். மார்கழியில் நோற்பதால் "மார்கழி நோன்பு" என்றும், கன்னிப்பெண்களால் "பாவை" அமைத்து நோற்கப்படுவதாலும் "பாவை நோன்பு" என்றும் அழைக்கப்பெறுகின்றது.

சைவகன்னியர்கள்; பனி நிறைந்த மார்கழி மாதத்தில் பொழுது புலர்வதன் முன் எழுந்து, மற்ற தோழியர்களையும் (பெண்களையும்) எழுப்பி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே"என அழைத்து ஆற்றங்கரை சென்று, "சீதப் புனல் ஆடி சிற்றம்பலம் பாடி" ஆலயம் சென்று "விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உருகி  உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆக" அருள் தருவாய் என வேண்டுவர்.

வைணவ கன்னியர்களும் பொழுது புலர்வதன் முன் எழுந்து தமது தோழியர்களை அழைது ஆற்றங்கரை சென்று, சீதப் புனல்ஆடி அங்குள்ள  மணலினால் "பாவை" போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை கௌரி தேவியாக ஆவகணம் செய்து பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி பாடித் துதித்து பின் ஆலயம் சென்று வழிபட்டுகின்றனர்.

மணிவாசகப் பெருமான் பாடியருளிய ”திருவெம்பாவையும்”, ”ஆண்டாள் அருளிய திருப்பாவையும்”மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டவை. மார்கழி நோன்பு, சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்துவரும் நோன்பு என்பதனை பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகைஎன்னும் சங்ககால நூல்களால் அறியலாம்.

மணமாகாத பெண்கள் இந்த நோன்பை நோற்கின்றனர். ''அம்பா ஆடல்'' என்பதற்குத் தாயுடன் ஆடுதல் என்று பொருள். பாவை போல ஒரு பெண் பிள்ளையின்-தாய் கடவுளின் வடிவை அமைத்து வணங்கி வழிப்பட்டுப் பின் நீராடுவர். பாவை நோன்பு நோற்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர் என்பது நம்பிக்கை.  இது நாட்டில் மழை பெய்ய நோற்கும் நோன்பு என்று கூட கொண்டனர். கற்பே மழைத் தரும் என்று நம்பிய தமிழுலகம் இக்கன்னியர் நோன்பை மழைக்கென நோற்கும் நோன்பாகவும் கருதினர். பின்னர் இந்த இரண்டையும் வேறு என பிரிப்பதும் வழக்கமாகிவிட்டது

பெண்கள் அழகை பெற விரும்பினால் செய்யும் நோன்பு ஒன்றை விஷ்ணு தருமோத்த புராணம்கூறுகிறது. இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடைபெறும் என்றும் அப்போது அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும் அந்தப் புராணம் கூறுகிறது. அம்பா ஆடல் என்பதற்கும் உலகத் தாயின் வடிவைப் பாவையாக அமைத்து வழிபடுவது என்று பொருள் கூறலாம். .

வைணவப் பெண்கள் கண்ணனின் நெறிவாழும் ஆடவரையே கணவனாகப் பெறவும், சைவ மங்கையர் சிவநெறியில் தோய்ந்த உள்ளம் உடைய ஆடவரையே கணவராகப் பெறவும் வேண்டிச் சிறப்பாக இந்நோன்பை மேற்கொள்கின்றனர்.

மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது பாடியருளிய "திருவெம்பாவை"யும்,  பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் பாடியருளிய பாவைப்பாட்டாகிய "திருப்பாவை" யும், பாவைப்பாட்டுக்களில் சிறந்தவையாகும். கன்னிப் பெண்கள் தோழியரை நீராட வரும்படி அழைக்கும் போதும், தோழியருடன் நீராடும் போதும் இப் பாவைப் பாடல்களை பாடி ஆடுகின்றனர்.

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் உட்பட எல்லா அம்பாள் ஆலயங்களிலும், சிவன் ஆலயங்களிலும் அதிகாலையில் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழிச்சி 10 பாடல்களும், திருவெம்பாவை 20 பாடல்களும் பாடப்பெறுகின்றன. வைணவ ஆலயங்களில் ஆண்டாள் பாடியருளிய திருப்பாவை 30 பாடல்களும் பாடப்பெறுகின்றன. 

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் இந் நோன்பு வருடாவருடம் வெகு சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றது. அதிகாலை 4 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி நடைபேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

புராணக் கதைகள்:
கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும். திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் 
தேரில் ஆரோகணித்து வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க இலங்கை போன்ற நாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இன்றும் செல்வது வழக்கம். சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" ன்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.

சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களி படைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.

தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களில் இல்லங்களுக்குச் சென்றார். முனிவர்களின் பத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான் தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார் மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே "ஆர்த்திரா தரிசனம்" என்று சொல்லப்படுகின்றது.

மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்

(சிலர் பச்சரிசி வறுக்காமல் தண்ணீரில் ஊற வைத்து பின் உலர்த்தி அதை மிக்க்சியில் அரைத்து வெல்ல பாகில் சேர்ப்பர் . பச்சை பயிரை வறுத்து முழுதாகவே பாகில் சேர்ப்பதும் உண்டு ). பரமனுக்கு உரிய பதிகங்களை பாடிக்கொண்டு , செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் . முதல் 

முதல் சேந்தனாரின் மனைவி தான் சிவன் அடியாராக வந்த ஈசனுக்கு இந்த களி செய்து படைத்தார்கள் அது முதல் இவ்வழக்கம் உள்ளது. மறுநாள் சேந்தனார் தில்லையில் பரமனை தரிசித்த பொது அவரது திரு உதட்டில் களி இருக்க கண்டு நெகிழ்ந்து போனார்.

நாமும் இறை அன்புடன் களி செய்து படைத்தது அடியார்களுக்கு பிரசாதமாக தருவோம். பரமன் அவசியம் ஏற்பார். திருவாதிரை களி பிரசாதமாக உட்கொள்பவர்கள் நரகம் செல மாட்டார்கள் என்பது மரபு. 

அதனால் தான் "திருவாதிரைக்கு ஒரு வாய் களி" என்ற மொழி ஏற்பட்டது. அதிகாலை எழுந்து இல்லத்தில் எழுந்தருளி உள்ள பரமனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து, திருவெம்பாவை. திருப்பள்ளி எழுச்சி பாடி, களி நிவேதனம் செய்வோம். 

அனந்த நடராஜ பெருமானின் திருவருளால் நம் வாழ்விலும் ஆனந்தம் பெருகும்haran

No comments: