Saturday 11 July 2020

புகைப்பட ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்


புகைப்பட ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்



ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து இன்று சனிக்கிழமை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


கொழும்பில் ஒரு வழக்கு தொடர்பிலான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவலர்த்தன முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்.

மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஊடக சங்கத்தின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள், ஊடகங்களுக்கெதிரான நெருக்குதல்கள் தொடர்பிலான கோசங்களை எழுப்பியதுடன், ஊடக சுதந்திரத்தினை வேண்டிய வகையில் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஊடகங்கள் காலங்காலமாக நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டே தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறான நெருக்கடிகளற்ற ஒரு ஊடகக் கலாசாரம் உலகளவில் அமைந்துவிடவேண்டுமென்பதில் ஊடகக்காரர்களும், ஊடகங்களும், பல்வேறு அமைப்புகளும், ஆர்வலர்களும் முயன்று கொண்டிருந்தாலும் அது சாத்தியமற்றதாகவே அமைந்து வருகிறது.

இச் சம்பவம், தற்போதைய நேரத்தில் அனைத்து ஊடகங்களின் பார்வையையும் பெற்றுள்ளதுடன், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படுவதற்கு அல்லது தவிர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை அனைவரும் மேற்கொண்டாக வேண்டிய தேவையையும் உணர்த்தியுள்ளது.

அந்தவகையில் கொழும்பில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாத வண்ணமான ஒரு சிறப்பான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படுவதுடன், அச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படுவதும் முக்கியமாகும்.

ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்குக் குரல் கொடுப்பதும் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவதனைத் தவிர்ப்பதற்காக பாடுபடுவதும் ஊடகம் சார் அக்கறையுள்ள ஒவ்வொருவரதும் பணியும் கடமையுமாகும் என்று கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

haran

No comments: