Wednesday 4 April 2018

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற முன்பிள்ளைப் பருவ சிறார்களின் சிந்தனைக் காட்சியும் பரிசளிப்பு வைபவமும்



பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையோடு தேசிய சிறுவர் செயலகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளி மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்பள்ளி மட்டங்களில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 70 மாணவர்களிலிருந்து இவ்வாண்டுக்கான இறுதி வெற்றியாளர்களைத் தெரிவுசெய்யும் வகையிலான சித்திரப் போட்டியும் பரிசளிப்பு வைபவமும் நேற்று (03) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப் பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வுகளுக்குப் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக கணக்காளர் கே.கேசகன், மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

முதலில் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சித்திரம் வரையும் போட்டியில் 24 முன்பள்ளிகளிலிருந்து கலந்துகொண்ட 70 மாணவர்களில் 3 மாணவர்கள் அதிதிகள் குழுவினரால் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். இவர்களது சித்திரங்கள் மாவட்ட ரீதியில் மிக விரைவில் இடம்பெறவுள்ள கண்காட்சி நிகழ்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், போட்டியாளர்கள் மூவரும் அதிதிகளின் விசேட வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றனர். அத்துடன் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுப் பொதிகளும் சான்றிதழ்களும் அதிதிகளால் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளிக் கல்வி அபிவிருத்தி வரலாற்றில் இவ்வாறான ஒரு போட்டி நிகழ்ச்சி கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக நான்காவது வருடமாக நடாத்தப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
















No comments: