Friday 2 February 2018

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா




ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் பொங்கல் விழா – 2018 நிகழ்வு இன்று (02) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் தமிழர் பாரம்பரிய விழுமியங்களோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளுக்கு ஆன்மீக அதிதியாக தம்பட்டை நித்தியானந்தா தபோவனத்தின் ஸ்தாபக குரு வணக்கத்துக்குரிய நித்தியானந்தாஜி மகராஜ் சுவாமிகள் கலந்துகொண்டு அருட் தியானம் மற்றும் ஆன்மீகப் பிரசங்கங்களை நிகழ்த்தி விழாவைச் சிறப்பித்திருந்துடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலாசார உடையணிந்து, தமது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் குழந்தைகளோடு கலந்துகொண்டிருந்தனர்.

புது நெல் வைத்துக் கோலமிட்டு, வாழை, தென்னை, மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் இளங்காலை சுப நேரத்தில் பொங்கல் வைத்தலுடன் பிரதேச செயலாளரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட நிகழ்வுகளில் தொடர்ந்து உழவுக்கு உதவும் காளைகளை மாலையிட்டு அலங்கரித்து, அவற்றுக்கு உணவூட்டி, வணங்கி வழிபட்டு, தமிழர் கலாசார உடையணிந்த உத்தியோகத்தர்கள் பயணித்த பாரம்பரியத் தொன்மைமிக்க மாட்டுவண்டிச் சவாரியும் அங்கு இடம்பெற்றிருந்தது.

வணக்கத்துக்குரிய நித்தியானந்தாஜி மகராஜ் சுவாமிகளின் வருகையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான பொங்கல் விழா சிறப்புப் பூஜையை ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் கோயில் கொண்டு அடியவர்க்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நிசாந்தன் சர்மா சிறப்புற நடாத்தியிருந்தார்.

தொடர்ந்து பிரதேச செயலாளரது தலைமையுரையும், நித்தியானந்தாஜி மகராஜ் சுவாமிகளுக்கான பாத பூஜையும் அங்கு இடம்பெற்றதோடு, சுவாமிகளால் முன்னெடுக்கப்பட்ட தியான சங்கல்ப்பமும், ஆன்மீகப் பிரசங்கமும் அனைவரையும் கவர்ந்திருந்தன.

குறித்த விழா நிறைவு பெற்றதும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வணக்கத்துக்குரிய நித்தியானந்தாஜி மகராஜ் சுவாமிகளின் ஆசிகளையும் அங்கு பெற்றுக்கொண்டனர்.




































No comments: