Sunday 24 September 2023

போதை பொருள் பாவனையை ஒழிப்பதற்கு கூடுதல் உத்வேகத்துடன் செயற்படுவோம்

 த. தர்மேந்திரா 


போதை பொருள் பாவனையை இல்லாது ஒழிப்பதற்கு புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனம் கூடுதல் உத்வேகத்துடன் எதிர்காலத்தில் பாடுபடும் என்று இந்நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்டமிடல் அதிகாரியும், வடக்கு, கிழக்கு, மலையக பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளின் தலைவருமான வி. சு. விஜயலாதன் தெரிவித்தார்.

அம்பாறை கல்முனை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசத்தின் வேண்டுகோளை புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பேராளர்கள் குழு இவருடைய தலைமையில் அம்பாறை மாவட்டத்துக்கு  கடந்த வாரம் விஜயம் மேற்கொண்டது.

இதன்போது விஜயலாதன் எமக்கு வழங்கிய விசேட பேட்டி வருமாறு:

கேள்வி: புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனம் பற்றி கூறுங்கள்?

பதில்: - புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 07 வருடங்களாக இனம், மதம், மொழி உள்ளிட்ட பேதங்களுக்கு அப்பால் தேவை உடைய அனைத்து மக்களுக்கும் மனிதநேயத்தின் பெயரால் மகத்தான சேவைகளை முன்னின்று மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றில் ஏராளமான பல வேலை திட்டங்களை முன்னெடுத்து மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதில் பாரிய வெற்றிகளை கண்டிருக்கின்றோம். கிளிநொச்சியில் பாரதிபுரத்தை தலைமையகமாக கொண்டு புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனம் செயற்படுகிறது.

ஆனால் புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட உறவுகளை பராமரிப்பதற்காகவே ஆகும். குறிப்பாக எத்தனையோ இளையோர்கள் அவர்களுடைய எதிர்காலத்தை தியாகம் செய்து உள்ளனர். இவர்களுக்கு புதிய வாழ்வை ஆரம்பித்து கொடுக்க வேண்டும் என்று புனிதவதி அம்மையாரின் சிந்தனையில் தோன்றிய எண்ணத்தின் செயல் வடிவமே இது ஆகும்.

கேள்வி: - புனிதவதி அம்மையார் குறித்து கூறுங்கள்?

பதில்: - புனிதவதி நடனேஸ்வரன் அம்மையார் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து சென்று வாழ்பவர். பெரிய கோடீஸ்வரி அல்லர். ஆனால் பரந்து விரிந்த மனம் கொண்டவர். கடின உழைப்பில் கிடைக்கின்ற பணத்தில் தாயக உறவுகளுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகின்றார். 

நான் குறிப்பிட்டு சொல்ல கூடிய ஒரு விடயம் அவருக்கு சொந்தமாக கார் கிடையாது. பஸ்ஸில்தான் பயணம் செய்கின்றார். கார் வாங்கி பயன்படுத்துகின்றபோது ஏற்பட கூடிய செலவுகளைக்கூட தாயக உறவுகளின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு பயன்படுத்த முடியும் என்பது இவரின் பற்றுறுதியான நிலைப்பாடு ஆகும்.

இவர் 2016 ஆம் ஆண்டு விடுமுறையில் தாயகத்துக்கு வந்தபோது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட இளையோர்களை வவுனியாவில் உள்ள வைகறை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை நிலையத்தில் சென்று பார்வையிட்டார்.

இப்படித்தான் பலரும் வருவார்கள், போவார்கள் என்று சொல்லி பாவம் அந்த இளயோர்கள் அலுத்து கொண்டார்கள். அம்மையார் எதுவும் சொல்லவில்லை. ஆனால் பிரித்தானியாவுக்கு திரும்பி சென்ற கையோடு புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை பிரசவித்தார். அவர் இதை வெறும் 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் 10/10/ 2016 ஆம் ஆண்டு தொடங்கினார்.

புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகரும், நிறைவேற்று பணிப்பாளருமான புனிதவதி அம்மையாரின் புனித சிந்தனையில்  இளையோர்களுக்கு புதிய வாழ்வு கிடைக்க தொடங்கியது. ஆரம்பத்தில் ஆண்களை மாத்திரம் அன்றி பெண்களையும் பராமரித்தோம். தற்போது 05 ஆண்களை பராமரித்து வருகின்றோம். 

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு உள்ள ஆண்களுக்காக புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவானத்தின் கதவுகள் இப்போதும் எப்போதும் திறந்து இருக்கின்றன. அவர்களுக்கான புதிய வாழ்வை அமைத்து தர அர்பணிப்புடன் காத்திருக்கின்றோம்.

கேள்வி: - புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் நீங்கள் இணைந்து கொண்டது எப்படி?

பதில்: - இது ஒரு நல்ல கேள்வி. இதற்கான பதிலை சொல்ல முன்னர் என்னை பற்றி சில வார்த்தைகளை நான் கூற வேண்டியும் உள்ளது. நான் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில்தான் இரு கண்களின் பார்வையையும் முழுமையாக இழந்தேன். எறிகணை வந்து விழுந்த சத்தம்தான் கேட்டது....

அதற்கு பின்னர் நான் முன்னெப்பொழுதும் நினைத்தே இராத புதிய வாழ்க்கை ஒன்றை ஆரம்பிக்க நேர்ந்தது. நான் தடுமாறியபோதெல்லாம் எனது குடும்பத்தினர் ஆக்கமும், ஊக்கமும் தந்தனர்.நான் படித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தெரிவானேன். சமூகவியலில் சிறப்பு கலைமாணி பட்டம் பெற்றேன்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவாக மழலையும் மறக்குமா? என்கிற கவிதை நூல் என்னால் எழுதி வெளியிடப்பட்டது. இதற்கான நிதி பங்களிப்பை புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கியது. இவ்வாறுதான் புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடனான உறவு ஆரம்பாகி அது இன்று என்னுடன் கலந்து நிற்கின்றது.

கேள்வி:- புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தற்போதைய வேலை திட்டங்கள் பற்றி கூறுங்கள்?

பதில்: - புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனம் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட உறவுகளை பொறுப்பேற்று பராமரிக்கின்ற சேவைக்கு அப்பால் இனம், மதம், மொழி கடந்து தேவை உடைய அனைத்து மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கும் உதவி செய்கின்ற வேலை திட்டங்களை மேற்கொண்டுதான் வருகின்றது. 

குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றில் ஏராளமான பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். கர்ப்பிணி பெண்களுக்கான சத்துணவு திட்டம் நாடளாவிய ரீதியில் எம்மால் மேற்கொள்ளப்பட்டது. இதே போல தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கு த்லா ஒரு இலட்சம் ரூபய் வாழ்வாதார மேம்பாட்டு நிதி வழங்கி இருக்கின்றோம். கொரோனா காலத்தில் உலர் உணவு நிவாரண பொதிகள் வழங்கி இருக்கின்றோம்.

நாம் கிழக்கு மாகாணத்துக்கு புதியவர்கள் அல்லர் என்பதை இந்த இடத்தில் அழுத்தி கூற விரும்புகின்றோம். அதே போல புலம்பெயர் தமிழ் மக்களும் கிழக்கு மாகாணத்தை நேசிக்கின்றார்கள், மதிக்கின்றார்கள். மூன்று மாவட்டங்களிலும் எமது வேலை திட்டங்களின் பயனாளிகள் உள்ளனர். ஆனால் எமது பேராளர்கள் குழு அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு வந்திருப்பது இதுவே முதல் தடவை ஆகும்.

புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் விவசாய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வீட்டு தோட்ட செய்கையாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அம்பாறை கல்முனை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் எஸ். லோகநாதன் கோரி இருந்தார். அவருடைய கோரிக்கையை நாம் பரிசீலித்தோம். 150 பயனாளிகளுக்கு தலா 15000 ரூபாய் பெறுமதியான ஊக்குவிப்பை வழங்க தீர்மானித்தோம். அதன் முதல் கட்ட நிதி கையளிப்பு நிகழ்வுகள்தான் எமது பங்கேற்புடன் நற்பிட்டிமுனை, காரைதீவு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றன.

எமது இவ்வேலை திட்டத்தின் வெற்றி எமது பயனாளிகளில் தங்கி உள்ளது. அவர்கள் ஊக்குவிப்புகளை பெற்று கொண்டு சும்மா இருந்து விட கூடாது. புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தன்னார்வ தொண்டர்களாக பல்கலைக்கழக மாணவர்கள் பல நூற்று கணக்கானோர் உள்ளனர். அவர்கள் கண்காணிப்பு கடமைகளை மேற்கொள்வார்கள். அதே போல சமாசத்தின் செயற்பாட்டாளர்கள், விவசாய உத்தியோகத்தர்கள் ஆகியோரும் எமக்கு பேருதவியாக உள்ளனர். அடுத்த கட்ட ஊக்குவிப்புகளை எழுந்தமானமாக தந்து விட மாட்டோம் என்பதை எமது பயனாளிகளுக்கு அன்பாக,அறிய தருகின்றோம்.

கேள்வி: - எமது மக்களுக்கு நீங்கள் கூற விரும்பும் விடயம் என்ன?

பதில்:- நான் குறிப்பாக பெற்றோர்களுக்கு கூறுகின்ற கண்டிப்பான ஆலோசனை என்னவென்றால் உங்கள் பிள்ளைகளை நெருக்கமாக கண்காணியுங்கள், அவர்களுடன் கூடுதல் நேரங்களை செலவு செய்யுங்கள் என்பதாகும். ஏனென்றால் பிள்ளைகள், இளையோர்கள் மத்தியில்  போதை பொருள் பாவனை பேராபத்தாக மாறி புற்றுநோய் போல் பரவி நிற்கின்றது. வடக்கு அளவுக்கு கிழக்கில் இப்பிரச்சினை பூதாகாரமாக இல்லை என்று நினைக்கின்றேன். ஆனால் பெற்றோர்கள் கூடுதல் விழிப்புடன் செயற்பட வேண்டி உள்ளது. போதை பொருள் அற்ற சமுதாயத்தை கட்டி எழுப்புவதில் புதிய வாழ்வு தன்னார்வ தொண்டு நிறுவனம் இன்னமும் அதிக சிரத்தையுடன் வருங்காலத்தில் வேலை திட்டங்களை மேற்கொள்ளும்.
haran

No comments: